July 13, 2018
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வர்த்தக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை மேலும் பலப்படுத்த இருநாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைத் தந்த தாய்லாந்து பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வரவேற்றதுடன், இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மரியாதை வேட்டுக்கள் முழங்க மகத்தான வரவேற்பும் வழங்கப்பட்டது.
இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் இருதரப்பு கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின.
இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான நான்கு புதிய புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இதன்போது அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
சட்ட விரோதமான ஆள்கடத்தலுக்கு எதிரான சட்ட ஏற்பாடுகளுடன் தொடர்புடைய புரிந்துணர்வு உடன்படிக்கை முதலாவதாகக் கைச்சாத்திடப்பட்டதுடன், அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் தாய்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
தாய்லாந்து அரசரால் பிரபல்யப்படுத்தப்படும் அளவீட்டு பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பேண்தகு சமூக அபிவிருத்தி மாதிரி தொடர்பான ஒன்றிணைந்த செயற்திட்டம் பற்றிய உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது.
அதேபோன்று ஆரம்பக் கைத்தொழில் உற்பத்திகளின் பெறுமதிசேர் நடவடிக்கையுடன் தொடர்புடைய தொழில்நுட்பம் பற்றிய உடன்படிக்கை தாய்லாந்தின் Kasetsart பல்கலைக்கழகத்திற்கும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)
0 comments:
Post a Comment