Wednesday, October 31, 2018

யாரை நம்பி மஹிந்த விசப்பரீட்சையில் இறங்கினார் ? முஸ்லிம் பா. உறுப்பினர்களை நம்பலாமா ?

October 31, 2018
 
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சி அதிகாரத்தின் பக்கமே செல்வார்கள். எதிர்தரப்பு வரிசையில் இருந்து அம்மக்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள். இலகுவில் அவர்களை விலை கொடுத்து வாங்கிவிட முடியும் என்ற பார்வை மாற்று சமூகத்தின் மத்தியில் உள்ளது.

பாராளுமனறத்தில் தனக்கு பெருமான்மை பலம் இல்லை என்று தெரிந்து கொண்டும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பித்தான் மகிந்த ராஜபக்ச அவர்கள் இவ்வாறான “கறணம் தப்பினால் மரணம்” என்ற விசப்பரீட்சையில் இறங்கியிருக்கலாம். 

மகிந்தவின் ஆட்சியில் தனக்கு ஏற்றாற்போல் சட்டத்தை மாற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பாராளுமன்ற பலம் அன்று தேவைப்பட்டது. அதற்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே தனது பார்வையை செலுத்தினார்.

அதாஉல்லாஹ், றிசாத் பதியுதீன் ஆகியோர் தன்னுடன் இருக்கின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரசையும் தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக அதன் தலைவர் ரவுப் ஹக்கீமுடன் மஹிந்த பேசியபோது அவர் பலவித நிபந்தனைகளை விதித்தார்.

அதனால் கடுப்படைந்த ஜனாதிபதி மகிந்த அவர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஆலோசனைக்கு அமைவாக களத்தில் இறங்கினார். 

ஓர் ஜனாதிபதியாக இருந்தும் எந்தவித பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இன்றி மிகவும் இரகசியமான முறையில் அமைச்சர் றிசாத் பதியுதீனோடு அவரது வாகனத்தில் முஸ்லிம் காங்கிரசின் பாரளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களுக்கு தனித்தனியாக சென்று விலை பேசப்பட்டது.

அதில் இறுதியாக ஒரு உறுப்பினரின் இல்லத்துக்கு சென்றபோதுதான் விடயம் தலைவர் ஹக்கீமின் காதுக்கு எட்டியது. அதுவரைக்கும் இந்த டீலிங்கை தலைவர் ரவுப் ஹக்கீம் அறிந்திருக்கவில்லை.

அதனால்தான் கட்சி உடையப்போகின்றது என்ற நிலைமை ஏற்பட்டதனால் வேறுவழியின்றி மகிந்தவுடன் இணைந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை அன்று முஸ்லிம் காங்கிரசுக்கு ஏற்பட்டது.

அன்றுபோல் இன்றும் மகிந்த அவர்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் திரைமறைவு டீலிங்கை ஏற்படுத்தியிருக்க மாட்டார் என்று எவ்வாறு கூற முடியும்? 

அது ஒருபுறமிருக்க, ஆட்சி அதிகாரம் இல்லாவிட்டால் தான் தலைவருமில்லை, கட்சி நடாத்தவும் முடியாது என்பது றிசாத் பதியுதீனுக்கு நன்றாக தெரியும். அதனால் மகிந்தவின் கை ஓங்குகின்ற நிலைமை உறுதிப்படுத்தப்பட்டால், மகிந்தவுடனேயே றிசாத் அவர்கள் இணையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.  

இப்போது மகிந்தவின் கையில் அதிகாரம் இருப்பதனாலும், பணம் வழங்குவதற்கு இலங்கையில் உள்ள சீன நாட்டு தூதரகம் இருப்பதனாலும் எப்படி டீலிங்கை நடத்தமுடியும் என்பது மகிந்த ராஜபக்சவுக்கு தெரியாமலில்லை.

எது எப்படியோ எதிர்வரும் நாட்கள் எமக்கு அனைத்தையும் புரியவைக்கும். அதுவரைக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வார்த்தைகளை நம்பாமல் அவர்களது நகர்வுகளை உற்று நோக்குவோம்.

நன்றி

(முகம்மத் இக்பால் )
Battinews

0 comments:

Post a Comment