Saturday, July 14, 2018

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு


14.07.2018

மக்களை ஏமாற்றுவதற்காக போலியான பிரசாரங்களை மேற்கொள்ளாமல், நிலவும் பிரச்சினைகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு, நிதி அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.

நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, விலை சூத்திரம் தொடர்பில் முழுமையாக திரிபுபடுத்தப்பட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

இந்த நிலையில், மறைந்திருந்து விமர்சனங்களை முன்வைக்காமல், நேரடியாக சந்தித்து, குறித்த விடயம் தொடர்பான உண்மைத் தன்மையை மக்கள் அறிந்துகொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் மாதாந்தம் விலைச் சூத்திரத்திற்கு அமைய புதிய விலை அறிவிக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், குறித்த ஊடக சந்திப்பில் மரண தண்டனை தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், மரண தண்டனை அமுலில் இருக்கும் எந்த நாட்டிலும் குற்றச் செயல்கள் குறைவடையவில்லை எனக் கூறியுள்ளார்.

மனித கொலைகளை செய்வதைவிட, சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வாகும்.

இரண்டாம் தர போதைப்பொருள் வர்த்தகர்களே சிறைச்சாலைகளில் உள்ளனர்.

முதல்தர போதைப்பொருள் வர்த்தகர்கள், சிறந்த லயன்ஸ் கிளப்கள், ரொட்டரி கிளப்கள் மற்றும் பௌத்த அமைப்புக்களில் தலைவர்களாக, பிரதான போதகர்களாகவும் உள்ளனர் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment