Sunday, July 15, 2018

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கும் மரணதண்டனை வழங்க வேண்டும்


July 15, 2018

மரண தண்டனை அமுல்படுத்துவது குறித்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ள நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கும் தராதரம் பாராது மரண தண்டனை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்தார். அத்துடன் முன்னாள் அமைச்சர் ஒருவரும் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்ட தேசிய இளைஞர் சம்மேளனம் பெல்மதுளை கணேகம ரஜமஹா விகாரையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 17 பிரதேச செயலகப்பிரிவுகளில் தலா 07 பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் இச் சம்மேளனத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இளைஞர் மன்றத்தின் இரத்தினபுரி மற்றும் சப்ரகமுவ மாகாண அலுவலக அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந் நிகழ்வில் அவர் தொடர்ந்தது பேசுகையில்,

மரணதண்டனை அமுல் படுத்தப்படப் வேண்டுமென அரசாங்கம் தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட வேண்டுமெனக் கூறி இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இவ்வேளையில் சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் சிறுவர் கொலை ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இதனை முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது. ஆண்கள் வர்த்தகத்திலீடுபடுகின்றனர், பெண்கள் போதைப்பொருள் கடத்தலிலீடுபடுகின்றனர். சில தாய்மார்களும் ஈடுபடுவது கவலைக்குரிய விடயமாகும். இதனால் நாட்டில் மரண தண்டனை அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. இது குறித்து ஜனாதிபதி தீர்க்கமான முடிவு எடுப்பார். போதைப்பொருள் விற்பனையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.

இதனால் மரண தண்டனை குறித்து சிந்திக்கப்படுகிறது. தேசிய இளைஞர் மன்றத்தை உருவாக்கியவர் எமது கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ற போதிலும் நாம் அங்கே அரசியல் செய்யவில்லை ஆனால் கடந்த காலத்தில் நீல படையணி என்ற பெயரில் நாட்டின் எதிர்கால இளைஞர்களின் எதிரகாலத்தை வீண்டித்ததே பிரதான செயற்பாடாக இருந்தது என்றும் அமைச்சர் தலதா தெரிவித்தா்ர.

இரத்தினபுரி தினகரன் நிருபர்

0 comments:

Post a Comment