Friday, September 28, 2018

குரல் பதிவை வழங்கியுள்ள நாலக டி சில்வா

28.09.2018

பிரதி காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வா இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி, குரல் பதிவை வழங்கியுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, அவர் இன்றைய தினம் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்யும் சூழ்ச்சி தொடர்பிலான தொலைபேசி உரையாடல் குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமையவே நாலக டி சில்வாவின் குரல் மாதிரியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, முற்பகல் 9.55 அளவில் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சென்ற பிரதி காவல்துறை மா அதிபர் நாலக டி சில்வா சுமார் 45 நிமிடங்கள் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு வெளியில் காத்திருந்த ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் வழங்குவதை தவிர்த்திருந்தார்.

இதனிடையே, கொலை சதித்திட்டம் தொடர்பில் வெளிப்படுத்திய, ஊழல் எதிர்ப்பு படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமார  மற்றும் பிரதி காவல்மா அதிபர் நாலக டி சில்வா ஆகியோருக்கு எதிராக இன்று குற்ற புலனாய்வு திணைக்கள மற்றும் காவல்துறை திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்களே தேசிய இயக்கத்தின் தலைவர் டேன் ப்ரியசாத் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

நாமல் குமார மற்றும் நாலக டி சில்வா ஆகிய இருவரையும் உடன் கைது செய்யுமாறு தாம் அந்த முறைப்பாட்டில் வலியுறுத்தியுள்ளதாக டேன் ப்ரியசாத் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment