Tuesday, September 18, 2018

விலைவாசியும் மக்கள் புலம்பலும்

September 18, 2018


“இரவு தூங்கி விடியிறத்துக்குள்ள நாட்டுள்ள என்னன்னெல்லாம் மாறியிருக்கு….வேற ஏதாவது புதுசா மாறுனா பரவாயில்ல. எங்கள குறி வச்சுத் தானே மாறுது இந்த மாற்றமும். மாசா மாசம் கூடுறதுக்கு இதுயென்னய்யா சம்பளமா?” என்று அனைவரும் சமீபகாலமாக புலம்புவதை அறியமுடிகிறது.

ஆம்…. இந்த புலம்பல் வேறு எதனாலும் புலம்புகின்ற புலம்பல் அல்ல. சாதாரண மக்களை, அன்றைய நாளில் வேலைக்கு சென்றால்தான் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வெளியில் இறங்கும் மக்களின் மனக்குமுறல் என்றே கூறலாம்.
கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட பெற்றோல் விலையை பற்றியே இங்கு பேசப்படுகின்றது. இந்தவிடயம் வெறும் பேசுப்பொருள் அல்ல. செயற்படுத்தப்படுகின்ற பொருளாகவே இனிவரும் காலங்களில் மாற்றப்படவேண்டும்.

சிறப்பான பொருளாதாரம் என்பது அந்த நாட்டின் விலைவாசியை பொறுத்துதான் அமையவேண்டும். நாட்டு மக்களின் வாங்கும் திறன் அதிகமாகிவிட்டது அதனால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்பதல்ல பொருளாதாரம். வாங்கும் திறன் எத்தனை சதவீத மக்களை உயர்த்தியிருக்கிறது என்பதை பொறுத்ததே. அரசு ஊழியரையோ, அரசியல்வாதியையோ, மென்பொருள் ஊழியரையோ மையப்படுத்தியே பொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறதே தவிர, நாட்ச்சம்பள தொழிலாளியை கணக்கிலேடுத்துக்கொள்வதில்லை. அவர்களின் வாங்கும் திறன் மலிவான தரமில்லாத பொருள்களையே வாங்கும் அளவிற்கு இருக்கிறது இன்றைய விலைவாசி.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக, கடந்த 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒக்டேன் 95 ரக மற்றும் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 161 ரூபாவாகவும் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 149 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 133 ரூபாவாகிறது. ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையும் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஒட்டோ டீசலின் புதிய விலை 123 ரூபாவாகுமென பெற்றோலிய வளத்துறை அமைச்சு சுட்டிக்காட்டியது. அதன்படி ஐஓசி நிறுவனமும் 92 ஒக்டேன் பெற்றோல் 150 ரூபாவாகவும் 95 ஒக்டேன் பெற்றோல் 164 ரூபாவாகவும் விலைகளை அதிகரித்துள்ளது. டீசல் 123 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 133 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டணமும் அதிகரிக்க கோரிக்கை
இவ்வாறு எரிபொருள் விலை அதிகரிப்பால் அனைத்து தரப்பினரும் தத்தமது விலைகளை ஏற்றுவது என்பது நமது நாட்டில் ஒரு பெரிய விடயமல்ல. தனியார் பஸ் கட்டணத்தையும் 10 வீதத்தால் அதிகரிக்குமாறு தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையின் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இருப்பினும் நாம் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலையின் அதிகரிப்பையே எதிர்நோக்கி வருகின்றோம். முச்சக்கரவண்டி உள்ளிட்ட தனியார் வாகனக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் பாடசாலை வாகனக்கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே தான் தனியார் பஸ் கட்டணத்தை 10 வீதத்திலேனும் அதிகரிக்குமாறு கோரிக்கையிட்டுள்ளோம். பஸ் ஊழியர்கள் தமது சம்பள பிரச்சினைக்கும் முகங்கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி போக்குவரத்து குற்றச்செயல்களுக்கு தண்டப்பணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே, இவ்வாறானவற்றை முகங்கொடுக்கவேண்டுமென்றால் கண்டிப்பாக தனியார் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.

புகையிரத கட்டணமும் அதிகரிப்பு

புகையிரத கட்டணங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. உதாரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து ஹுனுபிடிய வரை அறவிடப்படும் கட்டணம் 10 ரூபாவாகும். இருப்பினும் மறுபரிசீலனைக்கு பிறகு 10 ரூபா கட்டணத்துக்கு கொழும்பு கோட்டையிலிருந்து களனி வரையே செல்லமுடியும். அதேநேரம், கொழும்பு கோட்டையிலிருந்து ஹ{னுப்பிட்டிய வரை கட்டணம் 15 ஆக அதிகரிக்கப்படும். இதேநேரம், கொழும்பு கோட்டையிலிருந்து மஹரகமவுக்கு 25 ரூபாவும், கோட்டையிலிருந்து கம்பஹாவுக்கு 30ரூபாவும் அதிகரிக்கப்படவுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் புகையிரத கட்டணம் மறுசீரமைக்கப்படுகின்றமை இதுவே முதற் தடவையாகும்.
விலைச்சூத்திரத்தை செயற்படுத்த வேண்டுகோள்

விலைச்சூத்திரம் செயற்படுத்தப்படவேண்டும் என்றும் இது தொடர்பில் நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். திடீரென அதிகரிக்கப்பட்ட  எரிபொருள் விலை தொடர்பில் அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். விலைச்சூத்திரம் செயற்படுத்தப்பட்டால் இவ்வாறான பிரச்சினைகள் நிகழாது என்றும், நிதி அமைச்சரிடம் மூன்று மாதங்களுக்கு முன்னரே வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதன் பின் தாம் நடவடிக்கையெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
ஆட்சியாளர்களை விரட்டியடிக்க ஜேவிபி வலியுறுத்து

கருப்பு சந்தை செயற்பாட்டிற்கு எரிபொருள் விலை அதிகரிப்படுகின்றமையால், நாட்டுக்கு இவ்வாறான அரசாங்கம் அவசியமில்லை. இந்த ஆட்சியாளர்களை உடனடியாக விரட்டியடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டுமென்று ஜேவிபியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். “மாதா மாதம் எரிபொருள் விலை அதிகரிப்பானது பாரிய நெருக்கடியாகவுள்ளது. கட்சி, நிறம் பாராது பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு பேரணியொன்றை நிகழ்த்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

பொதுமக்களின் கருத்துக்கு அரசாங்கம் செவிசாய்க்காது போனால் மக்களுடன் இணைந்து பாரிய போராட்டமொன்றை நாம் முன்னெடுப்போம். வருடக்கணக்காக சம்பளத்தை அதிகரிக்காத அரசாங்கம் எந்தவொரு முன்னறிவித்தலுமின்றி மாதா மாதம் எரிபொருள் விலையை மட்டும் அதிகரிக்கிறது. இவ்வாறான கருப்பு சந்தை அரசாங்கம் நாட்டுக்கு ஒரு போதும் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

ஊழல் மோசடியால் விலை அதிகரிப்பு

பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தில் நடைபேறும் ஊழல் மோசடியினாலேயே எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்தது. “விலைச்சூத்திரப்படியே விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பொய் கூறிய பெற்றோலிய வள கூட்டுத்தாபனம் ஊழல் மோசடியை மையப்படுத்தியே எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் எவரும் கண்டிராத, கேள்விப்படாத, அவர்களுக்கு முன்னிலைப்படுத்தாத எரிபொருள் விலைசூத்திரம் என்ற பெயரில் கோணிபில்லாவை முன்னிறுத்தி ஒரு இரவுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் பாரிய இலஞ்ச ஊழல் மோசடியாகும்“ என தெரிவிக்கப்பட்டது.
“விலைசூத்திரத்தின் படியே விலை அதிகரிப்பு” – மங்கள

“சர்வதேச எரிபொருள் விலை தொடர்பில் இருக்கும் நிலைமையை ஆராய்ந்தே எரிபோருள் விலை அதிகரிப்பட்டது. மேலும், விலை சூத்திரத்தின் படியே விலை அதிகரிக்கப்பட்டது. சர்வதேசத்தில் விலை குறைந்தால் அதன் நன்மையை மக்களுக்கு பெற்றுத்தருவோம்” என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

“பெற்றோல் வில கூடுனா, பாதிக்கிறது ட்ரீவில் ஓட்டுற நாங்க தான். நல்ல பெஜரோ, கார்ல போறவங்களுக்கு எல்லாம் எந்த வலியும் இல்ல. ஆக்கள் கிட்ட நாங்க இனி எப்படி கூட காசு எடுக்கிற…” என புலம்புகிறார் முச்சக்கரவண்டி சாரதி.
ஆம்… இந்த எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் கொட்டாஞ்சேனை முச்சக்கரவண்டி தரிப்பிடத்திலுள்ள சில முச்சக்கரவண்டி சாரதிகளிடம் வினவிய போதே அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
அதில் ஒருவர்… “நல்லாட்சிக்கு ஓட்டுக்கொடுத்தவங்களுக்கு இப்ப சந்தோஷமா?  நல்ல வச்சு செய்றானுங்க. ஒரு நாள் கூலிய நம்பிதான் எங்க குடும்பமே ஓடுது. இதுல பெற்றோல் வெல கூடினு நாங்க இனி எப்புடி ஆக்கள் கிட்ட காசு எடுக்குறது….” என ஒருவர் கூறுகிறார்.

இதேநேரம், தனது முச்சக்கரவண்டியில் பேக்கரி பொருட்களை விற்கும் ஒருவர் “இனி நான் எப்புடி பனிஸ், பாண்கள கூட்டி விக்கிறது. போன மாசத்துலத்தான் பேக்கரி பொருட்களும் கூட்டப்பட்டுச்சி, இந்தா இப்போ பெற்றோல், டீசல் என்ன பண்றதுனே தெரியலே“ என புலம்புகிறார்.

உண்மையில் இவ்வாறான விலை அதிகரிப்பினால் முழு முழுக்க பாதிக்கப்படுவது வாக்குகளையும் கொடுத்துவிட்டு,  விலைவாசிக்கேற்ப அன்றாட பொருட்களை வாங்கும் சாதாரண நாம் தான். கடந்த கால அரசை விமர்சித்தவர்கள் 2015 இல் ஆவது விடிவு கிடைக்காதா? மாற்றம் கிடைக்காதா? என்று எண்ணி நல்லாட்சி அரசுக்கு ஒத்துழைத்தார். இருப்பினும் நல்லாட்சி அரசு வந்து மூன்றரை வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுவதே தவிர குறைத்தபாடில்லை.
ஏழை எளிய மக்கள் இந்த அரசிடம் வேறொன்றும் கேட்கவில்லை. அன்றாடம் திருப்தியாக உண்ணுவதற்கு அத்தியாவசிய பொருட்களை குறைத்தால் போதும் என்றே நினைக்கிறார்கள். இந்த எரிபொருள் விலை காரிலும், பெஜரோவிலும் செல்பவர்களை ஒரு போதும் பாதிக்காது என்பது திண்ணமே. மாறாக ஒரு நாள் கூலித்தொழிலாளியையும், நடுத்தர வர்க்கத்தினரையுமே பாதிக்கும்.
நம்மிடம் அநியாயமாக கொள்ளை அடிக்கும் பணத்தைதான் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியமாக கொடுக்கிறதா? என எண்ணத் தோன்றுகின்றது. கொள்ளையடிப்பதையே கொள்கையாக கொண்ட இந்த அரசாங்கம் எப்படி மக்களுக்கு சிறப்பான பொருளாதாரத்தை கொடுக்க முடியும்?
பொதுமக்கள் ஒவ்வொருவர் சட்டை பையிலும் அரசாங்கம் நேரடியாக கொள்ளை அடிக்கிறது. பணத்தை இழந்தவன் புலம்பினால் மட்டும் கிடைத்துவிடாது. மாறாக எதிர்த்து போராடவேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் சிறிதளவு பங்களிப்பு கொடுத்தாலும் போதும் இந்த நிலை மாறிவிடும். இல்லை எனில் உங்களுக்குள்ளே புலம்பிக்கொண்டு மழுங்கையாக இருந்தால் நாளைய சமுதாயம் வறுமையோடு உருவாவதற்கு நீங்களும் தான் ஒரு காரணம். ஒரு தவறை கண்டிக்காமல் இருப்பது அதற்கு நாம் ஆதரவளிப்பதற்கு சமம். இதில் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை உணருங்கள். சிறப்பான பொருளாதார மாற்றம் வெறும் பேனாமுனையில் மட்டுமே வந்துவிடாது, தெருமுனை புரட்சிகளும்தான் மாற்றத்தை உருவாக்கும். மக்கள் புரட்சி ஒன்றே மாற்றங்களை உருவாக்கும். அதேபோல் மாற்றம் என்ற ஒன்றே மாறாது. மாறாக அனைத்தையும் மாற்றும் சக்தி பொதுமக்களாகிய நமக்கு உண்டு.

– பா.மலரம்பிகை –
Daily Ceylon

0 comments:

Post a Comment