Friday, November 30, 2018

பிரதமர், அமைச்சரவை நியமனங்களை எந்த நீதிமன்றிலும் விசாரிக்க முடியாது

December 01, 2018
 

பூர்வாங்க ஆட்சேபனையில் சட்டத்தரணிகள் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை நியமித்தமை பாராளுமன்ற நடைமுறைக்கு அமைவானதாக இருப்பதால் அதுகுறித்து எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பூர்வாங்க ஆட்சேபனை மனுவொன்றை தாக்கல் செய்து பிரதிவாதிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமராக ராஜபக்ஷவின் நியமனமும் அமைச்சரவை நியமனமும் சட்டரீதியற்றதென கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது எதிர்மனுவொன்றை தாக்கல் செய்த பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆரம்பகட்ட எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சட்டரீதியானதென்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் பிரதிவாதிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, ஆர். சம்பந்தன், அநுரகுமார திசாநாயக்க உட்பட 122 உறுப்பினர்கள் இந்த மனுமீதான மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

பாராளுமன்றம் தொடர்பில் பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருவதால் பாராளுமன்றத்தோடு தொடர்புபட்ட இந்த மனு மீதான விசாரணையை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இந்த மனுமீதான விசாரணை நடத்தப்படக்கூடாதென்றும் சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் சம்பவமொன்று தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்படுவதற்கும் உத்தரவிடப்படுவதற்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கிடையாதெனவும் தெரிவித்து இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கவேண்டாமென்றும் சட்டத்தரணிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இங்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன், உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது பிறிதொரு வழக்கு என்பதால் குவோ வொறண்டோ றிட் ஆணையொன்றை கூறும் இந்த மனு முற்றுமுழுதாக முரண்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டிருப்பதால் பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்ந்தும் செல்லுபடியற்றது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது இந்த முறைப்பாட்டுக்கு எதிராக ஆரம்பக் கட்ட ஆட்சேபணையை முன்வைப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 14 ஆம் திகதி உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லையெனவும், அதனை உறுதிப்படுத்தும் பொருட்டு வீடியோ நாடாவை சமர்ப்பிக்க முடியுமென்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். அதன் பிரகாரம் அமைச்சரவை மற்றும் பிரதமர் சட்டரீதியானதாகவே இருப்பதாகவும் அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் தொடர்பில் ஆணையிடுவதற்கோ மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,

அரசியலமைப்பு தொடர்பில் அர்த்தம் கற்பிப்பதற்கு அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே இருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதென குறிப்பிட்டார்.

இதன்போது குறிப்பிட்ட மனுதாரர் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன், 14 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சட்டப்படி நிறைவேறியிருப்பதாகவும் அந்த விபரம் பாராளுமன்றத்தின் சட்ட ரீதியான ஆவணமான ஹன்சார்ட்டில் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு அந்த ஹன்சார்ட் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியால் மட்டும் மீள கூட்ட முடியும். அதன் பிரகாரம் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டரீதியாக கூட்டப்பட்ட பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாகவே பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதால் நம்பிக்கையில்லாப் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் புதிய பிரதமரோ அமைச்சரவையோ தொடர்ந்தும் அதிகாரமற்றது எனவும் அவர்கள் சட்டவிரோதமாகவே பதவிகளில் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக எழுந்துள்ள நிலைமை மிக மோசமானதாகும். வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதில்லை, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. அது நாட்டுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால், தான் எவ்வாறான அதிகாரத்தின் கீழ் பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவிகளிலும் செயற்பட முடியும் என்ற கேள்வி எழுப்பி பிரதிவாதியான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு குவோ தொறண்டோ ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் அந்தப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதை தடுக்கும் விதத்தில் இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதிவாதியான மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, உரிய நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டரீதியாக நிறைவேற்றப்படவில்லை. நிலையியற்கட்டளைகள் இடைநிறுத்தப்பட வேண்டியது அரசியலமைப்புக்கு அமைவாகவே எனக் குறிப்பிட்ட அவர், இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்கூட அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குரல் வழி மூலம் பிரேரணையை நிறைவேற்றுவது நிலையியற் கட்டளைக்கமைய இடம்பெற்றதாக அவர்கள் கூறுகின்ற போதும் அதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் பிரேரணைக்கு அமைய நிலையியற் கட்டளை அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

லிற்றோ கேஸ் நிறுவனத்தில் 95000 மாதந்த கொடுப்பனவு பெற்ற விவகாரம் ; தம்பர அமில தேரருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு...

November 30, 2018

மாதாந்தம் 95000 ரூபா லிற்றோ கேஸ் நிறுவனத்தில் கொடுப்பனவு பெற்ற விடயம் தொடர்பில் தம்மர அமில தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சத்ய கவோஷகயோ அமைப்பின் தலைவர் சட்டத்தரணி பிரேம்நாத் சி தொலவத்த இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய
குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று  (29) நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நேற்று  லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் நிதி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய முதித தமானகம சாட்சி வழங்கியிருந்தார்.

இதன்போது பிரதிவாதிகள் சார்பில் முன்னின்ற ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி எழுப்பிய குறுக்கு கேள்விக்கு பதிலளிக்கும் போது சாட்சிக்காரரான முதித தமானகம, 2015 ஆண்டின் பின்னர்  தம்பர அமில தேரருக்கு போக்குவரத்து கொடுப்பனவாக மாதாந்தம 125,000 ரூபா வழங்க நிறுவனத்தின் நிர்வாகிகள் யோசனை ஒன்றை முன்வைத்தாக தெரிவித்துள்ளார்.

இதற்கு தான் மறுப்பு தெரிவித்தாகவும், பின்னர் மாதாந்தம் 95,000 ரூபா பணம் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் இரகசிய கணக்கு ஒன்றின் மூலம் வழங்கப்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறுவனத்தில் கடமையாற்றாத 39 பேருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் மேலதிக விசாரணை நாளைய தினம் இடம்பெற உள்ளது.

நன்றி

மடவள நியூஸ்

ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதமர் பதவியை இலேசாக மீட்க முடியுமா?

   November 30, 2018

ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதமர் பதவியை இலேசாக மீட்க  முடியுமா?

ரணில் பிரதமரானது கூட்டரசாங்கத்தின் மூலமேயாகும்,அதே கூட்டரசாங்கம் உடைந்தபோது ரணில் பிரதமர் பதவியை இழந்தார்.

இந்த நிலையில் புதிய பிரதமராக மஹிந்தவை ஜனாதிபதி நியமித்தார், இந்த நியமனமானது சட்டவிரோதமானது என்று ரணில் தரப்பு கூறினார்களே தவிர அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தீர்வு தேட முயற்சிக்கவில்லை,அதனால் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டது சட்டபூர்வமானதே என்பது நிரூபணமானது.

இந்த நிலையில் புதிய பிரதமரானவருக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பாண்மையில்லை என்ற காரணத்தைக்கூறி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானமானது பாராளுமன்ற நிலையியல் கட்டளையை பின்பற்றாமல் நிறைவேற்றப்பட்டது எனக்கூறி ஜனாதிபதி அந்த தீர்மானத்தை நிராகரித்திருந்தார்.அந்த நிராகரிப்பானது சரியானதா பிழையானதா என்ற வாதத்துக்கு அப்பால், பிரதமராக  மஹிந்த நியமிக்கப்பட்டது சரியானது என்று ஏற்றுக் கொண்ட விடயமே இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே கவணிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

பிரதமர் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டிருந்தால், அந்த சட்டவிரோதமான பிரதமருக்கு எதிராக எப்படி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியும் என்ற கேள்விக்கும் இங்கே பதில் கிடைத்து விட்டது எனலாம்.

ஆகவே புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ சட்டபூர்வமான பிரதமரே என்ற நிலைக்கு வந்துவிட்டதனால்,அவருடைய பதவியை எப்படி வறிதாக்கலாம் என்றே நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட  ஒரு பிரதமரின்  பதவியை யாரும் இலேசாக பறிக்கமுடியாது என்பதை 19வது திருத்தச்சட்டம் தெளிவாகவே குறிப்பிடுகின்றது எனலாம்.

46. (1) (அ) அமைச்சரவை அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதை விஞ்சுதலாகாது;
அத்துடன்..

(ஆ) அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களினதும், பிரதி அமைச்சர்களினதும், கூட்டுமொத்த எண்ணிக்கை மொத்தத்தில் நாற்பதை விஞ்சலாகாது.

(2) பிரதம அமைச்சர்-

(அ) சனாதிபதிக்கு முகவரியிட்டனுப்பும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் அவரது பதவியை துறந்தாலொழிய; அல்லது

(ஆ) பாராளுமன்ற உறுப்பினரொருவராக இல்லாதொழிந்தாலொழிய ;

அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தொடர்ந்தும் பணியாற்றும் காலம் முழுவதும் அவர் தொடர்ந்தும் பதவி வகித்தல் வேண்டும்;

என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் சட்டபூர்வமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை, அவரது விருப்பத்துக்கு மாறாக பதவியினின்றும் எப்படி நீக்கலாம் என்ற கேள்விக்கு பதில் தேடவேண்டியுள்ளது. அதே நேரம் வேறு வழிகளிலோ அல்லது ஜனாதிபதியினாலோ ஒரு பிரதமரின் பதவியை எப்படி மீளப்பெற முடியும் என்ற கேள்விக்கும் விடை தேடவேண்டியுள்ளது.

இந்த நிலையில் புதிய பிரதமரின் பதவியை வறிதாக்குவது என்பது சட்டத்தின் பார்வையில் கடினமானதாகவே தென்படுகின்றது என்பதே உண்மையாகும்.

அதனால்தான் பிரதமர் மஹிந்த அவர்கள் ஒரு கட்டத்தில் கூறினார்; நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன், முடிந்தால் எனது பதவியை விட்டு என்னை நீக்கிவிடுங்கள் என்று கூறியிருந்தார். இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம் என்றும் என்னத்தோன்றுகிறது எனலாம்.

ஆகவே இன்றய அரசியல் நிலைமையானது ஆப்பிழுத்த குரங்கின் கதையானது போன்றுதான் உள்ளது.

நன்றி

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றில் நம்பிக்கை இல்லா பிறேரணை தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார். சந்திப்பின் பின் த. தே. கூ தெரிவிப்பு.


November 30, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பு  இடம்பெற்று சற்று முன் முடிவடை ந்த நிலையில,  எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாமல் கூட்டம் முடிவடைந்து.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 5 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது, அரசுக்கு எதிராக ஏற்கனவே முன்வைத்த  நம்பிக்கை இல்லா பிறேரணை தொடர்பில் ஜனாதிபதி  நடவடிக்கை எடுப்பார் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட சுமந்திரன் தெரிவித்தார்.

அதேவேளை ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிதிகள் ஜனாதிபதியை சந்திக்க  செயலகம் நோக்கி சென்றுள்னர்.

அம்பாறை - உகன பிரதேச பாடசாலை மாணவர்கள் 03 பேர் கைது


30.11.2018

அம்பாறை - உகன பிரதேச பாடசாலை மாணவர்கள் 03 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிதி வண்டி சங்கிலிகளை கொண்டு சென்றுள்ள போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்கள் இம் முறை சாதாரண தரத்தில் கல்விகற்கும் மாணவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாடசாலை அதிபரினால் காவற்துறைக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கமைய குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் மோதல் சம்பவம் ஒன்றிற்காக இவ்வாறு மிதி வண்டி சங்கிலிகளை கொண்டு வந்துள்ளதுள்ளமை அறியவந்துள்ளது.

இந்நிலையில் காவற்துறையினால் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாமலுக்கு எதிரான வழக்கு 2019 ஏப்ரல் வரை ஒத்தி வைப்பு!

30.11.2018

நாமல் ராஜபக்ச மற்றும் ஐவருக்கு எதிரான 30 மில்லியன் நிதி மோசடி தொடர்பிலான வழக்கு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கில் ஆஜராக வேண்டிய சிரேஷ்ட வழக்கறிஞர்கள் வேறு வழக்கில் ஆஜராகியுள்ளதால் அவர்களுக்கான அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்க வழக்கை ஒத்தி வைக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் 03ம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் ஏலவே பசில் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கொன்றும் அடுத்த வருடம் மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையும் அண்மையில் மஹிந்த குடும்பத்தின் மோசடிகளை துரிதமாக விசாரிக்கவென ஆரம்பிக்கப்பட்டிருந்த விசேட உயர் நீதிமன்றங்கள் தற்சமயம் கேள்விக்குறியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பு

30 Nov, 2018

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 135 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளதுடன்,
95 ரக பெட்ரோல் 159 ரூபாவாகக் குறைக்கப்படவுள்ளது.

அத்துடன், ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் 106 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதுடன், ஒரு லிட்டர் சுப்பர் டீசல் 131 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும் , மண்ணெண்ணெய் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என பெட்ரோலிய வளத்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.


நாடாளுமன்றம் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு


November 30, 2018

நாடாளுமன்றம் டிசெம்பர் மாதம் 5 ஆம்திகதி வரையிலும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, அன்றையதினம் காலை 10:30 மணிவரையிலும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்றும் ஆளுங்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்


30.11.2018

சபாநாயகரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினமும் ஆளுங்கட்சியினர் நாடாளுமன்ற அமர்வை புறக்கணித்துள்ளனர்.

அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல் , ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டமொன்று தற்போதைய நிலையில் இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழு கூட்டமொன்று இன்று காலை இடம்பெற்றிருந்தது.

அமைச்சரவையின் நிதி உரிமையை சவாலுக்கு உட்படுத்தும் யோசனையொன்று எதிர்க்கட்சியால் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

O/L பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!


30.11.2018

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பிரத்தியேக விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத பிரத்தியேக விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், அடையாள அட்டை இலக்கத்தை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் பதிவிட்டு, அனுமதிப் பத்திரத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

ஹொரவ்பொத்தானை பாலமொன்றை சோதனையிட்ட காவற்துறைக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

30 NOVEMBER 2018

ஹொரவ்பொத்தானை, அளுத்ஓயா வீதி யான் ஓயா பாலத்துக்கு அருகில் இன்று (30) ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

கெப்பிட்டிகொல்லாவ விஷேட காவற்துறை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதியை சோதனையிட்டபோது 56 துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் டீ 56 எல் எம் ஜி தோட்டாக்கள் டி 56 துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் எல் எம் ஜி ரம்ஸ் எமோ பெல்ட் ஏனைய ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.

கெப்பிட்டிகொல்லாவ விசேட காவற்துறை அதிரடிப்படை பொறுப்பதிகாரி டிஎம்கே திசாநாயக்க அவர்களின் பணிப்புரையின் பேரில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட ஆயுதங்களை காவற்துறை நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்றைய தினம் கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றினையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை காவற்துறையினர் தெரிவித்தனர்.

Thursday, November 29, 2018

இறக்காமம் abc ஆங்கிலக் கற்கை நிலையத்தின் புதிய கிளைதிறப்பு விழாவும் புதிய வகுப்பு ஆரம்ப நிகழ்வும்

 

30.11.2018 (படங்கள்)

இறக்காமம் abc ஆங்கிலக் கற்கை நிலையத்தின் புதிய கிளைதிறப்பு விழாவும் புதிய வகுப்பு ஆரம்ப நிகழ்வும் நேற்று(29)
ஆரம்பிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்கு அதிதிகளாக சட்டத்தரணி எஸ் எல் பாறூக் சட்டக்கல்லூரி மாணவன் UPA அமைப்பாளர் K. சமீம் சமுர்த்தி முகாமையாளர் ஏ ஏல் நௌபீர்,  இறக்காமம் மத்தியஸ்தர் சபைஉறுப்பினரும் தினகரன் ,பத்திரிகை ஊடகவியலாளரும்மான ஹுஸைன்தீன் (ஆசிரியர்)மற்றும் முகிதீன்கிராம பள்ளிவாசல்  செயலாளர் ஏ எல் தாஜுர்  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர் இறக்காமம் வோய்ஸ் செய்தி இணையதள உரிமையாளர்
I.ஹுஸைன்றிஸ்வி ஆகியோரும் கலந்து கொண்டனர். 

முதலில் கல்வி நிலையத்தை இல்யாஸ் ஆசிரியரின் சகோதரான ஹுஸைன்தீன் ஆசிரியர்( கல்விமாணி) அவர்களால்கற்கைநிலையம் திறந்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஆங்கிலக்கற்கை நிலையத்தின் பணிப்பாளர்  இல்யாஸ் ஆசிரியாரால் உரையாற்றப்பட்டது. அவர் தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆங்கில மொழி வாசிப்பானது கற்கின்ற ஒரு வழிமுறை *வாசிப்பின் மூலம் மாணவன்(ஒருவன்) கற்றுக் கொள்கின்றான் *அறிவைப்பெற்றுக் கொள்கின்றான். அவனது விளக்கம் விருத்தியடைகிறது இவ்விருத்தியானது  பிள்ளையின் புத்திசார் விருத்தியில்  முக்கிய பங்கு வகிக்கிறது. ஆங்கில வாசிப்பானது புதிய அறிவைப் பெற்றுக்கொள்ளவும் , அனுபவத்தை விரிவாக்கிக்கொள்ளவும் ,ஆங்கிலக்கல்வி உதவுகிறது என்று
குறிப்பிட்டார் .

ஆங்கிலமொழி விருத்தியில் பிள்ளைகளை பாண்டித்தியமுடையவர்க்க
வேண்டும் .இக்கல்வி நிலையத்தின் மூலம் மாணவர் உச்சப்பயனடைய வேண்டும் என்றும்  நவீன உலகமயமாக்கல் கல்வியில் ஆங்கிலமொழியின் அவசியம் பற்றியும் வருகை தந்த அதிதிகளால் மாணவர்களுக்கு நல்லதொரு உதாரணங்கள் மூலம் மிகத் தெளிவாக உரையாற்றப்பட்டது.

இதே வேளை மாணவருக்கு செயற்பாட்டுரீதியான வாசிப்புக்கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும். ஆங்கில வாசிப்பை விருத்தி செய்யத் தவறினால் பிள்ளைகள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும்

01 பாடங்களை கற்க முடியாமை

02 பரீட்சையில் விடையளிக்க முடியாமை  

03கல்வியில் பின் தங்குதல் 

04 மனவெழுர்ச்சிப் பிரச்சினைகள்

போன்றன ஏற்பட்டு பிள்ளைக்கு   கல்வியில் வெறுப்பு ஏற்படும் பாடசாலையிலிருந்து பிள்ளை பின்னடையக்கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று கல்விமாணி ஹுஸைன்தீன் அவர்களால் உரையாற்றப்பட்டது.

மேலும் இன் நிகழ்விற்கு பெற்றோர் நலன்விரும்பிகள் மாணவர்கள் பொது மக்கள்என அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.