Thursday, July 12, 2018

விஜயகலா தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் நடவடிக்கை

12 JULY 2018

பதவி விலகிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், நாட்டின் சட்டத்திற்கு அமைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார மற்றும் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவர் ஊடகங்களை சந்தித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது.

அத்துடன், காவல்துறை மா அதிபருக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்தநிலையில், குறித்த விடயத்தில் நாட்டின் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டம், ஒழுங்கு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இராணுவம் நிலைகொண்டுள்ளது என்பது வடக்கு மாகாணத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் அல்ல என்று, சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நலின் பண்டார இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் இராணுவத்தின் பிரசன்னம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவசர மற்றும் அனர்த்த நிலைமைகளுக்காக வடக்கிற்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நாடு ழுழுவதும் இராணவத்தினரை நிலைநிறுத்துவது கட்டாயமானதாகும்.

போர்க் காலத்தில் வடக்கில் இராணுவத்தினால் பாரிய சேவை நிகழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், காவல்துறையினருடன்தான் பொது மக்கள் நாளாந்தம் இணைந்து செயற்படுகின்றர்.

இந்த நிலையில், காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் அவர்களுக்கான வளங்களை வழங்குவதன் ஊடாக பிரதேசத்தின் அமைதியும் சட்டமும் பாதுகாக்கப்படுவதுடன், போதைப் பொருள் உள்ளிட்ட ஏனைய குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று சட்டம் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியமானது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மணல் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல், வாள் வெட்டு சம்பவம் உள்ளிட்ட வன்முறைகள், கையூட்டல் பெறுதல், ஊழல் மோசடிகள் உள்ளிட்ட எவ்வாறான குற்றச் செயல்களாக இருந்தாலும், அதனை அறிந்த மக்கள் காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டும்.

இதனூடாகவே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறினார்.

அதேநேரம், காவற்துறையினருக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்பதற்காக தாம் தமது கைப்பேசி இலக்கங்களை பொதுமக்களுக்கு வழங்கி இருப்பதாகவும் கூறியதுடன், 071 859 1002 மற்றும் 071 758 2222 முதலான இரண்டு தொலைபேசி இலக்கங்கயுடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

HiruNews

0 comments:

Post a Comment