19.08.2018
கடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்துகொண்டிருக்கின்றது. இன்றைய (19/08/2018) Sunday Times இலும் பேராசிரியர் G L பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக சில கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை தொடர்பாக சற்று கண்ணோட்டம் விடுவோம்.
இங்கு வியாக்கியானத்திற்குட்படுத்தப்படுகின்ற பிரதான சரத்து 19 வது திருத்தத்தினூடாக மீள அறிமுகப்படுத்தப்பட்ட சரத்து 31(2) ஆகும். இது ஏற்கனவே இருந்தது. 18 வது திருத்தத்தினூடாக நீக்கப்பட்டது. அது மீண்டும் 19 வது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.
இந்த சரத்து பின்வருமாறு கூறுகின்றது;
“ No person who has been twice elected to the office of President by the People, shall be qualified thereafter to be elected to such office by the people.”
அதாவது, “ இரு தடவைகள் மக்களால் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை”. என்பதாகும்.
இங்கு பேராசிரியர் G L பீரிஸ் முன்வைக்கின்ற வாதம் ‘ இந்த சட்டம் ‘prospective’ வே தவிர ‘ retrospective’ அல்ல என்பதாகும். இச்சொற்களுக்குரிய நேரடித் தமிழ்ப்பதம் தெரியாது. இவற்றின் பொருள்; ‘prospective’ என்பது ஒரு சட்டம் அமுலுக்கு வந்தபின்னர் நடைபெறுகின்ற விடயங்களுக்கே அச்சட்டம் செல்லுபடியாகும். அதற்குமுன் நடைபெற்ற விடயங்களுக்கல்ல; என்பதாகும்.
‘ Retrospective’ என்பது சட்டம் பின்னர் இயற்றப்பட்டாலும் அதற்கு முன் நடந்த விடயங்களுக்கும் அது செல்லுபடியாகும்; என்பதாகும்.
உதாரணமாக முஸ்லிம்களுக்கு பலதார மணம்புரிதல் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. நாளை ‘ ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முஸ்லிம்களுக்கும் செல்லுபடியாகாது’ என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அது prospective என்றால் சட்டம் அமுலுக்கு வரமுன் முடித்த பலதார திருமணங்கள் பாதிக்கப்படாது. புதிதாக முடிக்க முடியாது. ‘retrospective’ என்றால் சட்டம் கொண்டுவரமுன் முடித்த ஒன்று மேற்பட்ட திருமணங்களும் செல்லுபடியற்றதாகிவிடும்.
பொதுவாக சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்றால் ‘ எந்தவொரு சட்டமும் retrospective effect இருக்கின்றது என்று அதில் வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டால் அது ‘prospective’ யே ஆகும்.
(இதன்பின் இலகு புரிதலுக்காக prospective ஐ முன்னோக்கிய செயற்படுதன்மை என்றும் retrospective ஐ பின்னோக்கிய செயற்படுதன்மை என்றும் குறிப்பிடப்படும்.)
அதேநேரம் கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக ஆக்கப்படும் சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வெளிப்படையாகவும் வழங்குவதை அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்திருக்கின்றது.
ஏனைய சட்டங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் விரும்பினால் பின்னோக்கிய செயற்படுதன்மையை அதற்கு வெளிப்படையாக வழங்கலாம். அவ்வாறு குறிப்பிடாவிட்டால் அதற்கு ‘பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை என்றும் முன்னோக்கிய செயற்படுதன்மை’ மாத்திரமே இருக்கின்றது; என்பதும் பொருளாகும்.
நன்றி
வை. எல் .எஸ். ஹமீட்






0 comments:
Post a Comment