Tuesday, August 28, 2018

அமைச்சுக்களின் செயலாளர்கள் – ஜனாதிபதி சந்திப்பு

August 28, 2018

அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்வதில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்சித்தித் திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்வதில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றங்கள் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டன.
அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய முன்மொழிவுகள், புதிய வருமான மார்க்கங்களை உருவாக்குதல், தேசிய பொருளாதாரத்திற்கான பங்களிப்பு மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயங்களின்போது ஏற்படுத்தப்படும் இருதரப்பு மற்றும் பல் தரப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தவும் அவற்றை மீளாய்வு செய்வதற்காகவும் ஒவ்வொரு அமைச்சிலும் மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

அமைச்சுக்களின் மூலம் முறையான மக்கள் தொடர்பாடலை பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மக்களின் கோரிக்கைகள் மற்றும் மனக்குறைகள் தொடர்பில் முன்னுரிமையளிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் கட்டாயமாக அமைச்சுக்களின் அதிகாரிகள் மக்களை சந்திப்பதற்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும் அனைத்து அமைச்சுக்களும் இணையத் தளமொன்றினை பேணிவருவதுடன், அமைச்சுக்களின் பொறுப்புக்கள், நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக தகவல்களை வழங்கி மக்களுக்கு அறிவூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.

அரசாங்கத்தின் முக்கிய அபிவிருத்தி திட்டமான கிராம சக்தி, கம்பெரலிய, என்டபிரைஸ் ஸ்ரீலங்கா, தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம், தேசிய மரநடுகை நிகழ்ச்சித் திட்டம் ஆகிய அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சுக்களின் பங்களிப்பு குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.
மக்களின் வாழ்க்கைச் செலவை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களில் முறையானதும் உடனடியானதுமான தீர்மானங்களை மேற்கொண்டு மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பது அமைச்சுக்களின் செயலாளர்களின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்துகொண்டார்.

0 comments:

Post a Comment