July 25, 2018
முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விடயத்தில் சட்டத்தரணி ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் ஒரு அறிக்கையும், ஜனாதிபதி சட்டத்தரணி தலைமையில் ஒரு அறிக்கையும் வேறு வேறாக சமர்பிக்கப்பட்டுள்ளன.
இதில் ஸலீம் மர்ஸுப் அவர்களினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சார்பாக இப்பெண்கள் கூட்டம் வக்காளத்து பிடிக்கின்றார்கள். காரணம் அவர்களின் கோரிக்கைக்கு சார்பாக ஸலீம் மர்ஸுப் அவர்களின் அறிக்கை அமைந்துள்ளது என்ற காரணத்தினாலாகும். அவ்வறிக்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் இருப்பதைக் காண்கின்றோம்.
உதாரணமாக தலாக் சம்பந்தமான விடயம்: தலாக் என்பது வாயினால் மொழிந்து விட்டால்; மாத்திரம் உண்டாகாது. மாறாக காழி முன்னிலையில் பதிவு செய்வதன் மூலம்தான் உண்டாகும் என்று ஒரு சட்டத்தை புதிதாக அவர்கள் தனது அறிக்கையில் உள்வவாங்கியிருக்கின்றார்கள்.
இது குர்ஆன் சுன்னாவிற்கு முற்றாக மாற்றமான ஒரு கருத்தாகும். கணவன் தனது மனைவிக்கு அவன் எங்கிருந்து இந்த வார்த்தையைக் கூறினாலும் தலாக் உண்டாகும் என்பது மார்க்கச் சட்டமாகும்.
மேலும் பெண்கள் காழியாக நியமிக்கப்படல் வேண்டும் என அவர்களின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பெண்ணுக்கு வலீ இல்லாத போது காழியே வலியாக நிற்க வேண்டும். வலியாக வருபவர் கட்டாயம் ஒரு ஆணாக இருத்தல் வேண்டும் என்பது நிபந்தனையாகும். ஆனால் பெண்கள் காழியாக நியமிக்கப்பட்டால் வலீயாக நிற்கும் விடயத்தில் மார்க்கப் பிரச்சினை உருவாகின்றது. இது போன்ற மார்க்க சட்டம் தொடர்பான பல சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது.
பஸ்ஹ் விடயத்தில் மதாஹ் வழங்கப்படல் வேண்டும் என்று அவர்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களது திருமண வயதெல்லை விடயத்திலும் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. இவைகள் மார்க்கத்தில் இல்லாத விடயங்களாகும்.
ஜனாதிபதி சட்டத்தரணிகள் தலைமையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மிகவும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இருப்பதைக் காண்கின்றோம். அவ்வறிக்கை பெண்கள் தரப்பால் விடப்படுகின்ற அனைத்து கோரிக்கைகளுக்கும் ஷரீஅத்திற்கு முரணில்லாத வகையில் அழகான வழிகாட்டல்களுடன் அமைந்துள்ளது.
பெண்களை காழிமார்களாக நியமிக்கும் விடயத்தில் அவர்களை காழியாக நியமிக்காமல் காழிநீதி மன்றத்தில் ஜுரியாக நியமித்தல், பஸ்ஹ்க்கு பதிலாக ஹுல் என்ற சட்டத்தை கையாழுதல், திருமணப்பதிவு மற்றும் பலதார மணம் விடயங்களில் கடுமையான சட்டங்களை அமுல் படுத்தல் போன்ற விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
எனவே இவ்வாறு மார்க்கத்திற்கு முரணாக அமைந்திருக்கும் சட்டத்தரணி ஸலீம் மர்ஸுப் அவர்களின் அறிக்கைக்கு சார்பாக கிறிஸ்தவ பெண் ஒருவரின் தலைமையில் குறிப்பிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய இப் பெண்கள் குழு ஒன்றுதிரழ்வதன் மர்மம்தான் என்ன? இவர்கள் கணவன் மார்களால் விடுபட்ட மூக்கனாங் கையிறு இல்லாத கூட்டமா?
போராட்டத்திற்காக நிகாப் அணிந்து வந்துள்ள இவர்கள் இதற்கு முன்னர் வழமையில் நிகாப் அணிகின்றவர்களா? அல்லது தொடர்ந்தும் அணியக் கூடியவர்களா? ஏன் இவ்வாறு இஸ்லாத்தையும் அதன் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்த முயற்சிக்கின்றீர்களா?
இவ்விடயத்தில் இலங்கை வாழ் முஸ்லிம்கள், பொறுப்புதாரிகள், இஸ்லாமிய அமைப்புகள் அசமந்தப் போக்கை தொடர்ந்தும் கையாழ்வது நல்ல விடயமாகாது. காலம் கடந்த பின் கவலைப்படுவதில் அர்த்தம் கிடையாது.
மேலும் விரல் விட்டு எண்ணக் கூடிய இப்பெண்கள் கூட்டம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களதும் பிரதிநிதிகள் அல்ல. எனவே அவர்களின் கோரிக்கைக்கு மட்டும் கவனம் செலுத்தி அறிக்கையில் மாற்றம் கொண்டு வருவது அனுமதிக்க முடியாத ஒரு விடயம் என்பதையும் ஆணித்தரமாகக் கூறிக் கொள்கின்றேன்.






0 comments:
Post a Comment