Tuesday, July 31, 2018

கல்வி அமைச்சுக்கு எதிராக பெற்றோர் வழக்கு தொடர முடியும்

August 1, 2018

பாடசாலைகளுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால் கல்வியமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தகைமையுள்ள ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமை பெற்றோருக்கு உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் இதற்கான வாய்ப்பு பெற்றோருக்கு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். காலி கிந்தோட்டை ஷாஹிரா கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: கடந்த காலங்களில் மாணவர்கள் அல்லது பாடசாலைகளின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை.

மாறாக அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பவே பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன் காரணமாகவே பாடசாலைக் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளானது.

தாம் கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் பரீட்சைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஸ்தாபிக்கப்பட்டன. எனினும், அரசியல் இலாபம் கருதி செயற்பட்ட சிலரால் தற்போது பல பாடசாலைகளில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

ஒரு பட்டதாரி பாடசாலை ஆசிரியராக நியமிக்கப்பட்டாலும் அவர் முறையான பயிற்சி பெறுவது அவசியம். சீர்குலைந்துள்ள பயிற்சி நிறுவகங்களை மறுசீரமைத்து அவற்றை முறையாக இயங்கச் செய்வது கட்டாயமானது.

அதேவேளை கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய சட்ட திட்டங்களை அமுலாக்க வேண்டியது அவசியமெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment