Wednesday, June 27, 2018

கிழக்கில் ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு ! கல்வித் திணைக்களம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் - ஆசிரியர் சங்கம்


June 28, 2018
 

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுக்கூட்டத் தீர்மானம்.
நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் ஆசிரிய இடமாற்றம் மிகவும் முறைகேடாக நடைபெறுகின்றது. இதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு ஆசிரியர்களின் எவ்வகையான இடமாற்றமாக இருந்தாலும் வருட இறுதியில் நடைபெறவேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

22.06.2018 அன்று திருகோணமலையில் நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் பிராதான தீர்மானமாக ஆசிரியர்களின் இடமாற்றங்கள் வருட இடைநடுவில் நடைபெறக்கூடாது எனவும் அவ்வாறு நடைபெற்றால் உரியவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இத்தகைய இடமாற்றங்கள் மிகமோசமாக நடைபெறுவதாகவும் மாகாணக் கல்வித் திணைக்களம் ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றங்களைப் புறக்கணித்து தமது இஸ்டத்திற்கு இடமாற்றங்களை வழங்குவதாகவும் தீர்மானங்களை முன்மொழிந்தவர்கள் சுட்டிக்காட்டினர்.

2017ஆம் ஆண்டு இடமாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பெரிதும் ஏமாற்றப்பட்டதோடு பல தடவைகள் ஆசிரிய தொழிற் சங்கங்களை அழைத்து இடமாற்ற சபையை நடாத்திவிட்டு, இடமாற்றம்பெறும் ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் வெளியிட்டுவிட்டு  மாகாணக் கல்வித் திணைக்களம் இடமாற்றத்தை இரத்து செய்தது. இது அடிப்படையான மனிதஉரிமை மீறலாகும். இதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரே முழுக்காரணம் என எடுத்துரைக்கப்பட்டது.

ஆகையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்காவிட்டால் கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment