July 11, 2018
மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்,விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும்,மரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்பநடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடைiயை விதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தின் வேறு பல நாடுகள் ஈவிரக்கமற்ற இந்த நடைமுறையை பின்பற்றியவேளை இதனை கைவிட்டதன் மூலம் இலங்கை முன்மாதிரியாக விளங்கியதுடன் தலைமைத்துவம் வகித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பல உலகநாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள தருணத்தில் இலங்கை பிழையான திசையில் பயணிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரமான இந்த நடைமுறையை பின்பற்றும் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைந்து கொள்ள முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment