Saturday, August 25, 2018

புதிய எல்லை நிர்ணயத்தினால் மாகாண சபைகளில் 43 முஸ்லிம்கள் 13 பேராக குறையும்- ஹக்கீம்

August 25, 2018

மாகாண சபைக்கான புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் படி மாகாண சபைகளில் 30 முஸ்லிம் பிரதிநிதிகளை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாகிய ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் நேற்று(24) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய மாகாணசபைப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 348 சிங்கள உறுப்பினர்களும், 64 தமிழ் உறுப்பினர்களும், 43 முஸ்லிம் உறுப்பினர்களும் இருப்பதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர், சபாநாயகருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

எனினும், புதிய மாகாணசபை எல்லை நிர்ணயத்தின் கீழ் முஸ்லிம்களின் ஆசனங்கள் 13 ஆகக் குறைந்துள்ளன. 30 உறுப்பினர்களை முஸ்லிம்கள் இழக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

குடிசன தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் தொகுதிகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என சட்ட ஏற்பாடு உள்ளது. வாக்காளர்கள் அதிகரிக்கும்போது 40 ஆயிரம் பேர் இருக்கும் ஒரு இடத்தில் தொகுதியை உருவாக்க முடியும்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தொகுதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்துள்ள சனத்தொகைக்கு ஏற்ப இதுவரை எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே சனத்தொகையின் அடிப்படையில் மாகாணசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment