19 JUNE 2018
வவுனியா – கரப்பன்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தமை வட மாகாணத்தில் வசிக்கும் அனைத்து பெற்றோர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதியினருக்கு மகன் ஒருவரும் இரு பெண் குழந்தைகளுமாக ஓர் அழகிய குடும்பம்.
இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு குறைவான இருதய செயற்பாட்டின் தாக்கத்தினால் ரியோன் தம்பதியினரின் மூத்த புதல்வன், சிறுவனாக இருந்து போதே இறைவனடி சேர்ந்தார்.
பல கனவுகளுடனும், பாரிய எதிர்பார்ப்புடனும் வளர்த்து வந்த தங்களது மூத்த மகனின் இழப்பை தாங்க முடியா துயரத்தில் ஆழ்திருந்த பெற்றோருக்கு 14 வருடங்கள் கடந்த நிலையில் காத்திருந்த அதிர்ச்சி மற்றுமொரு தாங்க முடியாத சோகமாகும்.
கடந்த மே மாதம் முதற்பகுதியில் ரியோன் தம்பதியினரின் இரண்டாவது குழந்தையான 8 வயதுடைய தன்சிகா என்ற சிறுமி இருதய குறைப்பாட்டு நோயினால் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றார்.
மேலதிக சிகிச்சைகளுக்காக பல வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும், வைத்தியர்களின் பதில்கள் பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே காணப்பட்டது.
நாட்கள் செல்ல செல்ல சிறுமி, தனது செயலாற்றலையும் இழக்க துவங்கினார்.
பெற்றோரை பிரிய மறுத்து அவர்களை தன்னைவிட்டு பிரிய வேண்டாம் எனவும் கேட்கின்றாள் அந்த சிறுமி.
சிறுமியின் நினைவுகளும் கண்ணீருமாய் காலத்தை கடத்திய பெற்றோருக்கு கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அந்த சிறுமி இந்த உலகை விட்டு பிரிய போகிறார் என்ற செய்தி தெரியாது....!
பெற்றோரின் கண்ணெதிரே அனைத்து வருத்தங்களில் இருந்தும் முக்தி பெற்று இறைவனடி சேர்ந்தாள் சிறுமி தன்சிகா.
இந்நிலையில் ரியோன் தம்பதியினரின் மூன்றாவது மகளான 7 வயதுடைய சரணிகா மாத்திரமே குடும்பத்திற்கும், பெற்றோருக்கும் ஆதரவாய் வசிக்கின்றாள்.
மே மாதம் உயிரிழந்த குழந்தையின் இறுதி சடங்கினை நிறைவு செய்த பெற்றோருக்கு இறைவன் ஆறுதல் பரிசாக மீண்டும் ஒரு சோகத்தையே வழங்குகிறான்.
7 வயதான சரணிக்காவும், சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த போதே அந்த சிறுமியும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அறிய கிடைத்துள்ளது.
உடனடியாக இருதய மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள உதவிகள் கோரப்பட்டன.
அநுராதபுரம் போதனா வைத்தியாலையில் இருந்து நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இருதய தேவைக்கான தகவல்கள் அனுப்பப்படுகின்றன.
தகவல் பரிமாற்றப்பட்டுக்கொண்டிருந்த அந்த வேளையில் பெற்றோரிடமிருந்தும், இவ்வுலகை விட்டும் பிரிந்தும் சென்றாள் சரணிக்கா.
இவர்களின் பிரிவு வவுனியா மாவட்டம் மாத்திரமின்றி வட மாகாணத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment