Thursday, August 30, 2018

தமிழ் பேசும் மக்களுக்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் ஹசன் அலி தெரிவிப்பு i

30.08.2018

அம்பாறை தேர்தல் மாவட்டம், கல்முனை தேர்தல் மாவட்டம் என்று இரு வேறு தேர்தல் மாவட்டங்களாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் போஷாக்கு துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணயம் குறித்து மீளாய்வு செய்ய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 05 பேர் கொண்ட குழு சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நேற்று (29) புதன்கிழமை இவரின் நிந்தவூர் இல்லத்தில் ஊடகவியலளர்களை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

புதிய கலப்பு தேர்தல் முறைமை பாராளுமன்றத்தில் ஏற்கனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விட கூடாது என்ற அடிப்படையில் அப்போது சிறுபான்மை கட்சிகள் புதிய எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள கோரின. ஆனால் இன்னமும் எல்லை நிர்ணயம் புதிதாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகின்றது. அதற்காக எந்த முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் இல்லை.

எல்லை நிர்ணயம் புதிதாக மேற்கொள்ளப்படாமலேயே மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய குழு அறிக்கை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு எடுக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதில் தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்தே மாகாண சபை தேர்தல் முறைமை மற்றும் எல்லை நிர்ணயம் குறித்து மீளாய்வு செய்யவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 05 பேர் கொண்ட குழு சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களின் தேர்தல் தொகுதிகளில் இருந்து சுமார் 720 சதுர கிலோ மீற்றர் நில பரப்பு கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டு அம்பாறை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அத்தோடு அம்பாறை, தெய்யத்தஹண்டிய, உஹன என்று புதிய மூன்று தொகுதிகளுடன் சிங்கள பிரதேசம் உருவாக்கம் பெற்று உள்ளது. இதை தமிழ் பேசும் மக்கள் ஏற்று கொள்ள கூடாது.

ஏற்கனவே இருந்த தமிழ் பேசும் மக்களின் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் இரட்டை தொகுதி ஆகிய 04 தொகுதிகளும் எந்த உரு மாற்றமும் பெற கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும். அதே போல எந்த விதத்தில் எல்லை நிர்ணயம் நடந்தாலும் அம்பாறை, கல்முனை என்று இரு வேறு தேர்தல் மாவட்டங்களாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டம் பிரிக்கப்பட்டு பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

ஏனெனில் தமிழ் பேசும் மக்கள் அவர்களின் நீண்ட கால அபிலாஷைகளை கருத்தில் கொண்டு ஜனநாயக முறையில் ஒருமித்த தீர்மானங்களை வெளிப்படுத்துகின்றபோது ஒரு வீதம்கூட தமிழ் பேசும் மக்கள் இல்லாத அம்பாறை தொகுதியின் சிங்கள வாக்குகள் தேர்தல் முடிவுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது வரலாறு ஆகும். தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் அரசாங்க அதிபரைகூட பெற்று கொள்ள முடியாத கையறு நிலையே நீடித்து நிலைபெற்று உள்ளது.

ஆகவேதான் தமிழ் பேசும் மக்களின் பிரதேசங்களின் வாக்குகள் தனியாகவும், சிங்கள பிரதேசங்களின் வாக்குகள் தனியாகவும் எண்ணப்பட வேண்டும் என்று நாம் ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம். இதுவே தமிழ் பேசும் மக்களின் பெருவிருப்பமும் ஆகும்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டமும், அம்பாறை நிர்வாக மாவட்டமும் தற்போது ஒரே எல்லையையே கொண்டிருக்கின்றன. அதாவது ஒரே எல்லையில் இரு வேறு பெயர்களை கொண்டு உள்ளன. ஆனால் இதற்கான அவசியம் உண்மையில் கிடையாது.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது எமது நியாயமான கோரிக்கை ஆகும். இந்நியாயமான கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டு இதன் அடிப்படையில்தான் எந்த விதமான தேர்தல் முறைமை மாற்றங்களாயினும் இடம்பெறல் வேண்டும். இவ்விடயத்தில் தமிழ் பேசும் சமூகம் மிகுந்த விழிப்புடன் செயற்பட வேண்டும்.

நன்றி
S.Ashraff Khan

0 comments:

Post a Comment