Wednesday, October 31, 2018

சிறுபான்மை கட்சியின் பிரபல அமைச்சர் புதிய பிரதமருக்கு ஆதரவு ?

01.11.2018

சிறுபான்மை கட்சியொன்றுக்கு தலைமை வகிக்கும் பிரபல அமைச்சர் ஒருவர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொள்கை அடிப்படையிலான அரசியல் முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சரை சிவில் சமூக அமைப்புக்கள் வேண்டியபோதும், தாம் எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்திக் குறித்த அமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்பு முரணானது என உள்நாட்டு, வெளிநாட்டு புத்திஜீவிகள் கருத்துத் வெளியிட்டுள்ளனர். மேலும் சிறுபான்மையினர் குறித்த நியமனத்திற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் சிறுபான்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரபல அமைச்சர் ஒருவர் மேற்கொண்டுள்ள இந்தத் தீர்மானம் சிறுபான்மை சமூகத்திடையில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி

Vanni Express News

துமிந்த திசாநாயக்கவை சம்மதிக்க வைக்க நீண்ட போராட்டம்!

01.11.2018

முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்கவை தனது முடிவுக்கு இணங்க வைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீண்ட போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்.
'
மஹிந்த ராஜபக்ச குடும்பத்தின் ஆளுமைக்குள் மீண்டும் சுதந்திரக் கட்சியை இழுத்துச் சென்று கையளிக்க அனுமதிக்க முடியாது என தெரிவிக்கின்ற துமிந்த, மஹிந்தவின் நியமனத்துக்கு ஆதரவு வழங்க மறுத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு ஜனாதிபதியின் இல்லத்தில் துமிந்த - மைத்ரியிடையே நீண்ட நேர பேச்சு வார்த்தை இடம்பெற்றிருந்த போதிலும் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லையென அறியமுடிகிறது.

Sonakar News

செவ்வாயக்கிழமை நாடாளுமன்றைக் கூட்டி வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பதாக ஜனாதிபதி,சபாநாயகரிடம் உறுதி..!!

November 1, 2018

நாடாளுமன்றை நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவதற்கு சபநாயகரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆராய்ந்து உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றைக் கூட்டி பிரதமர் தொடர்பான வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தகவல்கள் தெரிவித்தன.

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை அடுத்து நாடாளுமன்றை ஒக்டோபர் 27ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 16ஆம் திகதிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அடிப்படையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க முடியாது என்ற அடிப்படையில் அரசியலமைப்புக்கு முராணாக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் தெரிவிக்கின்றன.

இதனால் அரசியலமைப்பு மீறலையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண உடனடியாக நாடாளுமன்றைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.\

சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கூட்டுமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதுதொடர்பில் சபாநாயகரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக் கடிதத்துக்கு அமைவாக சபாநாயகரை இன்று மாலை 5 மணிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.

இதன்போது நாடாளுமன்றை உடன் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய சபாநாயகர், நவம்பர் 16ஆம் திகதிவரை பிற்போட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அவரது யோசனைக்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடவதாக உறுதியளித்தார்.

சிறிசேன நாடாளுமன்றத்தை உடன் கூட்டவேண்டும்-உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் அமைப்பு வேண்டுகோள்

2018-11-01

இலங்கையில் உருவாகியுள்ள முன்னொருபோதும் இல்லாதநிலை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள உலகின் மூத்த அரசியல் தலைவர்களின் எல்டெர்ஸ் அமைப்பு இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் மற்றும்; அரசமைப்பு நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதிய உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலகில் மிக மதிக்கப்படும் மூத்த அரசியல் தலைவர்கள் இராஜதந்திரிகள்  மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கியதே எல்டெர்ஸ் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவின் முன்ளாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா இந்த அமைப்பை ஆரம்பித்திருந்தார்.

இலங்கையின் அரசியல் தலைவர்களை சட்டத்தினை பின்பற்றி செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ள எல்டெர்ஸ் அமைப்பு மனித உரிமைகள் ஜனநாயக கொள்கைகளிற்கு முன்னுரிமை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் அரசியல் பதட்டநிலையை அதிகரிக்கும் மேலும் வன்முறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் எல்டெர்ஸ் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை முன்னொருபோதும் இல்லாத அரசமைப்பு நெருக்கடியை எதிர்கொள்கின்றது இதற்கு உடனடியாக அமைதியான வழிமுறைகள் மற்றும் சட்டரீதியில் தீர்வை காணவேண்டும் என நோர்வேயின் முன்னாள் பிரதமரும் எல்டெர்ஸ் அமைப்பின் பதில் தலைவருமான குரொ ஹர்லெம் பிரென்ட்லான்ட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பல வருட உள்நாட்டு மோதல்கள் மனித உரிமைகளால் பெருந்துயரத்தை அனுபவித்துள்ளது இதன் காரணமாக அரசியல் காய்நகர்த்தல்கள் ஆபத்தை  சந்திக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவை ஜனநாயகத்தையும் அரசமைப்பு விழுமியங்களையும் மதிப்பதன் மூலம் அனைத்து மக்களினதும் நலனிற்காகவும் செயற்படுமாறு வலியுறுத்துகின்றேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசமைப்பிற்கு முரணான நடவடிக்கைகள் இடம்பெற்றால் அதன் காரணமாக  தசாப்தகால யுத்தத்திற்கு பின்னர் இலங்கை முன்னெடுத்துள்ள பலவீனமான நல்லிணக்க மற்றும் மீள் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் எனவும் எல்டெர்ஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரச தலைவரே அரசமைப்பை மீறினால் அரச ஸ்தாபனங்கள் மீதான நம்பிக்கை இழக்கப்படலாம் எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வீரகேசரி

பிரதமர் ஆசனத்தை வழங்க சபாநாயகர் இணக்கம்

2018-11-01

பாராளுமன்றத்தில் பிரதமரது ஆசனம் மற்றும் பிரதமருக்கான வரப்பிரசாதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

நன்றி

வீரகேசரி

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு பகிரங்க அழைப்பு ..


  October 31, 2018

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சர் ராஜித சம்பிக உள்ளிட்டோர்  பகிரங்க அழைப்புவிடுத்துள்ளனர்.

இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் இதனை  குறிப்பிட்டனர்.

தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கி செல்ல அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் ரணில் பிரதமரானால் மறுகனமே நான் பதவி விலகுவேன்- ஜனாதிபதி

October 31, 2018

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக்கினால் தான் ஜனாதிபதி ஆசனத்தில் ஒரு மணி நேரம் கூட இருக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (31) அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
தான் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டு கடுமையான  தீர்மானங்களை முன்னெடுத்ததாகவும், இப்போது எடுத்துள்ள தீர்மானம் அதனை விடவும் கடுமையானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டுக்காகவும், மக்களுக்காகவுமே நான் இந்த தீர்மானங்களை எடுத்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம் – வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் சபாநாயகர் வேண்டுகோள்

October 31, 2018

சபாநாயகர் கரு ஜெயசூர்யவுக்கும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று பாராளுமன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய அவர்கள், இலங்கையில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத அரசியல் மாற்றம் தொடர்பில் தமது கவலையடைவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலைமை காரணமாக நாட்டுக்கு ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பிலும் உயர் அதிகாரிகள் சபாநாயகருக்கு எடுத்துரைத்தனர்
இதன்போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர், இன்றைய தினம் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாகவும், குறித்த சந்திப்பில் இந்த விவகாரம் தொடர்பில் அரசியல் யாப்புக்கு அமையவும், ஜனநாயக முறையிலும் விரைவில் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அதேவேளை அவசரப்பட்டு இலங்கைக்கு எதிராக எந்தவொரு இராஜதந்திர நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் சபாநாயகர் வெளிநாட்டு உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி (Hanaa Singer) அம்மையார், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் மார்கியூ (Margue), பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டேயுரிஸ் (James Dauris), கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் ( David Mackinnon ) ஜேர்மன் தூதர் ஜோர்ன் ரோட் (Jorn Rohde) ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம்

October 31, 2018

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியர் ஒருவர் தாக்கியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் நேற்று செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்தியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர்கள் இருவரும் கடமையில் இருந்த போது, வைத்தியசாலையில் வைத்தே, இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் பெண் வைத்தியர், நேற்று அதே வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், அவர் இன்றைய தினம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி
– முன்ஸிப் அஹமட் –
Putitu

யாரை நம்பி மஹிந்த விசப்பரீட்சையில் இறங்கினார் ? முஸ்லிம் பா. உறுப்பினர்களை நம்பலாமா ?

October 31, 2018
 
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தின் பக்கமே செல்வார்கள். எதிர்தரப்பு வரிசையில் இருந்து அம்மக்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். இலகுவில் அவர்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியும் என்ற பார்வை மாற்று சமூகத்தின் மத்தியில் உள்ளது.

பாராளுமனறத்தில் தனக்கு பெருமான்மை பலம் இல்லை என்று தெரிந்து கொண்டும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பித்தான் மகிந்த ராஜபக்ச அவர்கள் இவ்வாறான “கறணம் தப்பினால் மரணம்” என்ற விசப்பரீட்சையில் இறங்கியிருக்கலாம். 

மகிந்தவின் ஆட்சியில் தனக்கு ஏற்றாற்போல் சட்டத்தை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலம் அன்று தேவைப்பட்டது. அதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே தனது பார்வையை செலுத்தினார்.

அதாஉல்லாஹ், றிசாத் பதியுதீன் ஆகியோர் தன்னுடன் இருக்கின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரசையும் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக அதன் தலைவர் ரவுப் ஹக்கீமுடன் மஹிந்த பேசியபோது அவர் பலவித நிபந்தனைகளை விதித்தார்.

அதனால் கடுப்படைந்த ஜனாதிபதி மகிந்த அவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக களத்தில் இறங்கினார். 

ஓர் ஜனாதிபதியாக இருந்தும் எந்தவித பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றி மிகவும் இரகசியமான முறையில் அமைச்சர் றிசாத் பதியுதீனோடு அவரது வாகனத்தில் முஸ்லிம் காங்கிரசின் பாரளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு தனித்தனியாக சென்று விலை பேசப்பட்டது.

அதில் இறுதியாக ஒரு உறுப்பினரின் இல்லத்துக்கு சென்றபோதுதான் விடயம் தலைவர் ஹக்கீமின் காதுக்கு எட்டியது. அதுவரைக்கும் இந்த டீலிங்கை தலைவர் ரவுப் ஹக்கீம் அறிந்திருக்கவில்லை.

அதனால்தான் கட்சி உடையப்போகின்றது என்ற நிலைமை ஏற்பட்டதனால் வேறுவழியின்றி மகிந்தவுடன் இணைந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை அன்று முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டது.

அன்றுபோல் இன்றும் மகிந்த அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திரைமறைவு டீலிங்கை ஏற்படுத்தியிருக்க மாட்டார் என்று எவ்வாறு கூற முடியும்? 

அது ஒருபுறமிருக்க, ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டால் தான் தலைவருமில்லை, கட்சி நடாத்தவும் முடியாது என்பது றிசாத் பதியுதீனுக்கு நன்றாக தெரியும். அதனால் மகிந்தவின் கை ஓங்குகின்ற நிலைமை உறுதிப்படுத்தப்பட்டால், மகிந்தவுடனேயே றிசாத் அவர்கள் இணையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.  

இப்போது மகிந்தவின் கையில் அதிகாரம் இருப்பதனாலும், பணம் வழங்குவதற்கு இலங்கையில் உள்ள சீன நாட்டு தூதரகம் இருப்பதனாலும் எப்படி டீலிங்கை நடத்தமுடியும் என்பது மகிந்த ராஜபக்சவுக்கு தெரியாமலில்லை.

எது எப்படியோ எதிர்வரும் நாட்கள் எமக்கு அனைத்தையும் புரியவைக்கும். அதுவரைக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வார்த்தைகளை நம்பாமல் அவர்களது நகர்வுகளை உற்று நோக்குவோம்.

நன்றி

(முகம்மத் இக்பால் )
Battinews

ஆசிரியர் ஒருவர் தற்கொலை

October 31, 2018
 

தனக்கேற்பட்ட பிரச்சினையினால் மனஅழுத்தத்திற்கு உள்ளான இளம் ஆசிரியர் தனது வீட்டில் இன்று(31)காலை  தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்   களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கல்லாறு பகுதியை சேர்ந்த விஜயஸ்ரீ விமலஸ்ரீ(வயது-26) என்பவராவார்.

புசல்லாவ இந்து தேசிய பாடசாலையின் விளையாட்டு ஆசிரியராக கடமையாற்றிய இவர் நேற்று விடுமுறை பெற்று வந்து தனது வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.

இத்தற்கொலை தொடர்பில் ஆசிரியரின் நண்பர்கள் பலர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியர் சகலருடனும் நன்றாக பழகி கதைப்பவர் என்றும் நிதி தொடர்பான ஒரு பிரச்சினையே இவரது மரணத்திற்கு காரணமாக இருப்பதாக தெரிவித்தனர்.
பல மாணவர்களை விளையாட்டு வீரர்களாக அறிமுகப்படுத்தி இவ்வாறான ஒரு முடிவை அவ்ஆசிரியர் மேற்கொண்டமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி
Farook Sihan

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை

October 31, 2018

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை (01) கூடவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், நிகழ்கால அரசியல் சூழ்நிலை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய அமைப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மத்திய செயற்குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையை சேர்ந்த அரச அதிகாரிகள் தாக்கப்பட்டதாக முறைப்பாடு

31.10.2018

அலரி மாளிகையை சேர்ந்த அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டதாகவும் , தாக்கப்பட்டதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு குறித்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.

தற்போதைய நிலையில் அலரி மாளிகையில் தங்கியிருக்கும் வௌிதரப்பினரால் இவ்வாறு அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

HiruNews


முச்சக்கரவண்டி பயணிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி!!

31, 10. 2018

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளதை தொடர்ந்து நாளை தொடக்கம் முச்சக்கரவண்டி பயணக்கட்டணத்தை சீர்த்திருத்தம் செய்யவுள்ளதாக சுயதொழில் பணியாளர்களின் தேசிய முச்சக்கரவண்டி சம்மேளம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சுனில் ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி , இரண்டாவது கிலோ மீற்றரில் இருந்து கிலோமீற்றருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் 5 ரூபாய் குறைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமித் வீரசிங்க பிணையில் விடுதலை

31.10.2018

மஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட மூன்று பேருக்கு கண்டி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு இன்று தெல்தெனிய நீதவான் சானக கலன்சூரியவால் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி , ஒருவருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் , ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறும் சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டிருந்த மோசன் மனுவொன்றை ஆராய்ந்ததன் பின்னர் , கண்டி மேல்நீதிமன்றம் கடந்த தினம் இவர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.

குறித்த சந்தேகநபர்கள் கண்டி குழப்பநிலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கடந்த 7 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தை கூட்டுதலும் பெரும்பான்மையை நிரூபித்தலும். ( ஒரு தெளிவான பார்வை)


October 31, 2018

01 பாராளுமன்றத்தை ஒத்திவைத்தல்
———————————————

அரசியலமைப்புச் சட்டம் சரத்து (70) இன் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை காலத்திற்குக் காலம் ஒத்திவைக்கலாம். ஆனால் அவ்வொத்திவைப்புப் பிரகடனத்தில் மீண்டும் கூட்டப்படும் திகதி குறிப்பிடப்பட வேண்டும். அது இரண்டு மாதத்திற்கு மேற்படக்கூடாது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை குறித்த திகதிக்குமுன் ஜனாதிபதி கூட்டலாம்; ஆனாலும் முதல் மூன்று நாட்களுக்குள் கூட்டமுடியாது.

இங்கு சபாநாயகர் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை தாமாகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகளின் பேரிலோ, அது மூன்றில் இரண்டு பங்காக இருந்தால் என்ன, மொத்த 225 பேராக இருந்தால் என்ன, கூட்டுவதற்கு சட்டத்தில் ஏற்பாடுகள் எதுவும் இல்லை.

அவ்வாறு சபாநாயகர் கூட்டினால் அவருக்கெதிராக எந்த சட்டநடவடிக்கையும் எடுக்கமுடியாது. ஆனாலும் அவர் கூட்டியதை பாராளுமன்றமாக கருதமுடியாது. இது தொடர்பாக மேலும் சில விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.

அதேநேரம் ஜனாதிபதி குறிப்பிட்ட திகதியில் ( 16/11/2018) பாராளுமன்றத்தைக் கூட்டாமல் மேலும் காலத்தை நீடிக்கமுடியாது. கூட்டிவிட்டு அதன்பின்னர் மீண்டும் ஒத்திவைக்கலாம். எவ்வளவு காலத்திற்குப் பிறகு ஒத்திவைக்கலாம்; என்பது தொடர்பாக எதுவித ஏற்பாடும் சட்டத்தில் இல்லை. ஒரு நாள் அல்லது இருநாள் கழித்துக்கூட மீண்டும் ஒத்திவைக்கலாம். ஆனால் அது ஜனநாயக விரோதம். அல்லது “காலத்திற்கு காலம்” ( from time to time) என்பதை உயர்நீதிமன்றம் பொருள்கோடல் செய்யவேண்டும்.

02 பெரும்பான்மை நிரூபித்தல்
———————————-
16ம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ பாராளுமன்றம் ஜனாதிபதியினால் கூட்டப்படுகிறது; எனக் கொள்வோம். அதேநேரம் அந்தக்காலப்பகுதிக்குள் உயர்நீதி மன்றத்திடம் இருந்து தீர்வேதும் பெறப்படவில்லை; எனவும் கொள்வோம்

இப்பொழுது இருவர் பிரதமர் பதவிக்கு உரிமை கோருவதால் இதில் ஒருவரை பிரதமராக அங்கீகரிக்க வேண்டிய தேவை சபாநாயகருக்கு எழும்.

03 ரணிலை அங்கீகரித்தல்
———————————
ரணிலைத்தான் பிரதமராக சபாநாயகர் அங்கீகரிக்கின்றார்; எனக் கொள்வோம். இப்பொழுது அவருக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பைக் கொண்டுவரமுடியும். பெரும்பாலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படமாட்டாது. ஏனெனில் எதிரணியினர் அவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை எதிர்பார்க்க முடியாது.

04 ரணில் தோல்வி
————————

இப்பொழுது நம்பிக்கைப் பிரேரணையில் ரணில் தோற்றால் அத்தோடு பிரச்சினை முடிந்துவிடும். மஹிந்தவை சபாநாயகரும் அங்கீகரிக்க வேண்டிவரும். அதற்காக, அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரமுடியாதென்பதல்ல. ஆனால் ரணில் தோற்கின்றார் என்றால் மஹிந்தவுக்குப் பெரும்பான்மை இருப்பது வெளிப்படையாகும். எனவே நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவருகின்ற சாத்தியம் குறைவு.

05 ரணில் வெற்றி
———————
நம்பிக்கைப்பிரேரணையில் ரணில் வெற்றிபெற்றால் அவரது பெரும்பான்மை நிரூபிக்கப்படும். ஜனாதிபதி ரணிலுக்குப் பெரும்பான்மையில்லை; என்று கொண்டிருந்த அபிப்பிராயம் பிழை எனவும் நிறுவப்படும். ஆனாலும் அந்தக்கணத்தில் இருந்து ரணில் பிரதமராக செயற்படமுடியுமா? என்பதில் சட்டப்பிரச்சினை இருக்கின்றது. ஏனெனில் நியமிக்கின்ற அதிகாரம்கொண்ட ஜனாதிபதியினால் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டிருக்கின்றார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இங்கு by operation of law என்று சொல்வதற்கு சட்ட ஏற்பாடு இல்லை. நீக்கப்பட்டவர்பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக பிரதமர் ஆகிவிட முடியாது. ரணில் தானே பிரதமர் என உரிமை கோருகின்றார். பெரும்பான்மையையும் நிரூபித்துவிட்டார். சபாநாயகரும் அவரையே பிரதமராக அங்கீகரிக்கின்றார். எனவே, அவர் தொடர்ந்தும் செயற்படமுடியாதா? என்றொரு கேள்வியை எழுப்பலாம். அது நியாயமான கேள்வி.

ரணில் பெரும்பான்மை நிரூபிப்பதனால் நியமிக்கப்பட்ட அடுத்த பிரதமரும் அமைச்சர்களும் தாமாக பதவியிழக்க சட்டத்தில் ஏற்பாடு இல்லை. ஒன்றில் அதை உயர்நீதிமன்றம் சொல்லவேண்டும். அல்லது ரணிலை மீண்டும் பிரதமராக ஜனாதிபதி நியமிக்கவேண்டும். அதற்கு மஹிந்த ராஜினாமா செய்யவேண்டும்; அல்லது ஜனாதிபதியினால் நீக்கப்படவேண்டும்.

எவ்வாறாயினும் ரணில் தனது பெரும்பான்மையை நிரூபித்தால் அவ்வாறு கட்டாயம் மைத்திரி நியமித்தே ஆகவேண்டும். இல்லையெனில் வேண்டுமென்றே அரசியலமைப்புச் சட்டத்தை மீறியவராவார். அது குற்றப்பிரேரணைக்கு தெட்டத்தெளிவான ஒரு காரணியாகிவிடும். ஆனாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அல்லது ரணில் நீதிமன்றத்தை நாடலாம்.

06 மஹிந்தவை பிரதமராக அங்கீகரித்தல்
————————————————-
சபாநாயகர் மஹிந்தவை பிரதமராக அங்கீகரிக்கின்றார் என வைத்துக்கொள்வோம். இப்பொழுது நம்பிக்கைப் பிரேரணை அவசியமில்லை. எதிர்த்தரப்பு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரலாம். அதில் மஹிந்த வெற்றிபெற்றால் அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தால் அல்லது யாரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவராவிட்டால் மஹிந்த பிரதமராக நீடிப்பார்; தோல்வியடைந்தால் பதவியிழப்பார். புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்.

அப்புதிய பிரதமர் ரணிலாகவும் இருக்கலாம். வேறொருவராகவும் இருக்கலாம். ரணில் ஏதோவொரு விதத்தில் தன்பெரும்பான்மையை நிரூபித்தால் ( உதாரணம் சத்தியக்கடதாசி) ரணிலைப் பிரதமராக நியமிக்க வேண்டியேற்படும். சிலவேளை ஜனாதிபதி மறுக்கவும் கூடும். ஏனெனில் அவ்வாறு ஒரு ஏற்பாடு சட்டத்தில் இல்லை. ஆனாலும் அது ஜனநாய நிரூபணம் என்பதால் அவ்வளவு இலகுவாக மறுக்கமுடியாது.

எனவே, இவற்றின் சுருக்கம் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் மீண்டும் நியமிக்கப்பட்டாலேயொழிய சுயமாக பிரதமராக தொடர்ந்தும் செயற்பட முடியாது. அல்லது நீதிமன்றம் அவ்வாறு கூறவேண்டும்.

மஹிந்த நம்பிக்கை வாக்கெடுப்பொன்றில் தோற்றாலேயொழிய அவர் தொடர்ந்தும் பிரதமராக செயற்படலாம்.

சிலவேளை இருவருக்கும் ஒரேநேரத்தில் வாக்களிக்கின்ற ஒரு போட்டிவாக்களிப்பொன்றிற்கு சபாநாயகர் உத்தரவிடுவாரா என்பது தெரியாது. அவ்வாறான ஒரு ஏற்பாடு பாராளுமன்ற நிலையியல் கட்டளையில் இல்லை; என்றே நினைக்கின்றேன். எதுஎவ்வாறானபோதிலும் யார் எந்தமுறையில் வெற்றிபெற்றாலும் மேற்சொன்ன நடைமுறையே கைக்கொள்ளப்படும்.

07 சபாநாயகர் சுயமாக பாராளுமன்றத்தைக் கூட்டல்
—————————————————————-
சபாநாயகர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. அவ்வாறு கூட்டினால் அதனை பாரளுமன்றமாகக்கொள்ள முடியாது. அதில் ரணில் பெரும்பான்மை நிரூபித்தால் ஜனாதிபதிக்கும் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் ரணிலுக்கு பெரும்பான்மை இருக்கின்றது; என்ற செய்தியைச் சொல்லலாம். அதன்மூலம் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கலாம். அவ்வளவுதான்.

மறுபுறம் மஹிந்தவுக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து தோற்கடித்தால் அதுவும் தேசிய, சர்வதேச ரீதியில் ஒரு விளம்பரத்திற்கு பயன்படுத்தலாமேதவிர மஹிந்த பதவியிழக்கமாட்டார். ஏனெனில் அது பாராளுமன்றமல்ல. பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் மாத்திரமே! எனவே, எதனைச் செய்வதாக இருந்தாலும் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத்தை ஜனாதிபதியே கூட்டவேண்டும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது சட்டத்தின் பார்வையில்
————————————————————
சரத்து 70 இன் அடிப்படையில் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது; என மேலே பார்த்தோம். எனவே பாராளுமன்றத்தை சட்டப்படியே ஒத்திவைத்திருக்கின்றார்.

இம்முறை பாராளுமன்றத்தை ஒத்திவைக்க அவருக்கு அதிகாமில்லை. அவர் சட்டப்படி ஒத்திவைக்கவில்லை.

இங்கு ஒன்றிற்கொன்று முரணான கூற்றுக்கள் இருக்கின்றன. இவற்றை சற்று ஆழமாகப் பார்ப்போம்.

08 தேசிய அரசாங்கம் கலைந்ததா?
——————————————-
ஜனாதிபதிக்கு சார்பான சிலர் ஐ ம சு கூட்டமைப்பு வெளியேறிவுடன் தேசிய அரசாங்கம் கலைந்துவிட்டது. அதனால் அமைச்சரவை கலைந்துவிட்டது. எனவே, பிரதமர் பதவியிழந்துவிட்டார்; என்கிறார்கள். இது ஒரு அர்த்தமற்ற வாதம். பிரதமர் பதவி இழந்திருந்தால் பிரதமரை நீக்கி ஏன் ஜனாதிபதி கடிதம் அனுப்பினார்?

அரசியலமைப்பில் தேசிய அரசாங்கத்தைப்பற்றி சொல்லியிருப்பது என்னவென்றால், ஒரு சாதாரண அரசாங்கமாக இருந்தால் அமைச்சர்கள் 30. இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் 40. தேசிய அரசாங்கமாயின் எத்தனையும் நியமிக்கலாம். கட்டுப்பாடு இல்லை. ஆனால் அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். பெரும்பான்மையுள்ள ஒரு அரசாங்கத்திற்கு அனுமதிபெறுவது சிரமமா?

இங்கு அமைச்சர்களின் எண்ணிக்கைக்குத்தான் அனுமதி பெறுவதே தவிர, தேசிய அரசாங்கம் அமைப்பதற்கல்ல. தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் பாராளுமன்றத்திற்கும் அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நீங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்துவிட்டு 30 இற்குள் அமைச்சரவையை மட்டுப்படுத்துவதென்றால் தேசிய அரசாங்கம் அமைத்ததாக பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவே தேவையில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை ஐ ம சு கூ அரசாங்கத்திலிருந்து வெளியேறியது. எனவே, அது தேசிய அரசாங்கம் என்ற வடிவத்தை இழந்திருக்கின்றதே தவிர அரசாங்கம் கலையவில்லை.

உதாரணமாக கடந்த பொதுத்தேர்தலில் ஐ தே கட்சி பெற்ற ஆசனங்கள் 115 என வைத்துக்கொள்வோம். ஐ ம சு கூட்டமைப்பையும் சேர்த்து தேசிய அரசாங்கம் அமைக்கிறது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் பெறுகின்றது. என வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது ஐ ம சு கூ அரசைவிட்டு வெளியேறுகின்றது. 115 ஆனங்களைக்கொண்ட அரசாங்கம் கலையுமா? கலையாது. தேசியஅரசாங்கம் என்கின்ற தன்மையை மாத்திரம்தான் இழக்கும். அதன்விளைவாக அமைச்சர்களின் எண்ணிக்கையை 30 ஆகக்குறைக்க வேண்டும். அதனை சரத்து 43 இன்படி செய்யலாம். எனவே, அது பிழையான வாதம். தேசியஅரசாங்கத்தைப் பொறுத்தவரை அமைச்சர்களின் எண்ணிக்கையைத்தவிர ( தேசியஅரசாங்கத்தின்கான வரைவிலக்கணம் உட்பட) வேறு எதையும் 19 வது திருத்தம் குறிப்பிடவில்லை.

இங்கு பிரதமர் நீக்கப்பட்டது ஐ ம சு கூட்டமைப்பின் வெளியேற்றத்தினால் பெரும்பான்மை இழந்ததாலாகும்.

முன்னைய பதிவில் குறிப்பிட்டதுபோல “ ஜனாதிபதியின் அபிப்பிராயத்தில் பெரும்பான்மை” என்ற 42(4) இலுள்ள சொற்றொடரில் “ அபிப்பிராயம்” என்பது objective opinion யே தவிர subjective opinion அல்ல என்கின்ற வாதம் இருக்கின்றது. அதாவது சொந்த விருப்பத்திற்கெல்லாம் அபிப்பிராயம் உருவாக்க முடியாது. விருப்பு வெறுப்புகளுக்கப்பால் யதார்த்தத்தின் அடிப்படையில் அபிப்பிராயம் இருக்கவேண்டும் என்பது.

அது சரியான வாதம். ஆனால் ஐ ம சு கூ இன் வெளியேற்றத்தோடு பிரதமரின் பலம் 107 ஆகக்குறைந்தது தெளிவானபோது அது எவ்வாறு objective opinion இல்லாமலிருக்க முடியும்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு விட்டபின்தான் அபிப்பிராயம் உருவாக்க வேண்டுமென்று சட்டம் கூறவில்லை. அது பாராளுமன்றத்திற்குரியவேலை. அது ஜனாதிபதிக்குரியதல்ல.

அதேநேரம் “ நீக்குதல்” என்ற சொல் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆங்கிலப்பிரதியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கின்றது. சிங்கள, தமிழ் பிரதிகளில் அந்தச்சொல் இருக்கிறது. இவ்வாறான பேதம் வருகின்றபோது சிங்களமொழியில் எவ்வாறு இருக்கின்றதோ அதையே ஏற்றுக்கொள்ளவேண்டும். அது 19 வது திருத்தத்திலும் சொல்லப்பட்டிருக்கின்றது.

எனவே, ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது செல்லுபடியாகும்.

இங்கு எழுப்பப்படவேண்டிய கேள்வி ரணிலை நீக்கியது செல்லுபடியானதா? என்பதல்ல. 107 உடன் ( வெளிப்படையாக ) இருந்த ரணிலுக்குப் பெரும்பான்மையில்லை; என்பது ஜனாதிபதியின் அபிப்பிராயமாயின் மொத்த ஐ ம சு கூட்டமைப்பிடம் 95 தான் இருந்தன.

பெரும்பான்மைக்கு 113 தேவை. எனவே 107 ஐக் கொண்டவரிடம் பெரும்பான்மை இல்லையென்பது ஜனாதிபதியின் அபிப்பிராயமானால் 95 ஐக் கொண்டவருக்கு பெரும்பான்மை இருக்கின்றது; என்று ஜனாதிபதி எந்த அடிப்படையில் அபிப்பிராயம் கொண்டார்?

சரி ஏதோ ஒரு விதத்தில் அபிப்பிராயம் கொண்டார்; எனக்கொள்வோம். பாராளுமன்றத்தைக் கேட்டு அவர் அபிப்பிராயம் உருவாக்கத் தேவையில்லை. ஆனால் ஜனாதிபதியின் அபிப்பிராயத்தைப் பரீட்சிப்பதற்கும் அது பிழையென்றால் ஜனாதிபதி நியமித்தவரின் பதவியை இழக்கவைப்பதற்கும் பாராளுமன்றத்திற்கு உரிமையையும் அதிகாரமும் இருக்கின்றது. அந்த உரிமையில், அதிகாரத்தில் தலையிடுவதற்கு, அந்த அதிகாரத்தைச் செயற்படுத்துவதைத் தடுப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை.

இப்பொழுது பாராளுமன்றை இம்முறை ஒத்திவைக்க அவருக்கு அதிகாரம் இருந்ததா? என்ற கேள்விக்கு வருவோம்.

அதிகாரம் ( இறைமை) மக்களுடையதும் பிரிக்க முடியாததும். இதில் சட்டவாக்க அதிகாரத்தைப் பாராளுமன்றத்திற்கும் நிறைவேற்றதிகாரத்தை ஜனாதிபதிக்கும் தம் நம்பிக்கையாளர் சபையாக குறித்த நோக்கங்களுக்காக பாவிப்பதற்கு மக்கள் வழங்கியிருக்கின்றார்கள்.

Power belongs to the people and is inalienable. People have vested the power in the different organs of government through the Constitution for those organs to exercise it in trust for the People.

எனவே, இங்கு பிரதமரைத் தெரிவுசெய்வதில் யாருக்குப் பெரும்பான்மை இருக்கின்றது; என்று விருப்பு வெறுப்புகளுக்கப்பால் அபிப்பிராயம் கொள்ளுகின்ற, அவரைப் பிரதமராக நியமிக்கின்ற அதிகாரத்தை மக்கள் ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

அந்த அபிப்பிராயம் சரியானதாதா? என பரீட்ச்சிக்கின்ற அதிகாரத்தைப் பாராளுமன்றத்திற்கு மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். இதனைத்தான் checks and balances through the mechanism of separation of power என்று கூறுகின்றார்கள்.

இங்கு ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன்மூலம் ஜனாதிபதியின் முடிவைப் பரிசீலிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தை செயற்படுத்தாமல் தடுத்துவைத்திருக்கின்றார். மக்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கிய அதிகாரத்தை செயற்படுத்தாமல் தடுப்பதற்கு மக்கள் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கினார்களா?

இல்லாத அதிகாரத்தை அல்லவா இங்கு ஜனாதிபதி பாவித்திருக்கின்றார். பாராளுமன்றத்தை ஒத்திவைக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அது உண்மையான தேவை ஏற்படுகின்றபோது பாவிக்கப்படலாம். இங்கு மக்கள் பாராளுமன்றத்திற்கு வழங்கிய அதிகாரத்தை ஒரு முக்கிய தருணத்தில் பாவிப்பதைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சட்டவாக்கத்துறையின் அதிகாரத்தை நிறைவேற்று த்துறை அதிகாரம் முடக்க முடியாது. இது மக்களின் இறைமையில் தலையிடுவதாகும்.

எனவே, பிரதமரை நீக்கியது அரசியலமைப்பிற்கு முரணுமல்ல, இறைமை மீறலுமல்ல. ஆனால் பாராளுமன்றத்தை இந்த சந்தர்ப்பத்தில் ஒத்திவைக்க ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை. இது ஒரு அதிகார துஷ்பிரயோகம். துஷ்பிரயோகம் செய்வதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இது அப்பட்டமான இறைமை மீறலாகும்.

நன்றி

-வை எல் எஸ் ஹமீட் - Sir