Wednesday, June 27, 2018

வாழ்க்கையில் முன்னேற விருப்பமா! தோல்விகளில் துவண்டு விடாத ஜாக் மா! கதையை படியுங்கள்

  June 28.2018  

 

1964 ஒக்டோபர் 15 ஆம் திகதி சீனாவின் எழில்மிகு ஷங்காய் நகருக்கு அருகேயுள்ள ஹங்ஷூ பகுதியில் ஜாக் மா பிறந்தார். 3 பிள்ளைகளைக் கொண்ட வறுமையின் பிடியில் சிக்குண்டிருந்த குடும்பத்தின்உறுப்பினரே ஜாக் மா. அவருடைய பெற்றோர் ‘பென்தாங்’ எனப்படும் பாரம்பரிய பாடல்களை இசைக்கும் கலைஞர்கள்.

12 வயதிலே ஆங்கில மொழியைக் கற்க ஆரம்பித்த ஜாக்மா, அம்மொழியை வளப்படுத்திக் கொள்ள ஹாங்ஷூ குட்டையின் அருகிலுள்ள ஹொட்டலுக்கு நாளாந்தம் 40 நிமிடங்கள் சைக்கிளில் பயணம் செய்வார். எட்டு வருடங்கள் அப்படி போய் வந்தார். அங்கே உல்லாசப் பயணிகளுக்கு இலவச வழிகாட்டியாக பணியாற்றினார்.

கல்விக்காக கடுமையான கஷ்டங்களை எதிர்கொண்ட அவர் பல்கலைக்கழக நுழைவு பரீட்சையில் இருதடவை சித்தியடையவில்லை. பிறகு மிக மோசமான பல்கலைக்கழகத்திற்கு பெயர்போன அவரது பிரதேசத்திலே உள்ள ஹங்ஷூ பல்கலைக்கழகத்திற்கு 1984 இல் நுழைந்தார்.

அங்கே பல்கலைக்கழக கற்கையை முடித்து வெளியாகிய பின்னர் 100 – 120 யென் (12-15 டொலர்கள்) சம்பளத்திற்காக ஐந்து வருடங்கள் ஆங்கில மொழி ஆசிரியராக பணியாற்றினார்.

அக்காலப்பகுதியில் அமெரிக்கா செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்தார். விண்ணப்பித்த 16 தடவைகளும் அவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பலவற்றில், குறிப்பாக ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் உயர்கல்விக்காக 30 தடவைகள் விண்ணப்பித்தார். அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டன.

அவை ஜாக்மாவின் மனசை கடுமையாக பாதித்தன.

அவருடைய தொழிலினால் கிடைத்த மிகச் சிறிய தொகை சம்பளம் இன்னொரு தொழிலொன்றை தேட அவரை நிர்ப்பந்தித்தது. விளைவாக கே.எஃப்.சி உணவகத்தில் சுத்திகரிப்பாளர் தொழில்வாய்ப்பு ஒன்று இருக்கும் செய்தியை சடுதியாக கேள்விப்படுகிறார். அதற்கும் விண்ணப்பிக்கிறார். அப்படிவிண்ணப்பித்த 24 பேரில் 23 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நிராகரிக்கப்பட்ட ஒரு விண்ணப்பம் ஜாக்மாவுடையாது.

இறுதியில் தன்னார்வ பொலிஸ் படையில் சேரலாம் என முயற்சித்து, அதற்கு விண்ணப்பிக்கிறார். அவருடன் இன்னும் 14 பேர் விண்ணப்பிக்கின்றனர். இருவரைத் தவிர அனைவரின் விண்ணப்பங்களும் ஏற்கப்படுகின்றன. நிராரிக்கப்பட்ட இரு விண்ணப்பங்களில் ஒன்று ஜாக்மா உடையது.

ஜாக்மாவை பெருங்கவலை ஆட்கொள்கிறது.

இப்படியிருக்கையில் 1995 இல் மொழிபெயர்ப்பாளராக அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு செல்லும்வாய்ப்பு கிடைக்கிறது.

அமெரிக்க விஜயத்தில் இன்டெர்நெட் பற்றி அவருடைய நண்பர்கள் அவருக்கு அறிமுகம் செய்துவைத்தனர். முதன்முறையாக கீபோட்டை தொடும் சந்தர்ப்பமும் அவருக்கு அங்குதான் வாய்த்தது.

பின்னர் அங்கிருந்து நாடு திரும்பிய ஜாக்மா ‘சீனப் பக்கங்கள்’ என்ற பெயரில் இணையத்தளமொன்றை உருவாக்கினார். ஆனாலும் அது எதிர்பார்த்த இலாபத்தை ஈட்டித் தரவில்லை.

அப்படியிருக்கையில்தான்; ஜாக்மாவுக்கு விசித்திரமான சிந்தனை உதிக்கிறது.

அமேஷன் மற்றும் அய்பேய் இணையத்தளங்களுடன் போட்டி போடுவது பற்றிய சிந்தனையே அது

நம்பிக்கையீனத்தின் உச்சத்தினால் வந்த பைத்தியக்கார சிந்தனை என்றே மக்கள் அதனை நம்பினர்.

1999 இல் தனது நண்பர்களை இணைத்துக் கொண்டு அந்த சிந்தனைக்கு வடிவம் கொடுத்தார். மலாலிம் எனும் பகுதியில் தனது திட்டத்தை ஆரம்பித்தார். அதற்காக தனது மனைவியிடமும் கடன் வாங்கினார்.

அந்த இலக்ரோனிக் வணிக நிறுவனத்திற்கு அலிபாபா என்ற பெயரைச் சூட்டினார். அலிபாபாவும்நாற்பது திருடர்களும் என்ற கதை அனைவருக்கும் பரீட்சயமான ஒன்று என்றடிப்படையில் அப்பெயரைசூட்டினார்.

அவர் உருவாக்கிய அந்த அலீபாபா நிறுவனம் இன்று இராட்சத நிறுவனமாய் வானுயர்ந்து நிற்கிறது. இன்று அந்த அலீபாபா கம்பனியின் வருடாந்த விற்பனை 170 பில்லியன் டொலர்களை தாண்டியிருக்கிறது. அங்கு 22 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உலகின் சுமார் 70 இற்குமேற்பட்ட நகரங்களில் பணியாற்றுகின்றனர்.

2003 இல் சீனாவின் ஐபேய் இணையத்தளத்திற்கு போட்டியாக தாவ்போவ் எனும் இணையத்தளத்தளத்தையும் ஆரம்பித்தார். 2005 ஒக்டோபரில் அது சீனாவின் இலக்ரோனிக் சந்தையின்70 வீதமான பங்குகளை தனதாங்கிக் கொண்டது.

சாதாரண ஆங்கில ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த ஜாக்மா, தனது சுய முயற்சியினால் மிகப்பெரும் கோடீஸ்வராக மாறி, சீனாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவராக இன்றுமாறியிருக்கிறார். உலகின் மில்லியன் கணக்கான இளைஞர்களின் உந்துசக்தியாக திகழ்கிறார்.

முன்பு அவருக்கு வாய்ப்புக் கொடுக்க மறுத்த ஹார்வாட் பல்கலைக்கழகம் இப்போது அவருக்கு கௌரவகலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.

ஜாக்மாவின் வாழ்க்கையிலிருந்து நாம் படிப்பதற்கு நிறையவே உள்ளன. தொடர் தோல்விகளினால்துவண்டு போயிருப்பவர்களுக்கு ஜாக்மா பெரும் உட்சாகத்தை தருகிறார்.

சாதாரண சம்பளத்தில் இருந்து உலகின் கோடீஸ்வரராக தன்னை மாற்றிக் கொண்ட ஜாக்மாவின்வாழ்வு எமக்கு சொல்வது இதுதான். யாரும் நம்பிக்கை இழக்காதீர்கள். நிராசை அடையாதீர்கள். முயற்சித்துக் கொண்டே இருங்கள். ஒருநாள் வெற்றியடைவீர்கள்.

A W M Basir

நன்றி: வைகறை இதழ்: 47




0 comments:

Post a Comment