Wednesday, January 16, 2019

ஜனாதிபதி, பிரதமர், கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

January 17, 2019



மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துவதற்குத் தேவையான தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதமொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணி அப்டேட்...


  January 16, 2019

கொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

துறைமுக நகரின் எதிர்கால அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.

துறைமுக  நகரத்திற்காக கடலை நிரப்பும் நடவடிக்கையின் காரணமாக, சில பிரதேசங்களில் கடற்கரைகள் அரிப்புக்குள்ளாவதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க இதன் போது தெரிவித்த வேளை   துறைமுக நகரத்தின் நிர்மானப்பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்தின் ஊடாகவே குறித்த பகுதிகளை புனரமைக்க தீர்மானித்துள்ளதாக சீன தூதுவர்  Cheng Xueyunan பதில் அளித்துள்ளார்.

நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளதனை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்கான நிகழ்வு துறைமுக நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி நம்பிக்கை நிதிய காரியாலயம் புதிய இடத்துக்கு


January 16, 2019

ஜனாதிபதி நம்பிக்கை நிதியம் அமைந்துள்ள காரியாலயம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தற்பொழுது கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தை, ரேணுகா கட்டிடத் தொகுதியில் இல.41 இல் அமைந்துள்ள இந்தக் காரியாலயம் எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய இடத்துக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய காரியாலயம் கொழும்பு 10, டீ.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத் தொகுதியின் 03 ஆவது மாடி, இல. 35 இல்  அமையப் பெற்றுள்ளது.
ஜனாதிபதி நம்பிக்கை நிதியத்துக்கு வருகை தருபவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு புதிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. 


சென்ற வருடம் மட்டும் இலங்கை போக்குவரத்தில் இணைந்து கொண்ட வாகனங்கள் இத்தனை இலட்சங்களா...?



January 16, 2019

2018 ஆம் வருடத்தில் புதிதாக அதிகளவான  வாகனங்கள், மோட்டார் ​வாகன திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவை   4 இலட்சத்து 80,799 ஆகும் .

இதற்கமைய கடந்த வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டில் மொத்தமாக 7,727,921 ( 77 இலட்சத்து 27,921)   வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ( நாட்டு மக்கள் தொகை சுமார்  2 கோடி)

கடந்த 2017 ஆம் ஆண்டில் 4,516,503 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 29,146 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாய் மீதும் பாலியல் துஷ்பிரயோகம் செய்து நாயை கொடூரமாக கொலை செய்த 50 வயது நபர் கைது.!

16.01.2019

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம்
பலாங்கொடை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்காட - மஸ்சென்ன பகுதியில் இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உரிமையாளர் வீட்டில் நாய் இல்லாத நிலையில் அதனை தேடிய போது  அயல் வீட்டில் இருந்து நாயின் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நாய் அங்கிருந்து மீட்கப்பட்டு மிருக வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்ட போதும் அது உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட
இந்நிலையில், 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர் நாயினை துஷ்பிரயோகம் செய்த பின்னர் அதனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

.

அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி, U.L.முஹம்மது றெளபீக் என்பவர் 40 நாள் ஜமாஅத் சென்று ரயிலுடன் மோதி வபாத்தானார்!


16.01.2019

அக்கரைப்பற்று-06ஆம் குறிச்சி, ஆயிஷா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த U.L.முஹம்மது றெளபீக் என்பவர் இன்று (16) புதன்கிழமை காலை கொழும்பில்  காலமானார்,

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

இவர் அக்கரைப்பற்றிலிருந்து 40நாள் ஜமாஅத் சென்று ஜமாஅத் காலப் பகுதியை முடித்துவிட்டு இன்று காலை ஊருக்கு வருவதற்காக மருதானை ரயில்வே நிலையத்திற்கு வந்த போது அங்கே ரயிலுடன் மோதி வபாத்தானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி
கல்முனைடுடே

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடும் தினம் அறிவிப்பு


January 16, 2019

கடந்த வருட உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் விபரம் மே மாதத்தின் இறுதியில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள்பரிசீலனை கல்வியமைச்சினால் வௌியிடப்பட்ட பின்னர் வெட்டுப் புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.

மீள்பரிசீலனை பெறுபேறு மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் தயாரிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2018ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 15, 2019

சுற்றுலாப் பயணிகளுக்கு E – ticket அறிமுகம்

January 16, 2019
இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இணையத்தளமூலமான நுழைவாயில் அனுமதிக்கான சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, அஜித் பி பெரேரா ஆகியோர் தலைமையில் இன்று இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
ஈ-நுழைவாயில் திட்டத்தின் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலகுவாக தேசிய பூங்காவை பார்ப்பதற்கான வசதி கிட்டும். முதல் முறையாக வில்பத்து தேசிய பூங்காவுக்காக இந்த இணையத்தளம் மூலமான அனுமதிச் சீட்டு நடைமுறை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் இன்று

January 16, 2019

நூற்றுக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தற்போது நிலவும் வெற்றிடங்களுக்கு, தலைவர்களை நியமிப்பது குறித்த இறுதி கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் விசேட குழுவிற்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கும் இடையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலின் பின்னர் அரச நிறுவனங்களின் தலைவர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை அடுத்து, அமைச்சுக்களின் கீழ்வரும் அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிப்பதில் தற்போது வரை இழுபறிநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் கேட்டு உயர் நீதிமன்றம் செல்ல மஹிந்த குழு தீர்மானம்


January 16, 2019

மாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

வட மத்திய, சப்ரகமுவ, ஊவா ஆகிய மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. தமது கட்சி தேர்தல் வேண்டாம் என்பதற்கு நீதிமன்றம் செல்லவில்லையெனவும், தேர்தலை நடாத்துமாறு கோரியே நீதிமன்றம் செல்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயம், 6 உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்து

January 16, 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (15) பிலிப்பைன்ஸ் பயணமாகியுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது 6 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடேர்ட் (Rodrigo Duterte) விற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று (16) இடம்பெறவுள்ளது.

புதிதாக அறிமுகம் செய்த காபன் வரியை அரசாங்கம் நீக்க வேண்டும்- தனியார் பஸ் சங்கம்

January 16, 2019

காபன் வரி அறவிடும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை உடன் மாற்றிக் கொள்ள வேண்டும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அரசாங்கம் இதுவரையில் அறிமுகம் செய்த புதிய விடயங்களில் பாரிய பிரச்சினையுள்ளது இதேபோன்ற ஒரு அம்சமாகவே இந்த காபன் வரி காணப்படுகின்றது.

எரிபொருள் சூத்திரம் என்று ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. அதில் இந்த வரியை சேர்த்திருக்கலாம்.
தனியாக காபன் வரி என்ற ஒன்று அவசியமற்றதாகும். வீட்டில் பயணங்களுக்கு பயன்படுத்தாது நிறுத்தி வைத்துள்ள வாகனங்களுக்கும் இந்த வரியை அறவிடுவது நியாயமான ஒன்றா? என்பதை அரசாங்கத்துக்கு  இவ்வரி தொடர்பில் ஆலோசனை வழங்கிய அதிகாரிகள் கருத்தில் கொள்ளாதது ஏன் எனவும் அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – மஹிந்த தீர்மானம்!


January 16, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் சுதந்திர கட்சி மற்றும் பெரமுன கட்சிகளின் தலைவர்கள் ‘கை’ அல்லது ‘மொட்டு’ தவிர வேறு ஒரு சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் முழு ஆதரவு இருந்தால் ஜனாதிபதி சிறிசேனவை ஆதரிப்பேன் என ஜனாதிபதியின் சகோதரனான டட்லி சிறிசேனவிடம் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்றும் ஸ்ரீ.ல.சு.க.வின் 4.2 மில்லியன் வாக்குகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் 1.5 மில்லியன் வாக்குகள் ஆகியவற்றுடன் அவரது வெற்றி நிச்சயம் எனவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் விசாரிவில் நடக்க கூடும் என்று ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியே வேட்பாளர் – மஹிந்த தீர்மானம்!

January 16, 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் சுதந்திர கட்சி மற்றும் பெரமுன கட்சிகளின் தலைவர்கள் ‘கை’ அல்லது ‘மொட்டு’ தவிர வேறு ஒரு சின்னத்தின் கீழ் ஒரு கூட்டணியை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரின் முழு ஆதரவு இருந்தால் ஜனாதிபதி சிறிசேனவை ஆதரிப்பேன் என ஜனாதிபதியின் சகோதரனான டட்லி சிறிசேனவிடம் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிடுவார் என்றும் ஸ்ரீ.ல.சு.க.வின் 4.2 மில்லியன் வாக்குகள் மற்றும் பொதுஜன பெரமுனவின் 1.5 மில்லியன் வாக்குகள் ஆகியவற்றுடன் அவரது வெற்றி நிச்சயம் எனவும் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தேர்தல் விசாரிவில் நடக்க கூடும் என்று ஜனாதிபதி மைத்திரி தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஜா (சக்தி) ஊடகவலையமைப்பின் பணிப்பாளருக்கு காத்தான்குடி மீடியா போரம் எழுதும் பகிரங்க மடல்



16.01.2019

பணிப்பாளர்
மகாராஜா (சக்தி) ஊடக வலையமைப்பு
கொழும்பு
அன்பின் ஐயா

இந்த நாடு பன்மைத்துவமிக்க பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களையும் சிங்களம் தமிழ்; ஆகிய பிரதான மொழிகளையும் கொண்டுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள்.
இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக தங்களது ஊடகவலையமைப்பு செயற்படுகின்றது என்று பெருமையாக நீங்கள் கூறிக் கொண்டாலும் ஒரு தலைப்பட்சமாக ஒரு சமூகத்தின் குரலாகவே உங்களது ஊடகம் செயற்படுகின்றது என்பதே உண்மையாகும்.

தமிழ் பேசும் மக்களின் ஊடகமாக நீங்கள் மார்தட்டி எத்தனை தடவைகள் கூறினாலும் உங்களுக்கு என்று இருக்கின்ற ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றீர்கள்.
நீங்கள் ஒளிபரப்பும் பல செய்திகள் இந்த நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை சீண்டிப்பார்க்கின்ற செய்திகளாகவே முஸ்லிம் சமூகத்தினால் பார்க்கப்படுகின்றது.

இதனால் உங்களது தொலைக்காட்சி மற்றும் வானொலி மீது முஸ்லிம் சமூகம் மிகையான வெறுப்புணர்வை கொண்டுள்ளது என்பதை உங்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
நீங்கள் விரும்பும் ஒரு சமூகத்திற்கு எங்காவது ஒரு மூலையில் ஏதாவது சிறிய ஒரு சம்பவம் நடைபெற்றாலும் அதனை ஊதிப் பெருப்பித்து காண்பிக்கின்ற அதேவேளை முஸ்லிம் சமூகத்திற்கு கடந்த காலங்களில் நடந்த அநியாயங்களையும் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜக அடாவடித்தனங்களில் ஒன்றையேனும் ஒளிபரப்ப தவறி விட்டதுடன் முஸ்லிம் சமூகத்தின் இழப்புக்களையும் மறைத்து விட்டீர்கள்.

அந்த வகையில் கிழக்கு மாகாண புதிய ஆளுநருக்கு எதிராக கடந்த 11.01.2019 வெள்ளிக்கிழமையன்று ஹர்தால் ஒன்றுக்காக கிழக்கில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினம் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் எங்குமே ஹர்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. மாறாக முஸ்லிம்களின் கணிசமான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் முஸ்லிம் பிரதேசங்களில் அன்றைய தினம் இயல்பு நிலை காணப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் ஜும்ஆத் தொழுகைக்காக மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை வீடியோ படம் எடுத்து அதனை ஒளிரப்புச் செய்தீர்கள்.

பொய்யான செய்தியை ஒளிரப்புச் செய்து கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மக்களின் உணர்வை கொதிக்கச் செய்துள்ளீர்கள்.ஆனால் இந்த நாட்டிலுள்ள தமிழ் அச்சு ஊடகங்கள் அந்தச் செய்தியை பொறுப்புடன் வெளியிட்டிருந்தது என்பதையும் உங்களுக்கு தெரியப் படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

புனித ரமழான் மாதம் நோன்பு காலத்தில் விளம்பர வருமானத்தை இலக்காகக் கொண்டு ஸஹர் விஷேட நிகழ்வு, நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு அல்லது பெருநாள் தினத்தன்று நீங்கள் ஒளிபரப்பும் விஷேட நிகழ்வுகளை வைத்து முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமாகவும் நாங்கள் திகழ்கின்றோம் என்றோ அல்லது உங்களுக்கு தேவையான முஸ்லிம் அரசியல் வாதிகளைக் கொண்டு அரசியல் நிகழ்வுகளை நடாத்துவதை வைத்தோ முஸ்லிம் சமூகத்திற்கான ஊடகமும் தான் என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தாலும் முஸ்லிம் சமூகம் அதை ஏற்றுக் கொள்ள ஆயத்தமில்லை.

எனவே முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையைக் கடைப்பிடியுங்கள் என ஆலோனை கூறுகின்;றோம். முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பார்ப்புக்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை இருட்டடிப்பு செய்யாதீர்கள்
ஊடக ஒழுக்கத்தை பேணி நடந்து கொள்ளுங்கள் ஊடக சம நிலையையும் ஏற்படுத்துங்கள் என உங்களிடம் கேட்டு விடை பெறுகின்றோம்.

நன்றி
இவ்வண்ணம்
.
காத்தான்குடி மீடியா போரம்
காத்தான்குடி
14.01.2019

தலைவர்
மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா
செயலாளர்
எம்.எம்.எம்.அஸீம்.
பிரதிகள்:
முகாமையாளர்
செய்திப் பிரிவு
சக்தி தொலைக்காட்சி

முகாமையாளர்
செய்திப் பிரிரிவு
சக்தி வாணொலி
தலைவர் செயலாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
கொழும்பு

தலைவர் செயலாளர்
சுதந்திர ஊடக இயக்கம்
கொழும்பு

இக் கடிதம் பதிவுத்தபாலிலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி Zajil news

தேசிய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்கள் பெயர் விபரம் ஆணைக்குழுவிடம்

January 15, 2019

தேசிய பாடசாலைகளுக்கான புதிய அதிபர்கள் நியமனம் தொடர்பான பெயர்ப்பட்டியல் அடுத்த வாரம் அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய பாடசாலைகள் 303 இற்காக அமைச்சினால் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய 800 இற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வேண்டுகோள்


January 15, 2019

பாதாள உலக குழுக்களுக்கு தலைதூக்க இடமளிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாதாள உலக குழுக்களை சில அரசியல்வாதிகளே பாதுகாப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸார் இந்த பாதாள உலக குழுக்கள் தொடர்பில் இதனை விடவும் செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கேட்டுள்ளார்.

சில பொலிஸார்கள் கூட பாதாள உலக குழுவைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு உதவி வழங்குவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு கேரலா கஞ்ஜா பாரியளவில் கடத்தப்படுவதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசியல்வாதிகள் அபயம் அளித்து வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஹஜ் கோட்டா 3500 ஆக அதிகரிப்பு

January 15, 2019

தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீம், சவுதி அரசாங்கத்தின் ஹஜ் விவகாரங்களுக்கு பொருப்பான அமைச்சர் உள்ளிட்ட குழுவுடன் நேற்று நடாத்திய பேச்சு வார்த்தையின் பயனாக இம்முறை இலங்கைக்கு வழங்கப்படும் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க சவுதி அரசு தீர்மானித்துள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்,

கடந்த வருடங்களில் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற ஹஜ் கோட்டாவின் தொகை 3000 க்கு அன்மித்த தொகையாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவியேற்றுள்ள சுமந்திரன்

15.01.2019

வடக்கு அபிவிருத்தி அமைச்சினை தமது கோரிக்கைக்கு அமைய, பிரதமர் பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலே அவ்வாறான அமைச்சினை பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் எவ்வாறு எதிர்க்கட்சி வரப்பிரசாதங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்கு எவ்வித உரிமையும் இல்லை என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு அபிவிருத்தி அமைச்சினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெற்றுக் கொண்டதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே காரணம் என சுமந்திரன் தெரிவிக்கின்றார். தங்களின் ஆலோசனைக்கமையவே பிரதமர் அதனை பெற்றுக் கொண்டார். தங்களின் கோரிக்கைக்கமைய வடக்கு அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை ஒன்றின் நியமிப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்டால் கூட்டமைப்பு நிச்சியம் ஆளும் கட்சியில் ஆசனம் பெற வேண்டும்.

எதிர்க்கட்சியில் கூட்டமைப்பு அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சி வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மஹிந்த!

15.01.2015

மழையிலும் வெய்யிலிலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் உழவர்களின் நலனின் அக்கறை கொண்டு பேணுவதில் நான் என்றும் தவறியவன் அல்ல என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தைத் திருநாளை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதியும், இந்நாள் எதிர்க் கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்சp தமிழில் பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்.

தைத்திருநாள் உழவர் பெருநாள் மட்டுமல்ல, நன்றியறிதல் எனும் உயரிய மனப்பாங்கை வெளிப்படுத்துவதுமாகும் இது தமிழ் மக்கள் உலகிற்கு எடுத்துரைக்கும் நலன்மிகு முன்னுதாரணமாகும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஆன்றோர் வாக்கு அதற்கமைய எதிர்காலத்தில் தமிழ் மக்கள் இன்னல்கள் நீங்கி நலங்களும் வளங்களும் பெற்று வாழ வேண்டும்.

அத்தோடு நாட்டில் நிலவுகின்ற இயற்கை சீற்றத்திலிருந்து மீண்டு அனைவரும் மீள எழு எழுச்சி பெறுவோம். அதற்காக அனைவரும் ஒன்றிணைவோம்.

எனது நீண்ட அரசியல் வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி என எல்லா பதிவிகளையும் வகித்த ஒருவன் என்பதோடு இலங்கை பிரஜை என்ற ரீதியில் எனது நடவடிக்கைகள் இன மத பாகுபாடுகள் அற்ற வகையிலும், எமது அன்னைத் திருநாட்டின் பொதுநலன்கள் சார்ந்தனவாகவே இருக்கின்றன.

மழையிலும் வெய்யிலிலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் உழவர்களின் நலனின் அக்கறை கொண்டு பேணுவதில் நான் என்றும் தவறியவன் அல்ல. இந்தப் பொங்கல் அனைவருக்கும் நல்லதாக அமையட்டும்.

இலங்கை மக்கள் அனைவருக்கும் நல்லிணக்கமும், அன்பும் கிடைப்பதற்கு நாட்டின் எதிர்கட்சி தலைவர் என்ற வகையிலும் அனைவரும் ஒற்றுமையாக வாழும் அரசியல் தீர்வை நாட்டு மக்கள் பெற்றிட வேண்டுமென பிராத்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள்


15.01.2019

மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

வெளிநாட்டுகளில் இருந்து வருபவர்கள் மூலமே குறித்த நோய் இலங்கையில் பரவுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக, சுகாதார அமைச்சின் மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசெம்பர் மாதம் முதல் வாரக்காலப்பகுதியில் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் மலேரியா நோய் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

பின்னர் அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தமை தெரியவந்தது.

அதன்பின்னர் 2 வாரக்காலத்தில், ஸ்ரீ ஜயவர்தன புர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்க மலேரியா இருப்பது தெரியவந்தது.

குறித்த நபர் சியம்பலாண்டுவ பகுதிக்கு சென்று வந்ததாக, வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சியம்பலாண்டுவ பகுதியில், மலேரியா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படும், வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், தற்போது இலங்கையில் மலேரியா நோய் தொற்று பரவுவதற்கான நிலைமை இருப்பதாக, வைத்தியர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலேரியா நோய் தொற்று முற்றாக ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைச்சு இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.

எனவே இந்த நோய் தொற்றுக்கு காரணமாகும், வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களை சுகாதார பரிசோதனைக்கு உற்படுத்த வேண்டும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் மலோரியா குறித்து பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.