Sunday, December 30, 2018

இராணுவம் வசமுள்ள விவசாய நிலங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை

30 Dec, 2018

மாகாணத்தில் இராணுவத்தினர் வசமுள்ள விவசாய நிலங்களை, எதிர்வரும் ஜனவரி மாதத்தின் 2ஆவது வாரத்திற்குள் விடுவிப்பதற்கு, இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள 1099 ஏக்கர் விவசாய நிலங்கள் விடுவிக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் கீழ் இந்தக் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜயபுரம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில், வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான 194 ஏக்கர் நிலப்பரப்பும் குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள மேலும் 285 ஏக்கர் நிலப்பரப்பும் விடுவிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உடையார்கட்டுக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரித்தான 120 ஏக்கர் நிலப்பரப்பும் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெல்லம்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலப்பரப்பும் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

வட மாகாண ஆளுநரின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் இந்த காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும் எனவும் இராணுவத்தினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment