Tuesday, July 31, 2018

கல்வி அமைச்சுக்கு எதிராக பெற்றோர் வழக்கு தொடர முடியும்

August 1, 2018

பாடசாலைகளுக்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால் கல்வியமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடுத்து தகைமையுள்ள ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமை பெற்றோருக்கு உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் இதற்கான வாய்ப்பு பெற்றோருக்கு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். காலி கிந்தோட்டை ஷாஹிரா கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்: கடந்த காலங்களில் மாணவர்கள் அல்லது பாடசாலைகளின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை.

மாறாக அரசியல்வாதிகளின் தேவைகளுக்கு ஏற்பவே பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன் காரணமாகவே பாடசாலைக் கல்வி பெரும் பாதிப்புக்குள்ளானது.

தாம் கல்வி அமைச்சராக கடமையாற்றிய காலப்பகுதியில் பரீட்சைகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஸ்தாபிக்கப்பட்டன. எனினும், அரசியல் இலாபம் கருதி செயற்பட்ட சிலரால் தற்போது பல பாடசாலைகளில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

ஒரு பட்டதாரி பாடசாலை ஆசிரியராக நியமிக்கப்பட்டாலும் அவர் முறையான பயிற்சி பெறுவது அவசியம். சீர்குலைந்துள்ள பயிற்சி நிறுவகங்களை மறுசீரமைத்து அவற்றை முறையாக இயங்கச் செய்வது கட்டாயமானது.

அதேவேளை கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக புதிய சட்ட திட்டங்களை அமுலாக்க வேண்டியது அவசியமெனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய திட்டம்

01.08 2018

அதிவேக நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வனப்பகுதிகளை உருவாக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் வழிநடத்தல் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அனுர மான்னப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டபோது அழிக்கப்பட்ட வனப்பகுதிகளை மீள உருவாக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, காய்க்காத மரங்களை நடுவதற்கு இராணுவத்தினருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் அனுர மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலிடத்தில்..! எதில் தெரியுமா?

, 31 JULY 2018

குழந்தைகள் பிறந்ததும் விரைவாக தாய்பால் ஊட்ட ஆரம்பிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள 76 நாடுகளின் ஆய்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 90.3 சதவீதமான குழந்தைகளுக்கு, பிறந்த சில கணத்திலேயே தாய்ப்பால் ஊட்டப்படுகிறது.

இலங்கை, புருண்டி மற்றும் வனாட்டு ஆகிய நாடுகளில் 10ல் 9 குழந்தைகளுக்கு பிறந்து ஒரு மணி நேரத்துக்குள் முதன்முறையாக தாய்ப்பால் ஊட்டப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரில் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கான போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு….!


JULY 31, 2018

கத்தார் போக்குவரத்துறை கோடைகாலத்தை மையமாக வைத்து Accident-Free Summer என்ற தலைப்பில் பல்வேறு போக்குவரத்து துறை விளிப்புணர்வுகளை ஏற்படுத்து வருவது அறிந்தே. அந்த வகையில் போக்குவரத்துத் துறை புதிய அறிவிப்பு ஒன்று (29.07.2018) வெளியிட்டுள்ளது.

கத்தாரில் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களை செலுத்துகின்ற குற்றம் அதிகளவில் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2018ம் ஆண்டில் காலண்டில் நுற்றுக்கும் மேற்பட்ட சாரதிகள் வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் இன்றி சிக்கியுள்ளனர்.

நான்காரவது வாரத்தை எட்டியுள்ள Accident-Free Summer விளிப்புணர்வு முதல் வாரத்தில், மஞ்சல் பெட்டிக்குள் வாகனத்தை நிறுத்துல் தொடர்பாகவும், இரண்டாவது வாரத்தில், வாகனங்களை செலுத்தும் போது கையடக்கத் தொலைபேசி பாவித்தல் தொடர்பாகவும், கடந்த மூன்றாவது வாரத்தில் சீட்பெல்ட் அணிதல் பற்றியும் வலியுறுத்தப்பட்டன.

இந்த நான்காவது வாரத்தில் முறையான வாகன அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துல் பற்றிய விளிப்புணர்வுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் படி வாகன ஓட்டுநர் அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளவர்கள் கட்டாயமாக எந்நேரமும் தங்களுடன் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உரிய அனுமதிப்பத்திரத்தின் பிரதிகள் (PHOTO COPY) போக்குவரத்துப் போலிஸாரால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பதாகவும்,  மேலும் போக்குவரத்து குற்றம் பதிவு செய்யப்படும் என்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர், உயிரிழப்பு…!

JULY 31, 2018

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில் இருந்து வெளியே சென்ற குடும்பஸ்தர் , மீண்டும் வீடு திரும்பியதும் வாந்தி எடுத்துள்ளார். அத்துடன் மிகுந்த சோர்வு நிலையிலும் இருந்துள்ளார்.

அது குறித்து அவரது மனைவியை விசாரித்த போது , வரும் வழியில் அலரி விதையை உண்டதாகவும் , அதனை சாப்பிட்டால் என்ன நடக்கும் என அறிவதற்காகவே அதனை சாப்பிட்டதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார்.

அதனை அடுத்து அவரது மனைவி அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த இறப்பு தொடர்பிலான மரண விசாரணைகளை யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் ,மரண விசாரணை அதிகாரி ந. பிரேம்குமார் மேற்கொண்டார்.

மு.கா தலைவர் அறைந்தால் மாறி அறைவேன்! அரசியலில் இருந்து துரத்த சதி…!!

JULY 31, 2018

முகா இருவரின் ஆதங்கமும் ஆவேசமும்…!

முகா தலைவர் – எனக்கு அறைந்தார் என்பது உண்மைக்கு முரனானது. அவ்வாறு அறைபடுவதற்கு நான் என்ன முட்டாளா? அறைந்திருந்தால் மாறி அறைந்திருப்பேன் எனக் கூறுகின்றார் அண்மையில் தாருஸ்ஸலாமில் அறை வாங்கியதாக கூறப்படும் முகா எம்பி.

இது குறித்த எம்பி தரப்பினரின் ஆவேசம். ஆனால் முகா தலைவர் தரப்பு இப்படிக் கூறுகின்றது.

தலைவர் ஹக்கீம் அந்த எம்பியை அழைத்து – எம்பி பதவியை இராஜினாமா செய்யுமாறு கூறினார்.

அதற்கு அந்த எம்பி , யாருக்கு வழங்கப்போகின்றீர்கள் என்று கேட்டார்.
அதற்கு தலைவர்- ஹாபிஸ் நஸீருக்கு வழங்கப்போகின்றேன் என்றார்.

நீங்கள் யாருக்கு வழங்கினாலும் பிரச்சினையில்லை.நான் இராஜினாமா செய்யமாட்டேன் என்றார் அந்த எம்பி. நீங்கள் எனது ஊருக்கு செய்யும் துரோகம் எனவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த தலைவர்; கிழக்கு மாகாண சபைத் தேர்தல் வரையும்தான் எம்பி பதவி. அதற்கான அறிவிப்பு வந்தால் இராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதானே ஒப்பந்தம். பொலநறுவையில் வைத்து நமக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டு விட்டு இப்போது மறுப்பது நியாயமில்லை என்றார்.

பின்னர்,இருவருக்குமிடையில் கருத்து மோதல் உச்சத்தை தொட்டவேளை, திடீரென குறித்த எம்பி – அதாவுள்ளாவுடன் அல்லது றிஷாதுடன் இணைவேன் என்ற போதுதான் தலைவர் – அந்த எம்பிக்கு அறைந்தார். அறைந்தது நூற்றுக்கு நூறு உண்மை என்றனர்.

அம்பாரை மாவட்ட முகா எம்பிக்களில் மற்றொருவர்- தனக்கு மாவட்டத்திலுள்ள மற்றைய மூன்று முகா எம்பிக்களால் சதி மேற்கொள்ளப்படுவதாக தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அரசியலிலிருந்து என்னை துரத்துவதே இவர்களின் இலக்கு என்று ஆதங்கப்பட்டுள்ளார். இது தொடருமாயின் மாற்று கட்சியொன்று தொடர்பில் சிந்திக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த எம்பிக்கு “முயல்” என்றால் ரொம்பப் பிடிக்கும்.

(ஏ.எச்.எம்.பூமுதீன்)
Kalmunai today

கருணாநிதி உடல்நலக் குறைவால் அவதியுற்று வருவதால், மன வருத்தத்தில் தொண்டர் தூக்கிட்டு தற்கொலை….!

JULY 31, 2018

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் அவதியுற்று வருவதால், மன வருத்தமடைந்த திமுக தொண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே பொதட்டூர்பேட்டை அடுத்துள்ள வாணிவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்கன்(65). திமுகவின் தீவிர தொண்டரான இவர், திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதை அறிந்து மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கங்கன் தன் மன வருத்தத்தை நண்பர்கள், உறவினர்களிடம் பகிர்ந்து கொண்டபோது, ‘தலைவர் உயிர் போனால், நானும் உயிரோடு இருக்கமாட்டேன்’ என, தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை, வாணிவிலாசபுரம், பள்ளிப்பட்டு- பொதட்டூர்பேட்டை சாலை அருகே உள்ள மரத்தில் கங்கன் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். கங்கன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கங்கன் தற்கொலை குறித்து, பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட தளபதி - "சர்கார்" இல் சம்பவம்..

31.07.2018

ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பிற்கு மத்தியில், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் "சர்கார்" படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் 'தளபதி' விஜய்.

தமிழ்நாட்டில் அரசியல் குழப்பநிலை காணப்படும் தற்போதைய நிலையில், அரசியல் சார்ந்த ஒரு திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் 'சர்கார்" திரைப்படத்தில் விஜய் நடிப்பது எல்லோரிடத்திலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏனெனில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை 'தளபதி' விஜய்க்கும் உள்ளதன் காரணத்தினால் "சர்கார்" படத்தின் வருகை தமிழக அரசியல் வட்டத்திலும் கவனிப்பைப் பெறுவதற்குத் தவறவில்லை.

தற்போது "சர்கார்" படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படப்பிடிப்பு பற்றி அறிந்துகொண்ட அப்பகுதியிலுள்ள விஜய் ரசிகர்கள், படப்பிடிப்பு தளத்துக்கு படையாக வந்ததுடன் 'தளபதி' விஜய்யை சூழ்ந்து நின்று மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கோஷமிட்டு தமது பேரன்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தனது ரசிகர்கள் வெளிக்காட்டிய அன்பினால் மனம் நெகிழ்ந்து போயுள்ளாராம் தளபதி.

பகிடி வதைக்கு 10 வருட கடூழிய சிறை, சட்டம் அமுல்; உயர் கல்வி அமைச்சர்

July 31, 2018

பகிடிவதைகளில் ஈடுபடும் சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிணை வழங்குவதற்கு சட்டத்தில் இடம் வழங்கப்படவில்லையெனவும், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு 10 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்க முடியும் எனவும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கல்வி நிறுவனங்களில் பகிடிவதைகள் மற்றும் ஏனைய வன்முறைகளிலிருந்து பாதுகாப்பது தொடர்பான 1998 ஆண்டு 20ஆம் இலக்க சட்டத்தின் கீழ் இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்றுய(30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

பகிடிவதைக்கு எதிரான சட்டம் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்பொழுது இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளோம். இந்தச் சட்டத்துக்கு எதிராக நடந்துகொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, சகல பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு நாளை


July 31, 2018 

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நாளை நடைபெறவுள்ளது.

இது தொடர்பான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தேர்தலை நடத்தும் விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்கு- கூட்டு எதிர்க் கட்சி தீர்மானம்

July 31, 2018

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இருக்கும் நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்தாமல் பிற்போட்டு வரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அமர்வுகள் இவ்வாரத்துடன் நிறைவடைவதாகவும் புதிய அமர்வு ஆரம்பிக்கும் ஆகஸ்ட் மாதத்தில் இவ்வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான திகதி அறிவிப்பு

July 31, 2018

அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் இரண்டாவது தவணை 2018 ஆகஸ்ட் 03ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணை 2018 செப்டம்பர் மாதம் 03ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாவது கட்டம் 2018 ஆகஸ்ட் 20ம் திகதியுடன் நிறைவடைவதாகவும், மூன்றாம் தவணை ஆகஸ்ட் 27ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Monday, July 30, 2018

