Saturday, September 29, 2018

முஸ்லிம் தனியார் சட்டம் பாகம் 01 பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு

September 29, 2018

முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும்; என்ற கோரிக்கை நீண்டகாலமாக ஒரு பிரச்சினையாக
இருந்து வருகிறது. திருத்தப்படுவதில் பிரச்சினையில்லை. ஆனால் திருத்தப்படவேண்டிய குறைபாடுகள் என்ன? அந்த திருத்தங்கள் யாருக்குத் தேவை? அத்திருத்தம் செல்லக்கூடிய எல்லை என்ன? என்பவைதான் இங்கு  பிரதான கேள்விகளாகும்.

நாம் முஸ்லிம்கள். ஆனாலும் இது முஸ்லிம் நாடல்ல. எனவே சரீஆ சட்டம் அமுலாக்கப்பட முடியாது. இருந்தாலும் டச்சுக்காரர் காலத்தில் இருந்து ஒரு சிறிய சலுகை. அதுதான் உங்கள் திருமண,விவாகரத்து விவகாரம், மற்றும் வாரிசுரிமை போன்றவற்றில் உங்கள் சரீஆவைப் பின்பற்றுங்கள் என்பது.

இதனை சில மேற்கத்திய சக்திகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, இச்சட்டம் ஆண்-பெண் பாகுபாட்டைக் கொண்டது. சர்வதேச மனித உரிமைகளுக்கு முரணானது. நீதியற்றது. எனவே, திருத்தங்கள் செய்யவேண்டும்; என கோசமெழுப்புகின்றார்கள். இவற்றிற்காக சில N G O க்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த NGO க்களின் வரப்பிரசாதத்திற்காக அவற்றின் வலைகளுக்குள் அகப்பட்டிருக்கின்ற சில முஸ்லிம் பெண்ணியவாதிகள் அவர்களுடன் சேர்ந்து குரலெழுப்புகிறார்கள்.

இவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளும் வேண்டும் தீர்வுகளும்

பிரதானமானவை

பிரச்சினை-1

ஆண் காதிகளால் விவாகரத்து வழக்கிற்கு செல்லும் பெண்கள் பல சந்தர்ப்பங்களில் அகௌரவமாக நடாத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

கோரப்படும் தீர்வு: எனவே பெண் காதிகளும் நியமிக்கப்பட வேண்டும். பெண் காதிகள் நியமிக்கப்படாமல் இருப்பது பாகுபாடானது. ( discrimination) அது மனித உரிமைக்கு முரணானது.

பதில்

ஆண் காதிகள் நியாயமற்ற முறையில் அல்லது அகௌரவமான முறையில் பெண்களை நடாத்துகிறார்கள்; என்பதில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை. அதேநேரம் இக்காதிகள் சிலர் பெண்களுக்கு சாதகமாகவே நடக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களும் இல்லாமலில்லை.

இவற்றிற்கு காரணம் பல சந்தர்பங்களில் காதி நியமனங்கள் பொருத்தமற்றவையாக அமைவதாகும்.
பொருத்தமான உலக, மற்றும் மார்க்க கல்வி தராதரம், ஒழுக்கம், கண்ணியமான நடத்தை, மார்க்க ஈடுபாடு போன்றவை உள்ளவர்கள் காதிகளாக தேர்வு செய்யப்பட வேண்டும். போதுமான பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

அதேநேரம் இவ்வாறு தகுதியானவர்கள் முன்வருவதற்கு கௌரவமான கொடுப்பனவு, மற்றும் வசதிகள் வழங்கப்படவேண்டும். இவை எதுவுமில்லாமல் பொருத்தமானவர்களை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். பொருத்தமற்றவர்களிடம் எவ்வாறு தகுதியான சேவையை எதிர்பார்க்க முடியும்.

எனவே, பிரச்சினையை அடையாளம் கண்டு அவற்றிற்கு தீர்வுகாணாமல் தீர்வை வேறு எங்கோ தேடுவது எந்த வகையில் தீர்வைத் தீரும்.

பெண் காதி நியமனம்

மார்க்க நிலைப்பாடு ஒரு புறமிருக்க, இதற்குத் தீர்வாக பெண்காதிகளை நியமிக்க வேண்டுமென்றால் எதிர்காலத்தில் நூறு வீதம் பெண் காதிகளை நியமிக்கக் கோருகின்றார்களா? ஏனெனில் உதாரணமாக 50% பெண் காதிகளை நியமித்தால் அடுத்த 50% மான ஆண் காதிகளிடம் செல்லுகின்ற வழக்குகளில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதா? எனவே, இந்தக்கோரிக்கை தீர்வை நோக்கியதல்ல. மாறாக உள்நோக்கம் கொண்டது.

பாகுபாடு

ஆண்களும் பெண்களும் சமம். பாகுபாடு மனித உரிமை மீறல். இந்தக்கோசத்தை இவர்களுடன் இணைந்து எழுப்புபவர்கள் அந்நிய பெண்கள். அதாவது முஸ்லிம் சட்டம் திருத்தப்பட வேண்டுமென போராடும் முஸ்லிம் பெண்கள் தங்கள் போராட்டத்திற்கு துணையாக அழைப்பது கலிமாச் சொல்லாதவர்களை.

உண்மையில் இவர்களின் போராட்டத்திற்கு அவர்கள் உதவவில்லை. மாறாக, இலங்கையில் மார்க்க விடயத்தில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இந்த சிறிய சலுகையையும் அழித்துவிடுவதற்கான மேற்கத்திய சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களின் சதிப்போராட்டத்திற்கு நமது சில பெண்களும் துணைபோகிறார்கள். அவ்வளவுதான்.

இன்று முஸ்லிம் சமூகத்தின் துரதிஷ்டவசமான நிலைமை என்னவென்றால் அரசியல்வாதிகள் ஒருபுறம் தாங்கள் வாழ்வதற்காக சமூகத்தை சீரழிக்கிறார்கள். மார்க்கம் படித்தவர்கள் என்கின்ற ஒரு கூட்டம் இயக்கங்களின் பெயரால் உம்மத்தை சின்னாபின்னப்படுத்துகிறார்கள். NGO க்களின் வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகி இந்நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒரு சிறிய சலுகையையும் துவம்சம் செய்ய ஒரு கூட்டமும் முனைகிறார்கள்.

சமத்துவம் ( equality) என்பது எல்லோரையையும் எல்லாவிடயங்களிலும் ஒரே மாதிரி நடத்துவல்ல. அது சாத்தியமில்லை. ஏனெனில் எல்லோரும் எல்லா விடயங்களிலும் ஒரேமாதிரியானவர்களாக இல்லை. அவ்வாறு இறைவன் படைக்கவும் இல்லை. எனவே, சமத்துவமற்றவர்களை சமத்துவமாக நடத்துவது என்கின்றபோது ‘ சமத்துவம்’ என்றால் என்ன? என்ற கேள்வி எழுகின்றது.

( தொடரும் )

வை எல் எஸ் ஹமீட்

0 comments:

Post a Comment