Thursday, June 28, 2018

தாய் நாட்டின் மீது அன்பு, அக்கறை இருந்தால் அமெ. பிரஜாவுரிமையை கோட்டா தூக்கி எறிய வேண்டும்

June 29, 2018

கோட்டாபய ராஜபக்ஷ தாய் நாட்டின் மீது உண்மையான அன்பும் அக்கறையும் கொண்டிருந்தால் அமெரிக்க பிரஜாவுரிமையை தூக்கி எறிய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் நேற்று தெரிவித்தார்.

தனது சொந்த நாட்டை பொருட்படுத்தாது பிறிதொரு நாட்டின் பிரஜாவுரிமையை பெற்றிருப்பது தார்மீகத்துக்கு எதிரான செயலென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிறிகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அமெரிக்க பிரஜாவுரிமையை இரண்டே மாதங்களில் ரத்துச் செய்ய முடியுமென்றும் இல்லையேல் இரத்துச் செய்ய அவசியம் இல்லையென்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் அவர் இந்நாட்டின் கடவுச்சீட்டு மற்றும் பிரஜாவுரிமையை பொருட்படுத்தவில்லையென்பது எமக்கு புரிகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

நாட்டில் மீண்டும் ஹிட்லர் ஆட்சி வர வேண்டுமென்றே சிலர் விரும்புகிறார்கள். இவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவையே ஹிட்லர் என்று கூறுகிறார்கள். ஹிட்லருக்கும் கோட்டாவுக்கும் பல ஒத்த இயல்புகள் உள்ளன. ஹிட்லர் ஜேர்மனை ஆட்சி செய்திருந்தாலும் அவர் அவுஸ்திரியாவின் பிரஜை. அதேபோன்று கோட்டாவும் அமெரிக்கப் பிரஜை என்றும் அவர் கூறினார். ஜேர்மன் மற்றும் அவுஸ்திரிய மக்கள் ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உலகில் எந்தவொரு மூலையிலும் மீண்டும் ஹிட்லர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக அவர்கள் உலக நாடுகளுக்கு நிதியுதவி செய்கின்றனர். ஹிட்லருக்கு அந்நாட்டில் எவ்வித வரவேற்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment