Sunday, September 16, 2018

ஜாவத்தைப் பள்ளியில் நடந்த சோகம்


16.09.2018

வானிடிந்து வீழ்ந்திடுமோ என்னும் வேகம்
வாய்களொன்றிக் குரல்கொடுக்கும் இடிபோ லாகும்
தேனுகரக் கேட்கின்ற தக்பீர ஓசை
திசையொடுக்க எங்கணுமே சிதறிப் பாயும்
ஊனொடுங்க உடல்நடுங்கும் உள்ளம் பொங்கும்
ஓங்கிவிஞ்சும் ஒலியாலே நெஞ்சம் விம்மும்
தீனினொளிச் சுடர்வீசும் பள்ளி யுள்ளே
சனந்திரள மூச்சடங்கும் நிலைக்குள் ளானார்

சுற்றிவர வீதியெல்லாம் தடைசெய்தார்கள்
சிறியதொரு வாகனமும நுழையா வாறே
முற்றுமங்கு சிரசுகளே மிதந்த தெங்கும்
மனிதவுடல் தோன்றாதே திரட்சி யாலே
உற்றசுற்றம் அல்லவாங்கு கூடி நின்றோர்
ஊரறியார் பேரறியார் உளத்தில் நேசம்
பெற்றவரே தந்தலைவன் பிரிவைத் தாங்காப்
பங்காளர் ஓரினத்தின் உடன்பி றந்தோர்

கட்டுக்க டங்காத கூட்டத் தோரைக்
கூடுமட்டும் நிலைப்படுத்த வந்தி ருந்த
மட்டில்லா அரசாங்கக் காவ லாளர்
மாற்றினத்தார் அனைவருமே அதிர்ந்தே போனார்
முட்டிமோதி னார்களுடல் பள்ளி நோக்கி
முடுகுகையில் யாரெவரென்று எவரும் நோக்கார்
எட்டிநிற்க மனமொப்பா நிலையில் மக்கள்

சந்தூக்கைத் தூக்கிவந்தோர் சாணி டைதான்
தூக்கிவரக் கிட்டியது மற்றோர் பாய்ந்து
சந்தூக்கைக் கைப்பற்றி ஒருசாண் செல்லத்
தூக்கமற்றப் பேர்முந்தி வாங்கி யோர்சாண்
சந்தூக்கை நகர்த்தமறு நொடிக்குள் நூறார்
தூக்கமுண்டி முன்வந்தார் முன்னோர் மீண்டார்
சந்தூக்கைத் தூக்கியவர் துளிப்பே ராங்கே
தூக்காதோர் சாகரமாம் சோகக் கேடே..

விலகுங்கள் என்றார்கள் விலக ஆங்கே
வழியற்றே நின்றோர்கள் நின்றார் வந்தோர்
விலகுங்கள் வழிவிடுங்கள் எனஅ தட்டும்
வாறிருந்தும் வழியொதுங்கார் வாகில் லாதார்
விலகுங்கள் இறைவனுக்காய் என்றார் யாரோ
வந்ததெவ்வாறு எனநோக்க இயலா வாறே
விலகிவழி தோற்றனரே “சந்தூக்” கொண்டோர்
வல்லவனின் நாமத்தால் உட்சென் றாரே..

தொழுகைக்காய்ப் பள்ளியுள்ளே “ஜனாஸா” சேரச்
சேர்ந்தார்கள் வரிவரியாய் வளியுட் புக்கா
ஒழுவுடையோர் சிறுதுரும்பின் இடையெஞ் சாதே
உட்புறமும் வெளிபுறமும் இடங்கிட் டாதோர்
வழியோரந் தனிலுமவர் கடமை நோக்க
வாராதே பின்னொருநாள் எனவாம் கூடி
முழுமனத்தால் தலைவனுக்குத் “துஆ”வுங் கேட்டே
மண்ணாளும் பண்ணவனை வேண்டி நின்றார்..

தொழுகைக்குப் பின்னாலே “ஜனாஸா” “கபுறுத்
தலத்” தினுக்குத் தூக்கிவரப் பட்;ட தாங்கே
விழிபொழிந்த பாங்கினிலே அனைத்துப்
பேரும்
விடைதரவே நிறைந்துநின்றார் வரையற் றோராய்
அழுபவரின் புறமொதுங்கி அழுதார் தங்கள்
ஆண்மைக்குள் அடங்கியவர் அகத்துள் தோய்ந்தார்
தழதழுத்தார் சிலபேர்கள் விம்மல் சேரத்
தாங்கவியன் றோர்ஆங்கே துளிப்பே ரற்றார்..

தோண்டிவைத்த “கபுர்”ஒன்றே மகிழ்ந் தன்று
தன்னுள்ளே வரவிருக்கும் தலைவன் எண்ணி
மாண்டவரை வரவேற்கும் பாங்காய் அஃது
மகிழ்ந்ததுவோ வாய்திறந்தே காத்து நிற்கும்
வேண்டாதோர் வரினுமது வாங்கிக் கொள்ளும்
வருபரரோ வரலாற்றுப் பேரென் றெண்ணிப்
பூண்டதது இராப்பொழுதும் பகலாய் மின்னால்
படருமொளிப் பிம்பத்தால் பண்ணோன் சொத்தே

ஆயிரம்பல் லாயிரமாய் அகழைச் சுற்றி
ஆல்லாஹ- அக்பரெனக் குரலெ ழுப்பி
வாயடங்காத் தொடர்ந்திறைவன் ஒருமை கூற
வைத்தனரே “மையித்தைக்” “கபுரின்” உள்ளே
தூயவனின் நாமத்தின் துணையி னோடே
தோடர்ந்தனவாம் இறுதிப்பணி ஆங்குற் றோரின்
நேயரினை மீண்டுமோர்கால் காண வொண்ணார்
நெஞ்சத்தால் வருந்தினரே நினைவிற் கோத்தார்

கைப்பிடிமண் மூன்றெடுத்து “கபுரை” நோக்கிக்
கொடட்டினரே கண்ணிரொடு சுற்றி நின்றோர்
கைபிடித்த மண்ணாலே “கபுரும்” முற்றும்
கண்ணிமைக்கும் பொழுதுள்ளே நிறைந்த தன்றோ
கைப்பிடித்துச் சமூகத்தை முன்னே கூட்டிக்
கொண்டுசென்ற பெருந்தலைவன் இறுதிப் போழ்தில்
கைப்பிடித்த மண்ணளவு நன்மை சேரக்
கைதூக்கி வேண்டினரே காப்போன் பாலே..

ஆயிரமாய் நின்றமனுத் திரளும் ஒன்றி
“அல்லாஹ_ அக்பர்”எனக் கோஷம் செய்ய
வாயொலியால் செவிப்புலனும் அடங்க ஆங்கு
வேறொலிகள் உணராதே செவிடாய்ப் போகும்
தாயனைய தலைவன்இனி தோன்றான் கண்முன்
தவித்தனவே உள்ளங்கள் தேடி னாலும்
வாயாதே இணையாகப் பிறிதா யொன்று
வாய்புலம்ப அனைவருமே விம்ம லானார்.

கூட்டத்துள் கூட்டமெனப் “பிக்கு” மாரும்
கூடிநின்றார் மதமற்றே இன்னும் பல்லோர்
கூட்டத்தின் இடையிடையே சோகத் தோடே
காண்பவர்கள் வியப்புறுமா(று) அதிக
மானோர்
வாட்டமுற்ற வதனங்கள் வாடிச் சோர்ந்து
வேறுருவங் கொண்டமுகத் தோற்றங் கொண்டோர்
நேற்றிருந்த நிலைமாறிச் சோகம் ஒன்றே
நித்தியமாய்ப் போனவரின் நிலைக்குள் ளானார்..

அம்மாவென் றழைக்கின்ற பிள்ளைக் கன்பாய்
ஆதரவு தருகின்ற தாயைப் போல
தம்மண்டை தேடிவரும் எவரென்றாலும்
தகுதிபாரா(து) உதவுகின்ற நற்பண் பாலே
தம்மினத்தோர் தாமன்றி வேற்றி னத்துத்
தக்காருந் திரண்டிருந்தார் இறுதிப் போழ்தில்
நம்மவருள் ஒருவரைத்தாம் இழந்தோம் என்றே ;
நினைவினிலே நனவறியாப் புலன்சோர்ந் துற்றார்..

அடக்கமுற்ற உடல்மண்ணுள் அமைதி கொள்ள
அகழ்மூடிச் சுற்றியுள்ளோர் பிரார்த்தித் தோத
நடக்கவேண்டா நிகழ்வொன்று நடந்த தாலே
நிர்க்கதியாய்ப் போனவன்னார் போரா ளிப்பேர்
தடுப்பாரற்(று) அருகிருந்தே அழுதார் சோகந்
தாழாதே சிலரொதுங்கிச் சோர்தார் கண்கள்
வடித்தகண்ணீர் சேர்ததெடுத்தால் நதியொன் றோடும்
வாகாகப் பெருகியதே வரலா றொன்றே

Dr Ahamed Jinnahsherifudeen

0 comments:

Post a Comment