Friday, November 30, 2018

ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதமர் பதவியை இலேசாக மீட்க முடியுமா?

   November 30, 2018

ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரதமர் பதவியை இலேசாக மீட்க  முடியுமா?

ரணில் பிரதமரானது கூட்டரசாங்கத்தின் மூலமேயாகும்,அதே கூட்டரசாங்கம் உடைந்தபோது ரணில் பிரதமர் பதவியை இழந்தார்.

இந்த நிலையில் புதிய பிரதமராக மஹிந்தவை ஜனாதிபதி நியமித்தார், இந்த நியமனமானது சட்டவிரோதமானது என்று ரணில் தரப்பு கூறினார்களே தவிர அதற்கு எதிராக நீதிமன்றம் சென்று தீர்வு தேட முயற்சிக்கவில்லை,அதனால் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியினால் பிரதமராக நியமிக்கப்பட்டது சட்டபூர்வமானதே என்பது நிரூபணமானது.

இந்த நிலையில் புதிய பிரதமரானவருக்கு பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பாண்மையில்லை என்ற காரணத்தைக்கூறி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

இந்த தீர்மானமானது பாராளுமன்ற நிலையியல் கட்டளையை பின்பற்றாமல் நிறைவேற்றப்பட்டது எனக்கூறி ஜனாதிபதி அந்த தீர்மானத்தை நிராகரித்திருந்தார்.அந்த நிராகரிப்பானது சரியானதா பிழையானதா என்ற வாதத்துக்கு அப்பால், பிரதமராக  மஹிந்த நியமிக்கப்பட்டது சரியானது என்று ஏற்றுக் கொண்ட விடயமே இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே கவணிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

பிரதமர் சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டிருந்தால், அந்த சட்டவிரோதமான பிரதமருக்கு எதிராக எப்படி நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர முடியும் என்ற கேள்விக்கும் இங்கே பதில் கிடைத்து விட்டது எனலாம்.

ஆகவே புதிய பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ சட்டபூர்வமான பிரதமரே என்ற நிலைக்கு வந்துவிட்டதனால்,அவருடைய பதவியை எப்படி வறிதாக்கலாம் என்றே நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட  ஒரு பிரதமரின்  பதவியை யாரும் இலேசாக பறிக்கமுடியாது என்பதை 19வது திருத்தச்சட்டம் தெளிவாகவே குறிப்பிடுகின்றது எனலாம்.

46. (1) (அ) அமைச்சரவை அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதை விஞ்சுதலாகாது;
அத்துடன்..

(ஆ) அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களினதும், பிரதி அமைச்சர்களினதும், கூட்டுமொத்த எண்ணிக்கை மொத்தத்தில் நாற்பதை விஞ்சலாகாது.

(2) பிரதம அமைச்சர்-

(அ) சனாதிபதிக்கு முகவரியிட்டனுப்பும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் அவரது பதவியை துறந்தாலொழிய; அல்லது

(ஆ) பாராளுமன்ற உறுப்பினரொருவராக இல்லாதொழிந்தாலொழிய ;

அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் அமைச்சரவை தொடர்ந்தும் பணியாற்றும் காலம் முழுவதும் அவர் தொடர்ந்தும் பதவி வகித்தல் வேண்டும்;

என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் சட்டபூர்வமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை, அவரது விருப்பத்துக்கு மாறாக பதவியினின்றும் எப்படி நீக்கலாம் என்ற கேள்விக்கு பதில் தேடவேண்டியுள்ளது. அதே நேரம் வேறு வழிகளிலோ அல்லது ஜனாதிபதியினாலோ ஒரு பிரதமரின் பதவியை எப்படி மீளப்பெற முடியும் என்ற கேள்விக்கும் விடை தேடவேண்டியுள்ளது.

இந்த நிலையில் புதிய பிரதமரின் பதவியை வறிதாக்குவது என்பது சட்டத்தின் பார்வையில் கடினமானதாகவே தென்படுகின்றது என்பதே உண்மையாகும்.

அதனால்தான் பிரதமர் மஹிந்த அவர்கள் ஒரு கட்டத்தில் கூறினார்; நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன், முடிந்தால் எனது பதவியை விட்டு என்னை நீக்கிவிடுங்கள் என்று கூறியிருந்தார். இதற்குள் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம் என்றும் என்னத்தோன்றுகிறது எனலாம்.

ஆகவே இன்றய அரசியல் நிலைமையானது ஆப்பிழுத்த குரங்கின் கதையானது போன்றுதான் உள்ளது.

நன்றி

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.

0 comments:

Post a Comment