Wednesday, September 12, 2018

எரிபொருள் விலைச் சூத்திரத்தை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவது தவறு- தொழிற்சங்கங்கள்

September 12, 2018

நாட்டில் மாதா மாதம் முன்னெடுக்கப்பட்டு வரும் எரிபொருள் விலையேற்றத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாகவாவது மாற்றியமைக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்த சூத்திரத்தினால் நாட்டில் பொருளாதார நிலை உறுதியில்லாமல் போவதாகவும் ஒன்றிணைந்த மாகாணங்களின் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலை நாட்டிலுள்ள அனைத்து விடயங்களுடனும் தொடர்புபடுகின்றது. எரிபொருள் விலை அதிகரிக்கும் போது பஸ் கட்டணம் அதிரிக்கின்றது. பாடசாலை மாணவர்களுக்கு சேவையிலுள்ள வாகனங்களின் கட்டணம் அதிரிக்கின்றது. மரக்கறி வகைகளின் விலை அதிகரிக்கப்படுகின்றது.

அத்துடன், அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தினதும் விலைகளை அதிகரிக்க வேண்டி ஏற்படுகின்றது. மக்களின் வாழ்க்கைச் செலவு ஒவ்வொரு மாதமும் அதிகரித்துச் செல்லும் ஒரு நிலைமையை நாடு எதிர்கொள்ள வேண்டி வருகின்றது.

கடந்த நான்கு மாதங்களுக்குள் பெற்றோலின் விலை 32 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த சூத்திரம் மாதாந்தம் மாற்றப்படுவதனால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. அரசாங்கம் என்று ஒன்று காணப்படுவது மக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கே ஆகும்.

உலக சந்தையில் விலை அதிகரிக்கப்படினும், மக்களுக்கு அந்த சுமையை செல்ல விடாமல் முகாமை செய்வது தான் அரசாங்கத்தின் பணியாக இருக்க வேண்டும் எனவும் அச்சங்கங்கள் சுட்டிக்காட்டின.

இந்த சூத்திர முறைமையை மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும். இதுவரையில் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் கூட இதனை அறியாதவர்களாக உள்ளனர். உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது எந்தளவு குறையும் என்பதை மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் அச்சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தனர். 

0 comments:

Post a Comment