Friday, November 23, 2018

சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்


November 23, 2018 

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சாரங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் சுகாதார அமைச்சுக்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு சுகாதார அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, இலவச சுகாதார சேவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலவீனமடைவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாட்டின் பொதுமக்களுக்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை பலமாகவும் வினைத்திறனாகவும் முன்னெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு துறையில் ஏதேனும் ஒரு குறைபாடு இருக்குமானால் அவற்றை சரி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அடுத்துவரும் சில மாதங்களுக்கு போதுமான அளவில் மருந்துப் பொருட்களை பேணி வருவதற்கு தேவையான தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மக்களை குழப்பும் வகையில் சில தரப்பினரால் முன்னெடுக்கப்படும் இத்தகைய போலிப்பிரச்சாரங்களை முறையடித்து, மக்களுக்கு அறிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக் காட்டினார்.

சிறுநீரக நோயை கட்டுப்படுத்துதல் மற்றும் அதனை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்ற நிலைமைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டு சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக குறித்த பிரிவினால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன், சிறுநீரக நோயை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான நிகழ்ச்சித் திட்டங்களே அதற்கு காரணம் என்றும் குறிப்பாக சிறுநீரக நோய் பரவிவரும் பிரதேசங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சித் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சிறுநீரக நோயாளிகளின் குடும்ப உறுப்பினர்களுக்காக கண்டி மற்றும் அனுராதபுர வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் தங்குமிட விடுதிகளின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, நுவரேலியா மற்றும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைகளை மக்களிடம் கையளிப்பதற்கு ஏற்படும் தாமதம் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் போதைப்பொருள் பிரச்சினையை ஒழிப்பதற்கு சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

பாடசாலை பிள்ளைகளின் சுகாதார மற்றும் போசணை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் கண்காணிக்கப்பட்டதுடன், அடுத்த வருடம் முதல் பாடசாலை பிள்ளைகளுக்கு பால் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

சுதேச மருத்துவத் துறையின் முன்னேற்றம் மற்றும் அதன் மேம்பாட்டுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ, அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

0 comments:

Post a Comment