Thursday, July 26, 2018

ஹிஸ்புல்லாஹ்வின் துரித முயற்சியினால் அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட 128 பேருக்கு 182 மில்லியன் நட்டஈடு வழங்கி வைப்பு....


26.07.2018

2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்டு பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ருபாய் நட்டஈடு இன்று வியாழக்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்ற நட்டஈடு வழங்கும் நிகழ்வில், சுகாதாரம், போசனைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் காதர் மஸ்தான், புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது, 2014ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக சமர்ப்பித்தார்.

அதற்கமைய முதற்கட்டமாக கலவரத்தில் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் வீதமும், காயமடைந்த 12 பேருக்கும் தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், சிறியளவு சொத்துக்களை இழந்த 84 பேருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதமும் நட்டஈடு கடந்த மார்ச் 22ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு மீண்டும் அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டதுடன் புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கு 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

அதற்கமைய இன்று வியாழக்கிழமை அவர்களுக்கான நட்டஈடு வழங்கி வைக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment