Monday, January 7, 2019

கத்தியின்றி ஒலி மூலம் அறுவை சிகிச்சை


January 7, 2019

வெறும் ஒலியின் ஆற்றலால் நினைத்தபடி பொருட்களை அசைக்கவும், அந்தரத்தில் நிறுத்தவும் உதவும் ‘ஒலிக் கிடுக்கி’யை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
ஐநுாறு மிகச்சிறிய ஒலி பெருக்கிகளை ஒரு சட்டகத்தில் வைத்து, இடைப்பட்ட காற்றுவெளியில் ஒலி அலைகளை செலுத்தி, நுண்ணிய பொருட்களை அப்படியே நிறுத்தவும், நகர்த்தவும் ஒலிக் கிடுக்கியால் முடிகிறது.

ஸ்பெயினிலுள்ள, நவாரே பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனிலுள்ள, பிரிஸ்டால் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள், ஒலிக் கிடுக்கியை உருவாக்கியுள்ளனர்.
அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற , 96 வயது ஆர்தர் ஆஷ்கின், 1970ல் ஒளியை வைத்து செய்த ஆய்வு முடிவுகளை, ஒலியை வைத்தும் சாதிக்க முடியும் என இரு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் நிரூபித்துள்ளனர். ஒலிக் கிடுக்கியில் உள்ள பல நூறு ஒலிப் பெருக்கிகள் மனிதனின் செவிகளால் உணர முடியாத, 40 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஒலியைக் கிளப்பி பொருட்களை அந்தரத்தில் ஆட்டுவிக்கின்றன.

ஒலிக்கிடுக்கி கருவியை விரிவுபடுத்தி, தொலைக்காட்சித் திரை போன்ற கருவியை உருவாக்கி, அதில் முப்பரிமாணத்தில் காட்சிகளை உருவாக்க முடியும். அதைவிட மருத்துவத் துறையில் ஒலிக் கிடுக்கி தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பயன்படும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒலி அலைகளை உடலின் குறிப்பிட்ட பகுதியில் செலுத்தி, திசுக்களை அசைக்கவும், துண்டித்து அகற்றலாம்.
இதனால், கத்தியில்லாமல், நோயாளியின் உடலுக்குள் எந்த கருவியையும் செலுத்தாமல், அறுவை சிகிச்சையை செய்ய முடியும் என, இரு பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment