Saturday, August 18, 2018

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் வாக்கெடுப்பு?


19.08.2018

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றில் விசேட வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தெற்கின் வார இறுதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தீர்மானம் மிக்கதோர் வாக்கெடுப்பின் மூலம் மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து அரசாங்கம் நிர்ணயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய எல்லை நிர்ணய அடிப்படையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமாகின்றது.

எனினும், பழைய முறையிலா அல்லது புதிய முறையிலா தேர்தலை நடத்துவது என்பது குறித்து பிரதான அரசியல் கட்சிகள் இதுவரையில் எவ்வித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன பழைய முறையில் தேர்தல் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் முறைமை குறித்து இதுவரையில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியும் பழைய முறையில் தேர்தல் நடத்துமாறு மேடைகளில் கூறி வருகின்ற போதிலும் அதிகாரபூர்வ நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் புதிய முறையில் தெர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அரசியல் கட்சிகளின் முரண்பாட்டு நிலைமை எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றில் வாக்கெடுப்பிற்கு விடப்படும் போது தென்படும் என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த குளறுபடிகளினால் மாகாணசபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் சர்ச்சை நிலைமை நீடித்து வருகின்றது.

0 comments:

Post a Comment