Thursday, August 2, 2018

திருகோணமலை ஷண்முகா ஹபாயா சர்ச்சை : ஏமாற்றும் கல்வி அமைச்சு……!


AUGUST 1, 2018

திருகோணமலை ஷண்முகா ஹிந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஹபாயா சர்ச்சையைத் தொடர்ந்து அங்கு கற்பித்துக் கொண்டிருந்த மூன்று ஆசிரியைகளும் தீர்வு வரும் வரைக்கும் வேறு ஒரு பாடசாலைக்கு 3 மாதங்களுக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டது யாவரும் அறிந்ததே.

மூன்று மாதங்களின் முடிவில் ஒரு தீர்க்கமான முடிவினைத் தருவதாக கல்வி அமைச்சு கூறியிருந்தது.

இது சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த முறைப்பாட்டிற்கு பதிலளித்திருந்த ஆணைக்குழு கல்வி அமைச்சின் முடிவு வரும் வரைக்கும் காத்திருக்குமாறு தெரிவித்தது.
அந்தக் காலவரையறை சென்ற ஜூலை 26ம் திகதியோடு முடிவடைகிறது.

இது சம்பந்தமாக ஆசிரியைகள் மாகாணக் கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்ட போது இது சம்பந்தமாக ஒரு சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அனைத்து மதத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆசிரியைகளும் தங்களுக்கு விரும்பிய கலாச்சார ஆடைகளோடு பாடசாலைக்குச் செல்ல முடியும் என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அந்த சுற்று நிருபம் இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடும் என்றும் சென்ற வாரம் உறுதியளித்திருந்தார்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரைத் தொடர்பு கொண்ட போது சுற்று நிருபத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அது தயாராகும் வரைக்கும் இடமாற்றப் பட்ட பாடசாலையிலேயே ஆசிரியைகளை இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.சரி சிங்களச் சுற்று நிருபத்தின் பிரதியையாவது தாருங்கள் என்று கேட்டதற்கு எந்தப் பதிலுமில்லாமல் மீண்டும் மூன்று மாதகாலத்திற்கு அவர்களின் தற்காகலிக இடமாற்றம் நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் யாப்பில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பின்பற்றுவதற்கு தடையாக இருக்கும் ஒரு பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாடுகளை விசாரித்து தீர்க்கமான முடிவு சொல்வதற்கு கல்வி அமைச்சுக்கு மூன்று மாத காலம் போதாமல் இன்னும் மூன்று மாதங்கள் தேவைப்படுகின்றன.

தமிழில் ஒரு சுற்றறிக்கையை மொழி பெயர்க்க முடியாத மனித வளத்தட்டுப்பாட்டிலா கல்வி அமைச்சு இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கேள்வியும் எழுகிறது.

அத்தோடு தங்களின் அடிப்படை உரிமைக்காகப் போராடும் முஸ்லிம் ஆசிரியைகளின் கோரிக்கைகள் வேண்டுமென்றே தட்டிக் கழிக்கப்படுகின்றன.

குரல்கள் இயக்கம் இது சம்பந்தமான தொடர்ச்சியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

KalMunai Today

0 comments:

Post a Comment