Sunday, January 13, 2019

மொரகஹகந்த செயற்திட்டத்திற்கு சவூதி அரேபியாவினால் 62 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி


January 14, 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் மேற்கொள்ளப்பட்ட மொரகஹகந்த – களுகங்கை செயற்திட்டத்திற்கு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் 62 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இலகு கால கடன் அடிப்படையிலான இந்தக் கடனுதவி அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஊடாக குறித்த நீர்த் தேக்கங்களின் வினைத்தின் அதிகரிக்கப்பட்டதுடன், சுத்தமான குடிநீரை வழங்குவதற்கு ஏற்ற வகையில் நீர்த்தேக்கங்களின் கொள்ளவினை அதிகரிக்கவும் முடிந்தது.

இதற்கு மேலதிகமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளுக்குத் தேவையான நீர்ப்பாசனத்தை இந்தத் திட்டத்தின் ஊடாக வழங்க முடிந்தமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செயற்திட்ட நிறைவு விழா புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லக்கல பசுமை நகரில் கடந்த வாரம் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீத், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதுவரை சவூதி அரேபியா அரசாங்கத்தினால் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மின்சார மற்றும் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட 14 பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாட்டில் மேற்கொள்வதற்கு சுமார் 374.7 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதிப் பங்களிப்பினை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேம்படுத்தும் நோக்கிலும் இலங்கையின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கிலும் இது போன்ற தொடர்ச்சியான உதவிகளை சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Daily Ceylon
– Rifthi Ali –

0 comments:

Post a Comment