Wednesday, October 31, 2018

செவ்வாயக்கிழமை நாடாளுமன்றைக் கூட்டி வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பதாக ஜனாதிபதி,சபாநாயகரிடம் உறுதி..!!

November 1, 2018

நாடாளுமன்றை நவம்பர் 16ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுவதற்கு சபநாயகரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆராய்ந்து உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாயக்கிழமை நாடாளுமன்றைக் கூட்டி பிரதமர் தொடர்பான வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்தார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தகவல்கள் தெரிவித்தன.

புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பநிலையை அடுத்து நாடாளுமன்றை ஒக்டோபர் 27ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 16ஆம் திகதிவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடக்கினார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் அடிப்படையில் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்க முடியாது என்ற அடிப்படையில் அரசியலமைப்புக்கு முராணாக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தவிர்ந்த ஏனைய அனைத்துக் கட்சிகளும் தெரிவிக்கின்றன.

இதனால் அரசியலமைப்பு மீறலையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாண உடனடியாக நாடாளுமன்றைக் கூட்டுமாறு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.\

சபாநாயகருக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நாடாளுமன்றை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை கூட்டுமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதுதொடர்பில் சபாநாயகரால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அந்தக் கடிதத்துக்கு அமைவாக சபாநாயகரை இன்று மாலை 5 மணிக்கு தன்னை சந்திக்க வருமாறு ஜனாதிபதி அழைப்புவிடுத்தார்.

இதன்போது நாடாளுமன்றை உடன் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்திய சபாநாயகர், நவம்பர் 16ஆம் திகதிவரை பிற்போட முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

அவரது யோசனைக்கு இணக்கம் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விரைவில் உரிய அறிவிப்பை வெளியிடவதாக உறுதியளித்தார்.

0 comments:

Post a Comment