Saturday, September 22, 2018

வீழ்ச்சியடையும் ரூபாவைப் பாதுகாக்க நாட்டுப் பற்றுள்ளவர்களிடம் முக்கிய வேண்டுகோள் !

September 22, 2018

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமானத்தைப் பாதுகாப்பதற்கு நாட்டுப் பற்றுள்ள பொது மக்களும் தமது பங்களிப்பை வழங்க முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக வாணிபத்துறைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக் குமாரசிங்க விளக்கமளித்துள்ளார்.

சகோதர தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த வழிகாட்டளை வழங்குகின்றார்.
நாட்டில் டொலர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதற்கு சர்வதேசத்தின் சூழ்ச்சி என்று குற்றம்சாட்டுவதனால் எந்தவித நன்மையும் கிட்டப் போவதில்லை. மாற்றமாக, நாம் இதற்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதே நாட்டுப் பற்றுள்ள பிரஜையொன்றின் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இதற்கு பொது மக்கள் மாத்திரம் ஒத்துழைத்தால் போதாது. அதிகாரத்திலுள்ள அரசியல் வாதிகளும் முன்மாதிரியாக திகழ வேண்டும். டொலர் விலை அதிகரிப்பை குறைத்து, நாட்டின் ரூபாயின் பெறுமதியைப் பாதுகாப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.

அவசியம் என்றில்லாத மேலதிக வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளல், அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ந்து கொள்ளல், எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கு சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தமது முக்கிய தேவை தவிர்த்து பயணங்களை மட்டுப்படுத்திக் கொள்ளல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் மூலம் பொது மக்கள் இந்த டொலர் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆதரவு வழங்கலாம்.

இதேவேளை, பொது மக்கள் இவ்வாறு தமது வாழ்க்கையை நாட்டின் மீது கொண்டுள்ள பற்றுக் காரணமாக மட்டுப்படுத்திக் கொள்ளும் போது அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

பொது மக்களை இவ்வாறு நடந்துகொள்ளுமாறு கூறிவிட்டு, தாங்கள் வீணான வெளிநாட்டுப் பயணங்களிலும், தேவையற்ற நிகழ்வுகளிலும், விழாக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் பொது மக்கள் மட்டும் மேற்கொள்ளும் தியாகத்தினால் பயன் கிடைக்கப் போவதில்லை.
டொலர் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நாட்டுப் பற்றுள்ள சகலரும் இவ்வாறு தியாகமொன்றை மேற்கொண்டால் மாத்திரமே ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.

0 comments:

Post a Comment