Monday, September 17, 2018

வடக்கில் தொழிலற்றவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள விசித்திர தகவல்


17.09.2018

யுத்த பாதிப்பு பிரதேசமான யாழ்ப்பாணத்தில் தொழிலற்றவர்களின் சதவீதம் 10.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அரச புள்ளி விபரங்களை மேற்கொள் காட்டி த எகனமிக்ஷ்ட் நெக்ஷ்ட் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2015 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் தொழிலற்றோர் சதவீதம் 5.7 ஆகவும், 2016 ஆம் ஆண்டில் 7 வீதமாகவும் காணப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3.7 சதவீதமாகவிருந்த தொழிலற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முகாம்களில் தங்கியிருந்த மக்கள் சொந்த இடங்களுக்கு திருப்பியுள்ள நிலையில், அவர்களுக்கான தொழில்வாய்ப்புக்கள் இல்லாத நிலை தோன்றியுள்ளமை சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் போக்குவரத்து கட்டமைப்பு வீழ்ச்சிகண்டுள்ள நிலையில், போக்குவரத்துக்கு அதிகளவிலான அறவீடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன், கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொழிபுரியும் வாய்ப்பை இழந்துள்ளள்ளனர்.

இதேவேளை, மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் தொழிலற்றவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சிகண்டுள்ளது.

மன்னாரில் கடந்த 2016 ஆம் ஆண்டில் 7.1 சதவீதமாக இருந்த தொழிலற்றவர்களின் வீதம், கடந்த ஆண்டில் 3.8 வீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 5.2 வீதமாக இருந்த தொழிலற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில், 2.8 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 6.3 வீதமாக இருந்து தொழிலற்றவர்களின் வீதம் இந்த ஆண்டில் 6.1 வீதமாக வீழ்ச்சிகண்டுள்ளது.

யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உற்பத்திசார் தொழிற்துறைகளின் வியாபக முயற்சியால் இந்த குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை முழுவதும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில், வடக்கு மாகாணத்தவர்களே மிகவும் சொற்ப எண்ணிக்கையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவமனைகளில் நிலவும் தாதிய உத்தியோகத்தர்களிற்கான வெற்றிடத்தினை நிரப்பும் நோக்கில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக நாடு முழுவதிலும் இருந்து இதுவரைக்கும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வடக்கில் பல்லாயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பின்றி உள்ள நிலையில், சுகாதார அமைச்சிற்கு கிடைத்துள்ள 9 ஆயிரம் விண்ணப்பங்களில் 194 விண்ணப்பங்கள் மட்டுமே வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடக்கில் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஐயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்ற, நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment