Friday, November 30, 2018

பிரதமர், அமைச்சரவை நியமனங்களை எந்த நீதிமன்றிலும் விசாரிக்க முடியாது

December 01, 2018
 

பூர்வாங்க ஆட்சேபனையில் சட்டத்தரணிகள் தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்து அமைச்சரவையை நியமித்தமை பாராளுமன்ற நடைமுறைக்கு அமைவானதாக இருப்பதால் அதுகுறித்து எந்தவொரு நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பூர்வாங்க ஆட்சேபனை மனுவொன்றை தாக்கல் செய்து பிரதிவாதிகள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமராக ராஜபக்ஷவின் நியமனமும் அமைச்சரவை நியமனமும் சட்டரீதியற்றதென கூறி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீது எதிர்மனுவொன்றை தாக்கல் செய்த பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் ஆரம்பகட்ட எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

இந்த நியமனங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை சட்டரீதியானதென்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் பிரதிவாதிகள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களான ரணில் விக்கிரமசிங்க, ஆர். சம்பந்தன், அநுரகுமார திசாநாயக்க உட்பட 122 உறுப்பினர்கள் இந்த மனுமீதான மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ப்ரீத்தி பத்மன் சூரசேன மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இந்த மனுமீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

பாராளுமன்றம் தொடர்பில் பல மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவருவதால் பாராளுமன்றத்தோடு தொடர்புபட்ட இந்த மனு மீதான விசாரணையை விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணைகள் முடிவுற்று தீர்ப்பு வழங்கப்படும் வரையில் இந்த மனுமீதான விசாரணை நடத்தப்படக்கூடாதென்றும் சட்டத்தரணிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் சம்பவமொன்று தொடர்பிலான வழக்கு விசாரிக்கப்படுவதற்கும் உத்தரவிடப்படுவதற்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு கிடையாதெனவும் தெரிவித்து இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கவேண்டாமென்றும் சட்டத்தரணிகள் எடுத்துரைத்துள்ளனர்.

இங்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகஈஸ்வரன், உச்சநீதிமன்றத்தில் நடைபெறுவது பிறிதொரு வழக்கு என்பதால் குவோ வொறண்டோ றிட் ஆணையொன்றை கூறும் இந்த மனு முற்றுமுழுதாக முரண்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டிருப்பதால் பிரதமர் மற்றும் அமைச்சரவை தொடர்ந்தும் செல்லுபடியற்றது எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

இதன்போது இந்த முறைப்பாட்டுக்கு எதிராக ஆரம்பக் கட்ட ஆட்சேபணையை முன்வைப்பதாக பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நவம்பர் 14 ஆம் திகதி உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லையெனவும், அதனை உறுதிப்படுத்தும் பொருட்டு வீடியோ நாடாவை சமர்ப்பிக்க முடியுமென்றும் அவர் எடுத்துரைத்துள்ளார். அதன் பிரகாரம் அமைச்சரவை மற்றும் பிரதமர் சட்டரீதியானதாகவே இருப்பதாகவும் அவ்வாறான நிலையில் பாராளுமன்றம் தொடர்பில் ஆணையிடுவதற்கோ மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாதெனவும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன,

அரசியலமைப்பு தொடர்பில் அர்த்தம் கற்பிப்பதற்கு அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே இருப்பதால் இந்த மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு எடுப்பதற்கு அதிகாரம் கிடையாதென குறிப்பிட்டார்.

இதன்போது குறிப்பிட்ட மனுதாரர் சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன், 14 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சட்டப்படி நிறைவேறியிருப்பதாகவும் அந்த விபரம் பாராளுமன்றத்தின் சட்ட ரீதியான ஆவணமான ஹன்சார்ட்டில் பதியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு அந்த ஹன்சார்ட் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியால் மட்டும் மீள கூட்ட முடியும். அதன் பிரகாரம் 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். சட்டரீதியாக கூட்டப்பட்ட பாராளுமன்றத்தில் சட்ட ரீதியாகவே பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதால் நம்பிக்கையில்லாப் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான நிலையில் புதிய பிரதமரோ அமைச்சரவையோ தொடர்ந்தும் அதிகாரமற்றது எனவும் அவர்கள் சட்டவிரோதமாகவே பதவிகளில் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

இதன் காரணமாக எழுந்துள்ள நிலைமை மிக மோசமானதாகும். வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதில்லை, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. அது நாட்டுக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால், தான் எவ்வாறான அதிகாரத்தின் கீழ் பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவிகளிலும் செயற்பட முடியும் என்ற கேள்வி எழுப்பி பிரதிவாதியான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு குவோ தொறண்டோ ரிட் ஆணையை பிறப்பிக்குமாறு அவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் அந்தப் பதவிகளில் தொடர்ந்து செயற்படுவதை தடுக்கும் விதத்தில் இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதிவாதியான மஹிந்த ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன, உரிய நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்டரீதியாக நிறைவேற்றப்படவில்லை. நிலையியற்கட்டளைகள் இடைநிறுத்தப்பட வேண்டியது அரசியலமைப்புக்கு அமைவாகவே எனக் குறிப்பிட்ட அவர், இங்கு அவ்வாறு இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டினார். ஜனாதிபதியால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில்கூட அதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குரல் வழி மூலம் பிரேரணையை நிறைவேற்றுவது நிலையியற் கட்டளைக்கமைய இடம்பெற்றதாக அவர்கள் கூறுகின்ற போதும் அதன் போது பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் பிரேரணைக்கு அமைய நிலையியற் கட்டளை அனைத்தும் இடைநிறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment