Saturday, July 28, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இவைபற்றியெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?

July 28.2018

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தர் ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டு, இன்று சனிக்கிழமை நேர்முகத் தேர்வும் வாக்கெடுப்பும் நடைபெற்றமை குறித்து அறிவோம்.

உபவேந்தர் பதவிக்காக 19 பேர் விண்ணப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவு குறித்து பலரும் ஆர்வமான உள்ளபோதும், உபவேந்தர் ஒருவர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார் என்பது குறித்து நம்மில் பலருக்கு என்னவெல்லாம் என்கிற கேள்விகளும் உள்ளன.

எனவே, அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பல்கலைக்கழகம் ஒன்றுக்கு உபவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உரியதாகும்.

அதனை இலகுபடுத்தும் வகையில், உபவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்த மூவரைத் தெரிவு செய்து, அவர்களின் பெயர் விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தகுதி வாய்ந்த மூவரை எவ்வாறு தெரிவு செய்வது?

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினர்கள் இருவரும், ஆளுகை சபை உறுப்பினர்கள் 16 பேரும் என, மொத்தம் 18 உறுப்பினர்களுக்கு, புதிய உபவேந்தர் பதவிக்காக போட்டியிடுவோரை தெரிவு செய்யும் பொருட்டு, வாக்களிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி 18 பேருக்கும் தலா மூன்று வாக்குகள் உள்ளன. உபவேந்தர் பதவிக்கு போட்டியிடும் மூவருக்கு, அந்த வாக்குகளை அவர்கள் வழங்க முடியும்.

உபவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் ஒவ்வொருவரின் தகைமை, ஆளுமை மற்றும் பல்கலைக்கழகத்தை முன்கொண்டு செல்வதற்கான அவர்களின் திட்டம் ஆகியவற்றை மனதில் கொண்டு, வாக்களிக்கப்படும்.

இருந்தபோதும், அரசியல் கட்சிகளின் பின்புலங்களும், இந்த வாக்கெடுப்பில் ஆதிக்கம் செலுத்துவதுண்டு.

எவ்வாறென்று பார்ப்போமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக ஆளுகை சபைக்குரிய 16 உறுப்பினர்களில் 06 பேர் மட்டுமே, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களாவர். மரபு ரீதியாக பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் ஆளுகை சபைக்கு தெரிவாவார்கள். ஏனைய 10 உறுப்பினர்களும், அரசியல் பின்புலத்தின் அடிப்படையில்,  பல்கலைக்கழகத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

எனவே, உபவேந்தர் தெரிவுக்கான வாக்களிப்பின்போது, அரசியலும் தனது பங்குக்கு விளையாடும்  என்பதை மறுக்க முடியாது.

அதிக வாக்குப் பெற்றவரைத்தான் நியமிக்க வேண்டுமா?

இந்த நிலையிலேயே தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரைத் தெரிவு செய்யும் பொருட்டு, இன்று வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் 13 வாக்குகளையும், கலாநிதி றமீஸ்  அபூபக்கர் 11 வாக்குகளையும், கலாநிதி ஏ.எம். ரஸ்மி 10 வாக்குகளையும் பெற்று, முதல் மூன்று இடங்களுக்குத் தெரிவாகியுள்ளனர்.

இந்த மூவரிலிருந்து ஒருவரை – புதிய உபவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்வார்.

இங்கு ஒரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. அதாவது, அதிக வாக்குகளைப் பெற்றவர்தான் உபவேந்தராக நியமிக்கப்பட வேண்டும் என்று கிடையாது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான உபவேந்தர் தெரிவின் போது,  அதிக வாக்குகளை (17) பெற்ற பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜாவை தவிர்த்து விட்டு, அவரை விடவும் குறைவான வாக்குகளைப் பெற்ற – பேராசிரியர் விக்னேஸ்வரனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உபவேந்தராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்று, குறைந்த வாக்குகளைப் பெற்ற விண்ணப்பதாரிகள், உபவேந்தர்களாக நியமிக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன.

அந்தவகையில், தென்கிழக்குப் பல்கலைக்கழத்துக்கான புதிய உபவேந்தர் நியமனத்தில் கூட, திடீர் திருப்பங்களும் – ஆச்சரியங்களும் நிகழக் கூடும்.

கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

மப்றூக்
புதிது

0 comments:

Post a Comment