06. 09.2018
வளத்தாப்பிட்டி கிராமத்தில் வாழும் தமிழர் ஒருவரை பலாத்காரமாக இஸ்லாத்தை ஏற்கும்படி சிலர் சொன்னதாகவும் முடியாது என சொன்னதால் இரவில் வீட்டை தாக்கியதாகவும் தமிழ் ஊடகம் ஒன்று யதார்த்தத்துக்கு முரணாக பொய்யை மிகைப்படுத்தி சொல்லியுள்ளது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இச்சம்பவம் பற்றி ஆராயும் கட்சியின் உயர் சபை கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது
இப்படியான சோடிக்கப்பட்ட செய்திகளை பரப்புவதன் மூலம் கிழக்கில் அமைதியாக வாழும் முஸ்லிம் – தமிழ் சமூகங்கள் மத்தியில் பிரச்சினை இருப்பதாக சர்வதேசத்தில் காட்டி அங்கு வாழும் அகதிகளுக்கு நிரந்தர வதிவிடம் பெற்றுக்கொள்வதற்கான சதிகளும் சூழ்ச்சிகளுமே இத்தகைய செய்திகளாகும்.
இலங்கையின் எந்த இடத்திலும் எவரையும் பலாத்காரமாக இஸ்லாத்துக்கு எடுக்கும் முயற்சிகள் இது வரை நடக்கவில்லை என்பதை நாடு அறியும். அவ்வாறு பலாத்காரமாக இஸ்லாத்துக்கு எடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை அத்தகைய தேவை இஸ்லாத்துக்கு இல்லை. இஸ்லாத்தை படித்த மக்கள் தாமாக இஸ்லாத்தை தழுவும் நிகழ்வுகளை உலகம் முழுவதும் காண்கிறோம்.
மேற்படி சம்பவம் பற்றி சம்மாந்துறை பொலிசில் சம்பந்தப்பட்டவர் முறையிட்ட போது அதனை பொலிசார் கருத்தில் எடுக்கவில்லை என்றும் இதனை சிவில் முறைப்பாடாகவே பொலிசார் பதிந்ததாக முறைப்பாட்டாளர் சொல்லியுள்ளதன் மூலம் இவர் பொய் சொல்கிறார் அல்லது தானே தன் வீட்டை உடைத்து விட்டு வெளிநாடு செல்ல முயல்கிறார் என்பதை பொலிசார் தெரிந்து வைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
இச்சம்பவம் உண்மையாக இருந்திருப்பின் சிங்களவர்களை அதிகமாக கொண்ட பொலிசார் ஏதோ தமக்கு நல்லதொரு அவல் கிடைத்தது என சந்தோசப்பட்டிருப்பர். ஏனெனில் முஸ்லிம்களுக்கெதிராக இப்போது சிங்கள மற்றும் தமிழ் பேரினவாதங்கள் கை கோர்த்துள்ளன.
ஆனாலும் இச்செய்தி வேறு சுயநல நோக்கு கொண்டது என்பதை பொலிசார் தெரிந்து செயற்பட்டுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.
வளத்தாப்பிட்டி என்ற கிராமம் அம்பாரை நகருக்கும் மல்வத்தைக்குமிடையில் உள்ளதாகும். 1983க்கு முன் இங்கு தமிழர்கள் எவரும் வசிக்கவில்லை. முஸ்லிம்களே இங்கு வாழ்ந்தனர். எனது தந்தைக்கு வளத்தாப்பிட்டியில் காணியிருந்து அதில் விவசாயம் செய்த போது எனது பத்து வயதில் அதாவது சுமார் 40 வருடங்களுக்கு முன் அங்கு சென்று இரவில் தங்கியுமுள்ளேன்.
பின்னர் யானைகளின் அட்டகாசம் காரணமாகவும் தமிழ் பயங்கரவாதிகள் பதுங்குமிடமாகவும் மாறியதால் தமது காணிகளுக்கு முஸ்லிம்கள் செல்வதை குறைத்தனர்.
1983 கலவரத்தில் அம்பாரை நகரின் சுத்திகரிப்பாளர்களாக அம்பாரையில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவரால் துரத்தி அடிக்கப்பட்டனர். இந்த அகதிகளையே வளத்தாப்பிட்டி, மல்வத்தை போன்ற இடங்களில் குடியமர்த்தப்பட்டது.
சுனாமியை தொடர்ந்து முஸ்லிம்களின் காணிகள் இருந்த பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டப்பட்டு இஸ்மாயில் புரம் என பெயரிடப்பட்டது. இதற்கான முழு பங்களிப்பையும் செய்தவர் அன்னை பேரியல் அஷ்ரபாகும். முஸ்லிம் காங்கிரஸ் இம்மக்களுக்கு எதையும் செய்யவில்லை.
தற்போது அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் எந்த பிரச்சினையும் இன்றி தமிழ் மொழி சகோதரர்களாக வாழ்வதை பொறுக்க முடியாதவர்கள் இவ்வாறான பொய்யான சம்பவங்களை கோர்வை செய்து டயஸ்போராவின் பணத்துக்காக ஆடுகிறார்கள் என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும் என உலமா கட்சி கேட்டுக்கொள்கிறது.






0 comments:
Post a Comment