Monday, August 20, 2018

மூச்சுத் திணறும், முஸ்லிம் தனியார் சட்டம்

August 20, 2018 

உலகம் என்ற சதுரங்கப் பலகையில் எல்லாத் தரப்பினரும் காய்களை நகர்த்தி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் தாம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தமது திறமைகளை உச்ச அளவில் பயன்படுத்துவதோடு, தமக்கு சார்பானவர்களை தம் பக்கம் திரட்டிக் கொள்வதிலும் அதீத கரிசனை காட்டுகின்றனர்.

இப்படியான சந்தர்ப்பத்தில் ஒருவர் தன் தரப்பில் சக்தி வாய்ந்தவர்களை ஒன்று சேர்க்கிறார், அல்லது அதீத திறமைகளை வெளிப்படுத்துகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆட்டத்தின் விதிமுறைகளை மீறாத வரையில் நீங்கள் மேலதிகமாக செய்கின்ற விடயங்கள் எதுவும் பிழையாகக் கருதப்பட முடியாது. விதிமுறைகளை மீறாத இத்தகைய மேலதிக செயற்பாடுகள் பல போது அடுத்த தரப்பினர்களால் அஜென்டாவாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
சமூக விவகாரங்களில் களத்தில் நிற்கும் எல்லாத் தரப்பினரும் தமது விளக்கத்துக்கும் புரிதலுக்கும் ஏற்ப சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவே விரும்புகின்றனர். தானே சரி என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கின்றது. எனவே, தாம் வெற்றி பெறுவதற்குரிய நடவடிக்கைகளிலேயே அனைவரும் ஈடுபடுவர் என்பது யதார்த்தமாகும்.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்திருத்தம் தொடர்பில் பல மட்டங்களிலும் நடைபெறும் வாதப் பிரதிவாதங்களிலும், பிரச்சாரங்களிலும் ‘அஜென்டா மற்றும் சதித்திட்டம்’ என்பன போன்ற சொற்கள் அதிகம் பாவனையில் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. அர்த்த ராத்திரியில் சேவல் கூவினாலும் ‘யூத சதி’ என்று நினைத்துப் பழகிய பாமரத்தனம் நிறைந்த முஸ்லிம் சமூகத்தை இத்தகைய சொற்களால் மிக இலகுவாக கட்டுப்படுத்தி விட முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

எல்லோருக்கும் பதில் தெரிந்த, ஆனால் யாரும் கேட்காத ஒரு கேள்வி இருக்கின்றது.

இங்கே அஜென்டா இல்லாதவர்கள் யாராவது இருந்தால் தயவு செய்து தங்களை அடையாளப்படுத்த முடியுமா? என்பதே அந்தக் கேள்வி. ‘உங்களில் தப்பு செய்யாதவர் யாரும் இருந்தால் இந்தப் பெண்ணின் மீது கல்லெறியுங்கள்’ என்று யேசுநாதர் கூறியது போலத்தான், அஜென்டா இல்லாதவர்கள் யாராவது இருந்தால் முன்வந்து இந்த முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தைக் கையில் எடுத்து மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்த்து முடித்து விடுங்கள்.

மத்திய கிழக்கின் பணம் கலக்காத இஸ்லாமிய இயக்கங்கள் இருக்கின்றனவா? மதீனாவில் போய் கற்று விட்டு வந்து முக்கியமான இடங்களில் இருக்கும் ஆலிம்களுக்கு இலட்சங்களில் பணம் வருவதில்லையா? தேவ்பந்தில் கல்வி கற்று விட்டு வந்தர்களுக்கு ‘இஸ்லாம் என்றால் இதுதான்’ என்று ஒரு தனியான புரிதல் இல்லையா? மதீனாவில் போய் கற்று விட்டு வந்தவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய தனியான புரிதலொன்று இல்லையா? வெளியே எங்கும் போகாமல் இந்த நாட்டிலேயே நளீமிய்யாவில் போய்க் கற்றவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய இன்னொரு புரிதல் இல்லையா?

இன்றைய உலகம் அஜென்டாக்களுக்கிடையிலான போராட்டத்தில்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அஜென்டா இல்லாத மனிதர்களுமில்லை அஜென்டா இல்லாத நிறுவனங்களுமில்லை, அஜென்டா இல்லாத அரசாங்கங்களுமில்லை. மொத்தத்தில் உங்களிடமும் ஓர் அஜென்டா இல்லாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்வதற்கான தகுதியே உங்களிடமில்லை என்று சொல்கின்ற அளவுக்கு முழு உலகமுமே அஜென்டா மயம்தான்.

எனவே அஜென்டா என்ற சொல் ஒன்றும் நஜீஸான சொல்லுமல்ல, யாருக்கும் பின்னால் அஜென்டா ஒன்று இருக்கின்றது என்பதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் செவ்வாயில் உயிரினங்கள் இருக்கின்றதா என்பதைக் கண்டுபிடிக்குமளவு கஷ்டமானதுமல்ல என்பதை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கற்பனைகளையும், தூய்மைப்படுத்தல்களையும் ஒரு பக்கத்தில் தூக்கி வைத்து விட்டு யதார்த்தமாய் சிந்தித்தால் அனைத்துக்குப் பின்னாலும் அஜென்டாக்கள் இருப்பதை எம்மால் கண்டுகொள்ளவும் முடியும், அந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியும்.

இன்றைய உலகில் அஜென்டாக்கள் எவ்வாறு தொழிற்படுகின்றன?, அவற்றுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நமது அஜென்டாவை எவ்வளவு பலமானதாக மாற்றிக் கொள்வது?, எப்படி எமக்கெதிரான அஜென்டாக்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் கவனமாகப் பயணிப்பது?, எப்படி அடுத்தவர்களது அஜென்டாவை எமது அஜென்டாவுக்கு சார்பானதாகப் பயன்படுத்திக் கொள்வது?, எப்படி அடுத்தவர்களுடைய அஜென்டாவின் இறுதி இலக்குகளை எமக்கு சார்பானதாக மாற்றிக் கொள்வது?, என்பவற்றைப் பற்றி சிந்தித்து வியூகங்கள் வகுத்து நிதானமாகக் காய் நகர்த்தாமல், அடுத்தவர்களுக்கு அஜென்டா இருக்கின்றது என்று குற்றம்சாட்டுவது இன்றைய உலக அரங்கின் ஆட்ட விதிமுறைகள் பற்றிய அறியாமையால் ஏற்படுகின்ற விளைவாகும்.

ஒரு குழுவில் ஒரு ஃபெமினிஸ்ட் ஒரு லிபரலிஸ்ட், ஒரு செக்யூலரிஸ்ட் அங்கம் வகிப்பதை எப்படி ஒரு தரப்பினர் அஜென்டாவாகப் பார்க்கிறார்களோ, அவ்வாறே ஒரு குழுவில் ஒரு தேவ்பந்தி அல்லது ஒரு மதனி அல்லது ஒரு நளீமி அங்கம் வகிப்பதையும் இன்னொரு தரப்பினர் அஜென்டாவாகத்தான் பார்க்கின்றனர். எப்படி தீவிர லிபரல் அஜென்டாவுக்குள் முஸ்லிம் உலகை வளைத்துப் போட மேற்குலகம் எத்தனிக்கிறதோ, அப்படியே தீவிர பழைமைவாத அஜென்டாவுக்குள் முஸ்லிம் உலகை வளைத்துப் போட பல அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தீவிரமாக எத்தனிக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் நமது மார்க்க விழுமியங்களையும் சுதேச கலாச்சாரங்களையும் மையப்படுத்திய கலந்துரையாடல்களே எமது தேவையாக இருக்கின்றது. அதுதான் எமது அஜென்டாவை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுமாகும். மார்க்கத்தின் விழுமியங்களும் சுதேச கலாச்சாரங்களும் இரண்டறக் கலக்கின்ற இடத்தில்தான் மார்க்கத்தின் எல்லைக் கோடுகள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே அஜென்டாக்கள் பற்றி பேசுவதில் எமது நேரத்தை விரயமாக்காமல், வினைத்திறன் மிக்க மாற்றுத் திட்டங்களை வகுத்து, இறுதி இலக்கை நமக்கு சார்பானதாக மாற்றிக் கொள்ளும் வகையில் வியூகமமைத்து நாம் ஓர் அஜென்டாவுடன் செயற்படுவது இந்த சமூகத்தின் மீது ஃபர்ழு கிஃபாயாவாகும். போதுமானவர்கள் அதனை செய்யாதவிடத்து முழு சமூகமும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டி வரும் என்பதில் சந்தேகமில்லை.

எமக்கு ஓர் அஜென்டா இருக்க வேண்டும் என்பதன் அர்த்தம் என்ன?

எமது அஜென்டா என்பதன் அர்த்தம் இந்த MMDA விவகாரத்தில் இப்போதைக்கு எதனை சாதித்து விடப் போகிறோம் என்பதிலல்ல தங்கியிருக்கின்றது.
மாற்றமாக, இலங்கை முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய முழுமையான பார்வையும் நோக்கும் எம்மிடம் இருக்க வேண்டும். அது இந்த சமூகத்தின் இருப்பு, கல்வி, பொருளாதாரம், அரசியல், கலைகள், உறவுகள், பண்பாடுகள் என அனைத்தையும் தழுவியதான முழுமையான பார்வையாக இருக்க வேண்டும். அப்போதுதான் இலங்கை முஸ்லிம் சமூகம் என்ற பரந்த சட்டகத்தில் MMDA என்ற அம்சத்தை எங்கு பொருத்த முடியும் என்பதை எம்மால் தீர்மானிக்க முடியுமாக இருக்கும். அப்படி இருந்தால்தான் இந்த MMDA விவகாரத்தில் எந்தளவு தூரம் நெகிழ்வாக நடந்து கொள்வது, எந்தளவு தூரம் இறுக்கமாக நடந்து கொள்வது என்பதனை எம்மால் கச்சிதமாகத் தீர்மானிக்க முடியுமாக இருக்கும். ஏனெனில் லிபரல் உலகின் அஜென்டா அப்படியொரு Big Picture உடன்தான் தொழிற்படுகின்றது. எனவே எமக்கொரு Big Picture இல்லாமல் நாம் விடயங்களை வெறுமனே Case by case அணுகுவோமென்றால் நாம் வெகு சீக்கிரத்தில் எம்மையுமறியாமல் அவர்களது அஜென்டாவுக்கேற்ப வேலை செய்ய ஆரம்பித்து விடுவோம் என்பதே யதார்த்தமாகும்.

அவ்வாறான நிலைமையை மேற்குலகில் இன்று காண முடியுமாக இருக்கின்றது. குறிப்பாக ஃப்ரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இதன் தாக்கத்தை அதிகம் காணலாம். மேற்குலக முஸ்லிம்களுக்கான Big Picture ஒன்றுடன் அனைத்துத் தரப்பினரின் அஜென்டாவுக்கும் ஈடுகொடுக்கும் அஜென்டாவொன்று அவர்களிடம் இல்லாததன் காரணமாக, அல்லது அத்தகைய அஜென்டாவுக்கான முன்மொழிவுகளோடு வருபவர்கள் ஓரங்கட்டப்படுவதன் காரணமாக இன்று இரண்டு தீவிரங்கள் அங்கு உருவாகி வளர்வதைக் காண முடியுமாக இருக்கின்றது. ஒரு பக்கத்தில் இஸ்லாமே வேண்டாம் என்று லிபரலிஸத்துக்கு கொடி பிடிக்கும் Ex-Muslims என்ற புதிய தரப்பினர் உருவாகி இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்துகின்றனர்.

இன்னொரு பக்கத்தில் அவர்களது வாதங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இஸ்லாத்தை பிற்போக்கான, இறுக்கமான, நெகிழ்வற்ற ஒன்றாக அறிமுகப்படுத்தும் கடும் போக்காளர்கள் அதிகரித்துச் செல்கின்றனர். இங்கே அஜென்டாவுடன் வேலை செய்த லிபரலிஸம் வெற்றி பெற்று, Big Picture உடன் கூடிய அஜென்டா இன்றி களத்தில் நின்ற முஸ்லிம்களால் இஸ்லாம் தோல்வியடைகின்றது. முஸ்லிம்கள் ஏனைய அஜென்டாக்களுக்குள் சிக்கி சின்னாபின்னப்படுகின்ற நிலை தோற்றம் பெற்று விடுகின்றது.

இந்த விவகாரத்தில் Big Picture ஒன்று இல்லாமல் களமிறங்கி, முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்திருத்த முன்மொழிவுகளின் பின்னால் ஃபெமினிஸ்ட் மற்றும் செக்யூலரிஸ்ட் அஜென்டாக்கள் தொழிற்படுகின்றன என்ற பிரச்சாரம் வெற்றி பெற்று அடுத்த தரப்பினரின் பிரேரணைகள் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்படுகின்றன என்றோ அல்லது இருக்கின்ற சட்டமே போதும் என்றோ தீர்மானம் வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆட்டம் அத்துடன் சுமுகமாக முடிந்து விடுமா?!

இல்லை நிச்சயமாக இல்லை. ஆட்டம் அதன் பிறகுதான் ஆரம்பமாகும். இப்போது ஷரீஅத்துக்கு உட்பட்டதா இல்லையா என்று, கருத்து வேறுபாடுள்ள மார்க்கத் தரப்புக்களுக்கு மத்தியில் நடைபெறும் வாத விவாதங்கள் அனைத்தும் ஒரே தட்டில் வைக்கப்பட்டு, இஸ்லாமா? லிபரலிஸமா? என்ற கட்டத்துக்கு இந்த விவாதம் நகர்த்திச் செல்லப்படும். இலங்கையின் எல்லைகள் தாண்டி சர்வதேசத் தளங்களில் உலக அரங்கில் செல்வாக்குப் பெற்ற நிறுவனங்களாலும் அமைப்புக்களாலும் ‘இலங்கையில் பரவும் முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கெதிராகவும் தீவிரவாதத்துக்கெதிராகவும் எழுந்து நில்லுங்கள்!’ என்ற கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். சர்வதேச அழுத்தங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்பட்டு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் சரி, இஸ்லாமிய இயக்கங்களும் சரி, கல்வி நிறுவனங்களும் சரி, தேவ்பந்தி, மதனி, நளீமி பாகுபாடில்லாமல் அனைவரும் ஒரே தராசில் நிறுக்கப்பட்டு தடைகள் பிறப்பிக்கப்பட்டு பொம்மைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்ற நிலை தோன்றும்.

அந்த சந்தர்ப்பத்தில் எந்த அஜென்டாவைக் காட்டி இன்று அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றோமோ அதே அஜென்டாவுக்கு கூஜா தூக்கினால்தான் சுதந்திரமாக நடமாட முடியும் என்ற நிலை தோன்றும், அவ்வாறில்லாத போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் இறுதிக் காலத்தைக் கழிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். இதுவெல்லாம் சும்மா பயங்காட்டும் பூச்சாண்டிக் கருத்துக்கள் என்று நீங்கள் நினைத்தால் தயவு செய்து உலகத்தில், குறிப்பாக மேற்குலகில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதைக் கொஞ்சம் எட்டிப் பாருங்கள், அப்போது நாங்கள் மிகவும் குறைவாகவே சொல்லியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவ்வாறு அந்த அஜென்டா தொழிற்பட ஆரம்பித்தால் அதற்கெதிராக நின்று பிடிக்கின்ற அளவுக்கு இங்குள்ள யாரிடமும் போதுமான பலம் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

எனவே குறைந்த இழப்புகளோடு எப்படி நமக்குத் தேவையானதை சாதிப்பது என்ற ரீதியிலேயே நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கு எண்ணிக்கையில் நாம் அதிகமாக இருப்பதால் எப்படியாவது நம்மால் இதனை சாதிக்க முடியும் என்று நாம் தப்புக் கணக்கு போடாமலிருப்பது சிறந்தது. ஏனெனில் இப்போது சாதாரணமாக நடைபெறும் இந்த ஆட்டம் நாளை உலக அரங்கில் நடைபெறும் சந்தர்ப்பத்தில், இதன் அடுத்தடுத்த கட்டங்களில் முழு லிபரல் உலகமும் நமக்கெதிராக நிற்கும் போது இன்று பெற்றுக் கொண்ட கொஞ்சத்துக்காக வேண்டி நாளை அதிகமாக இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.

அந்த வகையில் எமக்குத் தேவை ஒரு தற்காலிக நிம்மதிப் பெருமூச்சும், தற்காலிக சந்தோஷமுமல்ல. மாற்றமாக தற்காலிக அதே நேரம் மூலோபாய ரீதியான பின்வாங்கல்களும் நிரந்தர நிம்மதியுமே எமக்குத் தேவையாக இருக்கின்றது (ஹுதைபிய்யா உடன்படிக்கை பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்). உலகம் என்ற சதுரங்க ஆட்டக் களத்தில் நிதானத்துடன் கூடிய வேகமும் புத்திசாதுரியமும், நுணுக்கமும், உரிய திட்டமிடலும், மாற்றுத் திட்டமிடல்களும் உள்ளவனே வெற்றி பெறுவான், வெறும் உணர்ச்சிப் பிழம்பால் உந்தப்பட்டு கொதித்து நிற்கின்றவன் முகவரியில்லாமல் போய் விடுவான் என்பது இறை நியதியாகும். அந்த இறை நியதிகள் இஸ்லாமிஸ்ட், லிபரலிஸ்ட் பார்த்துத் தொழிற்படுவதில்லை என்பதும் அவை அனைவருக்கும் பொதுவான நியதிகளாகும் என்பதும் நாம் அறிந்த விடயங்களே!

இப்படி நாம் நமது அஜென்டாவை கச்சிதமாக வடிவமைத்து முன்னேறுவோமாக இருந்தால், உலகின் எந்தப் பெரிய அஜென்டாவாலும் எம்மை எதுவும் செய்துவிட முடியாது என்பதை அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் உத்தரவாதப்படுத்துகிறான். ”அவர்கள் இரவில் கண்விழித்து தீட்டும் சதித்திட்டங்களை அல்லாஹ் எழுதி வைக்கிறான். எனவே நீங்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளாமல், அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து பயணியுங்கள்” (அந்நிஸாஃ – 81) என்பதாக அந்த உத்தரவாதம் அமைந்திருக்கின்றது.

அதாவது உங்களுக்கு ஒரு பாதையும் அதில் முழுமையான பார்வையுடன் கூடிய பயணமும் இருக்குமானால் நீங்கள் என் மீது தவக்குல் வைத்து பயணியுங்கள், உங்களை வீழ்த்துவதற்காக தீட்டப்படும் சதித் திட்டங்களை நான் கவனித்துக் கொள்கிறேன் என அல்லாஹுத் தஆலா எம்மைப் பார்த்துச் சொல்கிறான். நாமோ பாதையையும் பயணத்தையும் விட்டு விட்டு அல்லாஹ் பொறுப்பெடுப்பதாக சொன்ன விடயத்தில் எமது முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்!.

உண்மையில், சிக்கலான சமன்பாடுகள் நிறைந்த உலக ஒழுங்கொன்றில் நமது சிந்தனைப்பாங்கும், நடைமுறையும் எவ்வாறிருக்க வேண்டும் என்ற சமூகவியல் வழிகாட்டலொன்றைத் தரும் அற்புதமான அல்குர்ஆன் ஆயத்தாகவே இந்த ஆயத்தைக் கருத வேண்டியிருக்கின்றது. அது தரும் படிப்பினைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் உசிதமான கால சூழலொன்றில் வாழ்கிறோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

–அஃப்பான் அப்துல் ஹலீம் –

0 comments:

Post a Comment