Tuesday, August 28, 2018

வன்னி மக்கள் ஹக்கீம் கட்சியுடன் சேர்ந்து பயணிக்க தயாராகிவிட்டனர் -

29.08.2018

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், எங்களது கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு ஒன்றுதிரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மர்ஹூம் நூர்தீன் மசூரின் 8ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு நேற்றிரவு (26) மன்னார், எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற ஹஜ் விழாவின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;முதல்நாள் எருக்கலம்பிட்டியில் நடைபெற்ற பேராசிரியர் ஹஸ்புல்லாவின் ஜனாஸா நிகழ்வில் (இறுதிச் சடங்களில்) கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரீதியிலிருந்து பலர் இங்கு வருகைதந்திருந்தனர். சமூகத்துக்காக பாரிய பங்களிப்புச் செய்த கல்விமான் என்றவகையிலேயே அவர்கள் இங்கு திரண்டுவந்தனர்.

வடபுல மண்ணுக்கு நடந்த அவலத்தை ஆவணப்படுத்துவதில் ஹஸ்புல்லாவின் பங்களிப்பு அளப்பரியது. முஸ்லிம்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்வதில், தனியொருவராக இவர் ஆற்றிய பங்களிப்பு ஏனைய எல்லோரும் சேர்ந்து செய்ததைவிட கனதியானது.

மறைந்த எமது பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் வன்னி மக்களை ஒற்றுமைப்படுத்திய போன்று யாராலும் செய்திருக்கமுடியாது. எருக்கலம்பிட்டி கிாரமம் நாகவில்லுக்கு இடம்பெயர்ந்து இருபுலத்திலும் மக்கள் வாழ்ந்தபோது, தனது சொந்த செல்வத்தை செலவிட்டு ஈகைப்பண்பை வெளிப்படுத்தினார்.

மறைந்த தலைவர் காலத்திலிருந்தே நூர்தீன் மசூர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெரும் தூண்களில் ஒன்றாக இருந்துவந்திருக்கிறார். சிறிதுகாலமே பாராளுமன்றத்தில் இருந்தநிலையில், அவர் செய்த சேவையும் இந்த மண்ணை அரசியல் ரீதியாக அடையாளப்படுத்துவதில் காட்டிய ஈடுபாடும் மிகப்பெரியது.

தற்போது காட்டுத்தர்பார் நடத்தும் அரசியல்வாதிகளையும் கட்சிக்கு அறிமுகப்படுத்துவதில் துரதிஷ்டவசமாக, அறியாத்தனமாக அவர் செய்த செயல் இன்று எங்கள் எல்லோரையும் பாதித்துள்ளது. இச்செயல் அரசியல் ரீதியாக அவரைக்கூட பலிவாங்கும்  விடயமாக மாறிவிட்டாலும், தனக்கு நிகரான ஒரு அரசியல் தலைமையை வன்னியில் உருவாகமுடியாது என்ற நிலையில் நூர்தீன் மசூர் எம்மை விட்டும் பிரிந்துவிட்டார்.

அதன்பின்னர் முத்தலிபாவார்' ஒரு பாராளுமன்ற ஆசனம் கிட்டவில்லையே என்ற ஏக்கம் இந்த மண்ணுக்கு இருந்துகொண்டிருக்கிறது. இழந்த உரிமையை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அரசியல் ரீதியாக ஒன்றுபடவேண்டும் என்று இங்கு திரண்டுவந்திருக்கும் ஏராளமான மக்கள் ஒப்புவித்திருக்கிறார்கள்.

வடமாகாணசபை உறுப்பினரான றயீஸ் தானாக முன்வந்து, கட்சியின் வளர்ச்சிக்காக தனது பதவியை இராஜினாமா செய்து நியாஸ் என்பவருக்கு வழங்கியிருந்தார். இந்த மண்ணின் மிகப்பெரிய பண்பை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் மன்னார் பிரதேச சபையில் பிரதி தவிசாளர் என்ற பதவி கிடைத்திருந்தாலும் அதில் பூரண திருப்தியில்லை. ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் இரு உறுப்பினர்களும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆட்சியை மாற்றியமைக்கலாம் என்பதைக்கொண்டு திருப்தியடையலாம்.
மன்னார் பிரதேச சபையின் ஆட்சி எங்களது தயவில் இருக்கிறதே ஒழிய, அந்த ஆட்சியில் இருப்பதில் நாங்கள் சந்தோசப்படவில்லை. எங்களது அரசியல் சக்தியை தேவையான சந்தர்ப்பங்களில் நாங்கள் பயன்படுத்துவோம். சந்தர்ப்பம் வரும்போது, கட்சியின் அரசியல் அந்தஸ்து என்னவென்று உரசிப்பார்ப்பதற்கு எமது உறுப்பினர்கள் கட்சித் தலைமையுடன் ஒத்துழைப்பார்கள்.

கடந்த காலங்களில் கோடிக்கணக்கான ரூபா செலவில் மன்னார் மாவட்டத்தில் பாரிய அபிவிருத்திகளை செய்திருக்கிறோம். உங்களது இந்த பூர்வீக பூமியில் உல்லாசமாக திரிவதற்கு ஏற்றவகையில் வீதிகளையும், குறுக்கு  வீதிகளையும் நவீனமயப்படுத்த வேண்டும். அத்துடன் இங்குள்ள பூர்வீக அடையாளங்களை பாதுகாக்கவேண்டும்.

எருக்கலம்பிட்டி கலை, கலாசாரம் போன்றவற்றில் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது. இந்த மண்ணிலிருந்து உருவான நாட்டுக்கூத்துக்கள், நாட்டார் பாடல்கள், வில்லுப்பாடல்கள் போன்றவற்றை இயற்றிய, பாடிய கலைஞர்கள் நாடளாவிய ரீதியில் பிரசித்தமானவர்கள்.

பல அவுலியாக்கள் இந்த மண்ணில் அடங்கப்பெற்றுள்ளார்கள். வடபுலம் என்பது முஸ்லிம்களுக்கு தனியாக புராணங்களையும் இதிகாசங்களையும் தந்த பூமி. யாழ்ப்பாணத்தில் முஹைதீன் புராணம் தொடங்கி, எருக்கலம்பிட்டியில் மூன்று புராணங்களை யாத்த கவிஞர்கள் வாழ்ந்தார்கள் என்பது வரலாறு.

இடப்பெயர்வினால் விட்டுப்போன கலை, கலாசார, பாரம்பரியங்களை மீட்டுக்கொள்வதற்கான ஒரு சிறு முயற்சியாகத்தான் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இதைவிட மேலதிகமாக இழந்துபோன, மறந்துபோன, புதுப்பிக்கப்படவேண்டிய கலாசார அம்சங்களை மீண்டும் உயிர்ப்பிக்கவேண்டும். இதற்கு என்னால் முடியுமான உதவிகளை செய்யவுள்ளேன் என்றார்.

இதன்போது, ஹஜ் விழாவை முன்னிட்டு நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி அணிக்கு பதக்கங்களும் கேடயமும் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

அன்றையதினம் மன்னார் குடிநீர் விநியோகத்திட்டத்தின் கீழ் எருக்கலம்பிட்டி பிரதேசத்துக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நீர் தாங்கியையும் அமைச்சர் இதன்போது பொது மக்களின் பாவனைக்காக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.பி. பாருக், மன்னார் பிரதேச சபை பிரதி தவிசாளர் இஸ்மாயில் இஸ்ஸதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற வேட்பாளர் நூர்தீன் பர்ஸான், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment