Thursday, November 29, 2018

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்கிறாரா ஜெமீல்....?

29.11.2018

‘சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வழங்குவோம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனைத் தொகுதியைப் பிரதிநிதிப்படுத்தும் வகையில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட வாய்ப்பு வழங்குவோம். எனவே எமது கட்சியுடன் இணைந்து கொள்ளுங்கள்.’
இவ்வாறானதொரு அழைப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரான கலாநிதி ஏ.எம். ஜெமீல் அவர்களுக்கு நேற்றிரவு 28 அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த அழைப்பை முன்னாள் அமைச்சரான கலாநிதி ஜீ. எல்.பீரிஸ் அவர்களைத் தவிசாளராக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே விடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தரப்பு இந்த விவகாரம் தொடர்பில் கலாநிதி ஜெமீலை அவர்களைத் தொடர்பு கொண்டு நான் கேட்ட போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

‘சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் என்ற விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த விவகாரத்தில் நான் பின்னிற்கப் போவதும் இல்லை. கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த விவகாரத்தை கையில் எடுத்திருந்தாலும் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், எமது ஊருக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் என்ற விடயத்தில் என்னால் முடிந்தவற்றை செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன்’ என்றார்.

இதன்போது குறுக்கிட்ட நான், ‘இதுவல்ல எனது கேள்வி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உங்களை இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது என்பது உண்மையா?’ எனக் கேட்டேன்.
அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்காமல், ‘எமது ஊருக்கான தனியான உள்ளூராட்சி மன்றம் என்ற விடயத்தில் என்னால் முடிந்தவற்றைச் செய்யவே விரும்புகிறேன். அதனை அடைவதற்கு சிலவற்றைச் செய்ய வேண்டியும் வரும்தானே என சிலேடையாகப் பதிலளித்தார்.

குறிப்பு:

கலாநிதி ஜெமீல் அவர்களை நான் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் அவர் என்னுடன் ‘வட்ஸ்அப்’பில் தொடர்பு கொண்டார். அதன்போதே இந்த உரையாடல் இடம்பெற்றது. இதன் காரணமாக அந்த உரையாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை என்பதனை இங்கு பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

0 comments:

Post a Comment