July 13, 2018
மலேசியா, நைஜீரியா ஆகிய நாடுகளுடனும் உரையாடல்
* ஒரு அழைப்புக்கு ரூ.2000 அறவீடு
* இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளை சீர்திருத்த கூடங்களாக மாற்ற வேண்டும்
வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள தண்டனை விதிக்கப்பட்ட சிறைக்கைதிகள் கடந்த மார்ச் மாதம் சிறைக்கூடங்களில் இருந்துகொண்டே வெளியில் 3,950 கையடக்கத்தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக விசேட அதிரடிப்படை, திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எம்.ஆர்.லத்தீப் தெரிவித்தார்.
இவ்வாறு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் ஒரு தொலைபேசி அழைப்புக்கு சிறைக்குள் 2,000 ரூபா வீதம் அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் நேற்று ஏற்பாடு செய்திருந்த 'இலங்கையில் இடம்பெறும் நாடுகடந்த திட்டமிட்ட குற்றச்செயல்கள்- கேந்திர நிலையத்தின் கறுப்புப்பக்கம்' என்ற தொனிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சிறைக்கைதிகள் வெளிநாடுகளுக்கும், நாட்டின் சகல பகுதிகளுக்கும் சிறைக்கூடங்களுக்குள் இருந்தவாறே தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் சராசரியாக 3950 தொலைபேசி அழைப்புக்கள் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து வெளியிலுள்ளவர்களுக்கு எடுக்கப்பட்டுள்ளன. மலேசியா, நைஜீரியா போன்ற நாடுகளுக்கும் இவ்வாறு அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி அந்த மாதத்தில் 360 அழைப்புக்கள் உள்வந்துள்ளன. அழைப்பொன்றுக்கு 2,000 ரூபா வீதம் அறவிடப்படுகின்றமை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இலங்கையில் சிறைக்கூடங்களே காணப்படுகின்றன. சிறைக்கூடங்கள் சீர்திருத்தக் கூடங்களாக மாற்றப்படும்போதே போதைப்பொருள் குற்றவாளிகளைக் குறைக்க முடியும். சிறியதொரு போதைப்பொருள் பாவனைக்காக சிறைக்குச் செல்லும் ஒருவர் வெளியே வரும்போது போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டு வெளியே வருகின்றார். அவர் மீண்டும் போதைப்பொருள் கடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற நிலையே காணப்படுகிறது.
திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கையில் போதியளவு சட்ட ஏற்பாடுகள் இல்லை.
ஏற்கனவே உள்ள சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் இதனைக் கட்டுப்படுத்துவதில் பல்வேறு சவால்கள் இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மகேஸ்வரன் பிரசாத்
தினகரன்
0 comments:
Post a Comment