Wednesday, June 27, 2018

கொழும்பிலுள்ள 50,000 குடும்பங்களுக்கு வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படும் - மங்கள


June 28 2018 

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு, சகல வசதிகளுடன் கூடிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் கருத்திட்டத்தின் அடிப்படையில், கொழும்பிலுள்ள 50,000 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

"நிலையான நகரங்கள்" என்ற எண்ணக்கருவின் கீழ், ஏழை மற்றும் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு, மின்சாரம், நீர், சிறந்த சுகாதார சேவை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறந்த வாழ்விடங்களைப் பெற்றுக்கொடுப்பதே தமது எண்ணமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மும்பையில், அண்மையில் நடைபெற்ற ஆளுநர்களின் வணிக வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே, அவர் இந்த விடயத்தைக் தெரிவித்தார்.

கொழும்பில் உருவாக்கப்பட எண்ணப்பட்டுள்ள வீட்டுத் திட்டம், ஆசிய உட்கட்டுமான முதலீட்டு வங்கியுடன் இணைந்து உருவாக்கப்படும் எனவும், சகல வசதிகளுடன் கூடிய தொடர்மாடி வீடுகளை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி இலக்குகள் 2030 என்ற இலக்கை அடைய இலங்கை விரிவான செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளதோடு, அந்த இலக்குகளின் 11வது விடயமான “நிலையான நகரங்கள் மற்றும் சமூகங்கள்” என்ற விடயத்துக்கு முக்கியத்துவமளித்து செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை நகர்ப்புறங்களில் அடைவதற்கு இலங்கை அரசாங்கம் மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது.

நகரங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment