Tuesday, September 11, 2018

பாம்புக் கடித்தால் மூடநம்பிக்கைகளை நாடாதீர்கள் (இலங்கையில் நடந்த உண்மைச் சம்பவம்)


September 11 2018 

ஒப்பாரிச் சத்தத்தோடு 50 வயது மதிக்க ஆண் ட்ரொலியில் கொண்டு வரப்பட்டார். இறந்து விட்டதை உறுதிப்படுத்தி விட்டோம். இனி எதைச் செய்தாலும் எழப்போவதில்லையென்பது உறுதியானதால், மரண பரிசீலனைக்கு உத்தரவிடப்பட்டது.

வயலில் வேளாண்மை வேலை செய்து கொண்டிருக்கையில் காலில் ஒரு திடீர் வலியேற்பட்டுத் திரும்பிப்பார்க்க ஒரு பாம்பு விலகிப் போய்க் கொண்டிருந்தது. அருகிலிருந்தோர் சேர்ந்து அப்பாம்பை அடித்துக் கொன்று, அதையும் எடுத்துக் கொண்டு பாம்புப் பரிகாரியிடம் போக... பரிகாரியோ அவரின் வித்தையைக் காட்டிவிட்டார்.

அப்பாம்பு விசப்பாம்பு என்பதால் விசத்தை உறிஞ்சும் கல்லைக் கடிபட்ட இடத்தில் வைத்து அவ்வளவு விஷத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டு கூடவே பணத்தையும் உறிஞ்சு விட்டு, இனி பயப்பட வேண்டியதில்லை, எல்லா விஷத்தையும் எடுத்து விட்டேன் என்று வீட்டுக்கு அனுப்பி வைத்தார். விஷத்தையும் பணத்தையும் உறிஞ்சவர் இவரது உயிரையும் உறிஞ்சுவார் என அவர்கள் சிறிதும் நினைக்கவில்லை...

வீட்டுக்குப் போகையிலேயே சிற்சில உடல் மாற்றங்கள் ஏற்படத்துவங்கியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் அந்தளவு அந்தப் பரிசாரி மேல் நம்பிக்கை...

நேரஞ் செல்லச்செல்ல கண்களை முழுமையாகத் திறக்க முடியாமலும் மூச்செடுக்க முடியாமலும் அவதிப்பட, வைத்தியசாலை ஞாபகத்தில் வந்தது.

வைத்தியசாலைக்கு வரும்போதே உயிர் பிரிந்து விட்டது. இறந்த உடலையும் இறந்த பாம்பையும் தான் எங்களால் காண முடிந்தது!

கொண்டு வந்த பாம்பு, புடையன் பாம்பு என்றழைக்கப்படும் Russels viper (கண்ணாடி விரியன்/තිත් පොළගා) ஆகும். இது மிகவும் விஷமான பாம்புகளிலொன்று.

கடித்த பாம்பு விஷப்பாம்பென இனங்கண்டு கொண்டாலோ கடிபட்ட பின்னர் விஷம் உடலில் ஏறியமைக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது விஷமேறியமைக்கான மாற்றங்கள் இரத்தப் மரிசோதனை மூலம் கண்டறியப்பட்டாலோ உடன் அவ்விஷத்தை நடுநிலைப்படுத்த ஊசி மருந்தேற்றப்படும். கடிபட்ட நேரத்திலிருந்து எவ்வளவு சீக்கிரம் இம்மருந்து கொடுக்கப்படுகிறதோ அதன் பெறுபேறும் மிக நல்லதாகவேயிருக்கும். எனவே கூடிய சீக்கிரம் இம்மருந்து ஏற்றப்படல் நல்லது.

(Dr. M.J.M.Suaib)

0 comments:

Post a Comment