Sunday, September 30, 2018

அக்குறணை வெள்ளம் – சுத்திகரிக்கும் பணிகள் ஆரம்பம்


September 30, 2018

அக்குறணை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்று சனிக்கிழமை (29) இரவு தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்கா ஓயா பெருக்கெடுத்ததில் அக்குறணை நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கியது.

அக்குறணை நகரின் சியா வைத்தியசாலை சந்தியில் சுமார் ஆறு அடி வரையும் நகரின் ஏனைய பகுதிகளில் சுமார் நான்கு அடி வரையும் வெள்ளநீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

நகரின் வெள்ள நீர் மட்டம் உயர்ந்ததில் வியாபார நிலையங்களுக்குள் நீர் புகுந்து பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

நகர் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக நகர் ஊடாக செல்லும் கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் போக்குவரத்தும் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தடை ஏற்பட்டு காணப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சில சிறிய ரக வாகனங்கள் சற்று தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டதுடன் பெரிய ரக வாகனங்களின் இயந்திரம் இயங்காத நிலையில் ஆங்காங்கே தரித்து நின்றன.

இவ்வீதி ஊடாக பிராயானஙகளை மேற்கொண்ட பயணிகளும் பிரதேச வாசிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியும் ஏற்பட்டதுடன் நகரப் பிரதேசத்தில் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

நகரில் காணப்பட்ட வியாபார நிலையங்களுக்குள் வெள்ளம் புகுந்ததில் பெருமளவு பொருள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் இச்செய்தி எழுதப்படும் வரை ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை இருப்பினும் அக்குறணை நகர வர்த்தகர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் பல கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பொருற்சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர்.

அக்குறணை பிரதேச சபை தலைவர் ஐ.எம். இஸ்திஹார், வெள்ளப்பெருக்கு தொடர்பாக கூறுகையில் வெள்ளப்பெருக்கினால் நகரில் குவிந்துள்ள குப்பை கூலங்கள் மற்றும் சேற்று மண், பொருட்களை முறையாக அகற்றி சுத்தம் செய்யும் பணிகள் அக்குறணை பிரதேச சபை அதிகாரிகள், ஊழியர்கள், பிரதேச வாசிகள் மற்றும் நகர வியாபாரிகள், சமூக நல அமைப்புகளின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வியாபார நிலையங்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதிப்புகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் துணையுடன் விரைவாக ஆரப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறாக பெய்யும் மழைக்கு கடந்த சில வருடங்களாக பிங்கா ஓயாவின் நீர் மட்டம் உயர்ந்து அக்குறணை நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதுடன் இதனால் நகர வியாபாரிகள் தொடர்ச்சியாக பாரிய பொருளாதார நட்டங்களுக்கு முகம்கொடுத்து வருவதுடன் இதுவரையில் இதற்கு நிரந்தர தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நன்றி
ராபி சிஹாப்தீன்-


0 comments:

Post a Comment