வடக்கு, கிழக்கில் 25,000 வீடுகளை உடனடியாக நிர்மாணிக்க தீர்மானம்

July 31, 2018

ஜனாதிபதி மேற்பார்வையில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக முன்னெடுக்க முடிவு

வடக்கு, கிழக்கில் 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 25,000 வீடுகளின் நிர்மாணப்பணிகளை அடுத்த மாதத்திலிருந்து (ஓகஸ்டில்) ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதேநேரம், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, 1847 கி.மீ. தூர பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வாழைச்சேனை கடதாசி ஆலை, அம்பாறை சீனித்தொழிற்சாலை, நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் ஆரம்பிக்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி செயலணி நேற்று (30) ஜனாதிபதி தலைமையில் முதற் தடவையாகக் கூடியது.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாகவும் வினைத்திறனாகவும் மேற்கொண்டு மக்களுக்கு துரித நன்மைகளை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்பவும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் அரசாங்கத்தினால் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பாரிய பங்களிப்பு வழங்கப்பட்டுள்ள போதிலும் அது தொடர்பில் மக்களுக்கு போதியளவு புரிந்துணர்வு கிடைக்கப்பெறவில்லையென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்திற்கு சாதகமான பெறுபேறு கிடைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

26 வருட யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்குமாகாணங்களில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி செயற்பாடுகளையும் பின்னடைவுக்குள்ளாகியுள்ள மக்களின் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்பி நாட்டின் ஏனைய மாகாணங்களைப் போன்றே அவ்விரு மாகாணங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமையளித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2018 ஜூன் 05ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஜனாதிபதியினால் இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார்.

இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரும் மேலும் 15 அமைச்சரவை அமைச்சர்களும் இரு மாகாணங்களின் ஆளுநர்களும் முதலமைச்சர்களும் சில அமைச்சுக்களின் செயலாளர்களும் முப்படை தளபதிகளும் செயற்படுகின்றனர்.

இந்த ஜனாதிபதி செயலணியினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியப்படுவதுடன், நடைமுறைப்படுத்த வேண்டிய புதிய செயற்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடப்படும். முன்னுரிமையளிக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து குறித்த துறைகளையும் குழுக்களையும் இலக்காகக் கொண்டு புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு மேல் மாகாணத்தினால் 40 சதவீத பங்களிப்பு வழங்கப்படுவதுடன், வட மாகாணத்தினால் 4 சதவீதமும் கிழக்கு மாகாணத்தினால் 6 சதவீதத்துக்கும் குறைந்த பங்களிப்பே வழங்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 வீடுகளின் நிர்மாணப் பணிகளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலும் 10,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இரு மாகாணங்களிலும் 1847 கிலோமீற்றர் அளவிலான பாதை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம், மயிலிட்டி, மீன்பிடித்துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரு மாகாணங்களிலும் கிராமிய பாதைகள், குடிநீர் வசதி, நீர்ப்பாசனம், விவசாயம், பொருளாதார நிலையங்கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சகல உட்கட்டமைப்பு வசதிகளிலும் விரிவான அபிவிருத்தியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக விரிவான வேலைத்திட்டமொன்றினை செயற்படுத்துவதுடன், அம்பாறை சீனி தொழிற்சாலை, மட்டக்களப்பு கடதாசி தொழிற்சாலை மற்றும் நெல் ஆலை ஆகியவற்றை மீண்டும் தாபித்தல் உள்ளிட்ட கைத்தொழில் துறை மறுமலர்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

துரிதமாக நடைமுறைப்படுத்தப்படும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களினூடாக இவ்விரு மாகாணங்களின் மக்களின் வாழ்க்கையிலும் துரித மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ராஜித்த சேனாரத்ன, சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, துமிந்த திசாநாயக்க, கபீர் ஹாசிம், ரிஷாட் பதியுதீன், டி.எம்.சுவாமிநாதன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, வடக்கு, கிழக்கு மாகாண பிரதம செயலாளர்கள், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் வீ.சிவஞானசோதி, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்களும் அரச அதிகாரிகளும் பாதுகாப்புத் துறை பிரதானிகளும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

நமது நிருபர்
Dhinakaran