June 25, 2018
ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நடைபெற்ற ஏ குழுவுக்கான ஆரம்பப் போட்டி தொடர்பான முன்னாய்வு செய்தியையும் போட்டித் தொடர்பான செய்தியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் அரிய இளம் கால்பந்தாட்ட வீரர் மொஹமத் அயான் சதாத் இலங்கைக்கும் தனது பாடாசாலை றோயல் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்தார்.
அத்துடன் அவர் பயிற்சி பெறும் மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியை கற்றுக் கொடுத்தவர்க்கும் இந்த பெருமை சேருகின்றது. பீபா உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னோடியாக நடத்தப்பட்ட கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் பலனாகவே இந்த அரிய வாய்ப்பு அயான் சதாத்துக்கு கிடைத்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 211 நாடுகளைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் போட்டி தொடர்பான முன்னோட்டக் கட்டுரையையும் போட்டி தொடர்பான செய்தி தொகுப்பையும் எழுதுவதற்கு அயான் சதாத் தெரிவானமை பெருமைக்குரிய விடயமாகும். மொஸ்கோ, ஸ்பார்ட்டக் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தில் அண்மையில் நடைபெற்ற கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியின் ஓர் அம்சமான நட்புறவு, சமத்துவம், நேர்மை, சுகாதாரம், சமாதானம், அர்ப்பணிப்பு, வெற்றி, பாரம்பரியம், மதித்தல் ஆகிய ஒன்பது பெறுமதிமிக்க பண்புகளை உள்ளடக்கிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்திலும் அயான் சதாத் உரையாற்றினார்.
இவ்வாறான ஒரு வாய்ப்பு கிடைத்ததையிட்டு பெருமை அடைவதாக அயான் சதாத் நாடு திரும்பியதும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அயான் சதாத் உட்பட பலருக்கு விருதுகளும் டிப்ளோமா சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இதேவேளை, கெஸ்ப்ரோம் நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சியில் இலங்கை சார்பாக மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தைச் சேர்ந்த மொஹமத் அயான் சதாத்தின் சகாவான தினூக்க பண்டார (நுகேகொடை, புனித சூசையப்பர் கல்லுரி) கோல் காப்பாளராகத் தெரிவாகி லயன் அணிக்காக விளையாடினார்.
இவர் மூன்று போட்டிகளில் கோல்காப்பாளராக விளையாடி ஒரு கோலை மாத்திரமே விட்டுக்கொடுத்தார்.
இவர்கள் இருவரும் மற்றைய நாடுகளின் சிறுவர்களுடன் மொஸ்கோ லுஸ்னிக்கி விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண ஆரம்ப விழா வைபவத்தில் கலந்துகொண்டதுடன் ரஷ்யாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான ஆரம்பப் போட்டியையும் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பு கிட்டியது.
நட்புறவுக்கான கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு தங்களைத் தெரிவு செய்த மென்செஸ்டர் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் ஸ்தாபத் தலைவர் ஒகஸ்டின் ஜோர்ஜ், பயிற்சியகத்தின் சர்வதேச விடயங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் மற்றும் ஆலோசகர் முஹீத் ஜீரான் ஆகியோருக்கு அயான் சதாத்தும் தினூக்க பண்டாரவும் நன்றிகளைத் தெரிவித்தனர்.
-Vidivelli
0 comments:
Post a Comment