Monday, January 14, 2019

அக்கரைப்பற்று, - நுரைச்சோலை வீட்டுத்திட்ட வீடுகளை புனர்நிர்மாணம் செய்து மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை .....!

14.01.2019

அக்கரைப்பற்று, -நுரைச்சோலைப் பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை புனர்நிர்மாணம் செய்து மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் அம்பாறை மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் துறைசார் முக்கியஸ்தர்கள் கொண்ட குழுவினர் அவ்வீட்டுத் திட்டத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டனர்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸானின் வழிகாட்டலின்கீழ் இக்குழுவினர் வீடமைப்புத் திட்டத்தினைப் பார்வையிட்டதுடன், சேத விபரங்களையும் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதன் படிமுறைகள் பற்றியும் கலந்துரையாடினர்.

இவ்வீடமைப்புத் திட்டத்தினை துப்புரவு செய்து புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அரச படையினரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வதெனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 14ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களுக்காக கடந்த 2006ஆம் ஆண்டு சவூதி அரசாங்கத்தின் நிதி மூலம் அக்கரைப்பற்று நுரைச்சோலைப் பகுதியில் 500வீடுகளைக் கொண்ட இவ்வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டது யாவரும் அறிந்த விடயம்

முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் பேரியல் அஷ்ரஃபின் முயற்சியின் பயனாக சவூதி அரேபிய நாட்டின் 550மில்லியன் ரூபா ஸகாத் நிதியினைக் கொண்டு இவ்வீடமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.

பாடசாலைகள், வைத்தியசாலை, சந்தைக்கட்டடத் தொகுதி, பஸ்தரிப்பு நிலையங்கள், ஓய்வு விடுதிகள், சனசமூக நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றன மிக நவீன முறையில் நிர்மாணிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இவ்வீடமைப்புத் திட்டம் இதுவரை மக்களிடம் கையளிக்கப்படாமல் உள்ளது.

இவ்வீடமைப்புத் திட்டமானது தற்போது பறவை, விலங்குகள், விசஜந்துக்களின் வாழிடமாகவும், சமூக விரோதச் செயற்பாட்டுத் தளமாகவும் மாறியுள்ளது.இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார்ந்தோருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் தெரியப்படுத்தியதனையடுத்து இவ்வீடமைப்புத் திட்டத்தினை புனர்நிர்மாணம் செய்து மக்களிடம் கைளிக்கும் வகையிலேயே இக்குழுவினர் விஷேட விஜயத்தினை மேற்கொண்டு சேத விபரங்களை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment