Wednesday, September 26, 2018

’மைத்திரியையும் மஹிந்தவையும் கொல்ல முயற்சி’

26.09. 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரைக் கொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், நேற்று (25), நீதிமன்றமொன்றில் அறிவித்தனர்.

ஊழல் ஒழிப்பு பிரிவின் செயல் பணிப்பாளர் நாமல் குமாரவின் மாவனல்லை வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை, இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளாரென, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவுக்கு அறிவித்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்த விசாரணைகளை எடுத்த போது, இந்த விடயம் தெரியவந்துள்ளதென்று குறிப்பிட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு, விசாரணைகள் தொடர்பிலான மேம்பாட்டு அறிக்கை ஒன்றையும், மன்றில் சமர்ப்பித்தது.

மேலும், நாமல் குமாரவின் வீட்டில் கைதுசெய்யப்பட்ட குறித்த இந்தியப் பிரஜை, விசா இன்றி நாட்டில் தங்கியிருந்துள்ளார் என்றும், அவர் கொழும்பு, றாகம பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இவரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட போது, ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்டோரைக் கொலை செய்யும் திட்டம் தொடர்பில் தெரியவந்ததென்றும், இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு மன்றில் அறிவித்தது.

அத்துடன், நாமல் குமாரவால் வெளிபடுத்தப்பட்ட தொலைபேசி உரையாடல் யாருடையது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் இன்று (26) அவரை ஆஜர்படுத்த அனுமதி வழங்கிய நீதவான், மேலதிக விசாரணைகள் தொடர்பிலான மேம்பாட்டு அறிக்கையை மன்றுக்குச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.

Tamil Mirror

0 comments:

Post a Comment