November 1, 2018
தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படும் விதம் சம்பந்தமாக பாராளுமன்றம் கூட்டப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் நீதிக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனத்திற்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கு அமைவாக தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் அரசியலமைப்புக்கு முரணான முறையில் பிரதமர் நியமிக்கப்பட்டதே நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிக்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதிக்கு பிரதமரை நீக்கும் அதிகாரம் யாப்பில் வழங்கப்பட்டிருந்தாலும் 19வது சீர்திருத்தத்தின் மூலம் பிரதமரை நீக்குவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றின் மூலமே பிரதமரை நீக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்தால் ஜனாதிபதியின் அனுமதியுடனோ அல்லது அனுமதி இல்லாமலோ பாராளுமன்றத்தை கூட்டும் அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும் கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சுட்டிக்காட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஜனாதிபதியின் குறித்த செயற்பாடு அரசியலமைப்புக்கு முரணானது என தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
நாட்டின் அரசியல் நிலைமை மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பன தொடர்பில் தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment